Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

புகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காட்டுத் தீயால் உருவாகும் புகை

புகை (Smoke) என்பது எரிக்கப்படும் எரிபொருள் முழுமையாக எரியாததன் விளைவாக ஏற்படுவதாகும். எரிபொருள் முழுமையும் எரிந்தால் புகை ஏதும் வெளிப்படாது. பெரும்பாலான எரிபொருள்கள் கரியம் எனப்படும் கார்பன், நீர், வாயுவாகிய ஹைட்ரஜன், உயிர்வளியாகிய ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜன் ஆகியவற்றையும் சிறிதளவு கந்தகம் ஆகியவற்றையும் கொண்டிருக்கும். சில கனிமங்களின் சாம்பலும் கலந்திருக்கும். இந்த எரிபொருட்கள் முழுமையாக எரிந்து முடித்தால் இறுதி விளைவாக கரியமில வாயு, நீராவி, நைட்ரஜன் ஆகியவை எஞ்சும். இவை தீங்கற்றவைகளாகும். எரிபொருளில் கந்தகமிருந்தால் கந்தக டை ஆக்ஸைடு சிறிதளவு வெளிப்படும். இது காற்றோடு அல்லது ஈரத்தோடு சேரும்போது அரிமான அமிலமாக(Corrosive acid)மாறும். முழுமையாக எரியும்போது எரிபொருளானது உயர் வெப்பத்தில் ஆக்சிகரணத்துக்காக போதிய அளவு காற்றை எடுத்துக் கொள்ளும். இந்நிலைமை கெட்டித்தன்மையுள்ள எரிபொருட்களுக்குச் சரியாக அமையாது. இதனால் அவை புகையை வெளிப்படுத்துகின்றன.

புகைபடிதல்[தொகு]

சிலக்கீல், சத்தற்ற நிலக்கரி (Anthracite), கல்கரி போன்றவை எரிக்கப்படும்போது அவற்றிலிருந்து புகை வெளிவருவதில்லை. ஏனெனில், எளிதில் ஆவியாகும் பொருள் எதுவும் அவற்றில் இல்லாததேயாகும். நீலக்கீல் (Bituminous coal) கரி குறைந்த வெப்பநிலையில் எரியும்போது உள்ளடங்கியுள்ள காற்றானது வெளிப்படுகிறது. இதில் கலந்துள்ள தூசியும் சாம்பலும் புகையை உருவாக்குகின்றன. இதில் உள்ள தூசியும் சாம்பலும் நிலத்திலும் பிற பரப்பிடங்களிலும் அப்படியே படிகின்றன. சாதாரணமாக ஒரு சதுர கிலோ மீட்டருக்கு ஒரு ஆண்டுக்கு 60 முதல் 75 டன்கள் வரை புகை படிகிறது. அதுவே தொழிற்சாலைப் பகுதியாயிருந்தால் இதைவிட பத்து மடங்கு அதிகமாகப் படியும்.

தீங்குகள்[தொகு]

ரஷ்யாவின் மாஸ்கோ நகர விமான நிலையமொன்றில் புகை பரவியதால் காட்சிகள் தெளிவாகத் கண்ணுக்குத் தெரியாத நிலை (Sheremetyevo airport (Moscow, Russia)) 7 ஆகஸ்ட் 2010.

'புகை' பலவிதமான தீங்குகளைத் தோற்றுவிக்கின்றன. இது உடல் நலனைப் பாதிப்பதோடு கட்டிடங்கள் போன்ற சொத்துக்களையும் பயிர்வகைகளையும் பாதிக்கும். தொழிற்சாலை நிறைந்த பகுதிகளாக இருப்பின் சூரிய ஒளியின் அடர்த்தியைக் குறைக்கிறது. குறிப்பாக உடல் நலனுக்கு இன்றியமையாப் புற ஊதாக்கதிர் (Ultra violet)களின் அடர்த்தியைக் குறைத்து தீங்கிழைக்கிறது. இவற்றைக் காற்று சிதறடிக்கிறது. தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகையைக் காற்று சிதறடிக்காமல் இருப்பின் தொழிற்சாலை நகரம் நாளெல்லாம் புகை மூட்டத்திலேயே இருக்க வேண்டியிருக்கும். உண்மையில் மூட்டமுள்ள பகுதியில் நுரையீரல், இதய நோய்களால் இறப்போரின் எண்ணிக்கை மிக அதிகமாகவே இருக்கும்.

வாகனங்களிலிருந்து வெளிப்படும் வடிகட்டப்படாத புகை

தாவரங்களைப் பொருத்தவரையில் புகை மிகப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தாவரங்களை சுவாசிக்க விடாமல் புகை தடுக்கிறது. தேவையான அளவு சூரிய ஒளி க்கதிர்களைப் பெற முடியாதபடி தாவரங்களின் மேற்பரப்பை புகைப் பொருட்கள் மூடிவிடுகின்றன. இதனால் அவற்றின் ஒளிச்சேர்க்கை பாதிப்படைகிறது. அவ்வப்போது புகைகளிலிருந்து வெளிப்படும் அமிலம் தாவரங்களை நேரடியாகவே அழிக்கவும் செய்கிறது.

தடுக்கும் முறைகள்[தொகு]

இத்தகைய பாதிப்புகள் நேராவண்ணம் தடுக்க தற்காலத்தில் புகை உறிஞ்சிக் கருவிகளைக் கண்டறிந்து அவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர்.

உசாத்துணை[தொகு]

  • இளையர் அறிவியல் களஞ்சியம், மணவை பப்ளிகேஷன் வெளியீடு. -1995
"https://ta.wikipedia.org/w/index.php?title=புகை&oldid=3605287" இலிருந்து மீள்விக்கப்பட்டது