பூமியில் தேனீக்களே இல்லாவிட்டால் மனித இனம் என்ன ஆகும் தெரியுமா?

தேனீக்கள் தினம்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், சிராஜ்
  • பதவி, பிபிசி தமிழ்

“உலகில் தேனீக்கள் அழிந்துவிட்டால், அடுத்த நான்கு ஆண்டுகளில் மனித இனம் அழிந்துவிடும்”, தேனீக்கள் குறித்து ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூறியதாகச் சொல்லப்படும் ஒரு பிரபலமான கூற்று. ஐன்ஸ்டைன் இதைக் கூறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும்கூட, தேனீக்கள் இல்லையென்றால் உலகின் உணவு உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்படும் என்பது மறுக்க முடியாத உண்மை.

சர்வதேச அளவில் உணவு உற்பத்தியை அதிகரிப்பது, ஊட்டச்சத்தை மேம்படுத்துவது மற்றும் பட்டினியை எதிர்த்துப் போராடுவது ஆகியவற்றில் தேனீ வளர்ப்பு மற்றும் தேனீக்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் விதத்தில், 2018 முதல் ஒவ்வோர் மே 20ஆம் தேதி உலக தேனீக்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

காலநிலை மாற்றம், காடுகளின் அழிப்பு, குறிப்பிட்ட ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு, காற்று மாசு போன்ற காரணங்களால் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் தேனீக்கள், பட்டாம்பூச்சிகள், வெளவால்கள் மற்றும் ஓசனிச்சிட்டுகள் (Hummingbirds) போன்ற மகரந்தச் சேர்க்கையாளர்கள் மனித நடவடிக்கைகளால் அதிகளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாகவும் ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு கூறுகிறது.

உலக உணவு உற்பத்தியில் தேனீக்களின் பங்கு என்ன? தேனீக்கள் இல்லையென்றால் என்னவாகும்?

தேனீக்களை சார்ந்துள்ள உணவு உற்பத்தி

உலக தேனீக்கள் தினம்

பட மூலாதாரம், Getty Images

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் அறிக்கையின்படி, உலகின் மொத்த விவசாய நிலத்தில் 35 சதவீத நிலங்கள், அதாவது மனிதர்களின் உணவுப்பொருள் உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதி தேனீக்கள் போன்ற மகரந்தச் சேர்க்கையாளர்களை நம்பியே உள்ளது.

மகரந்தத் தூள் ஒரு தாவரத்தில் இருந்து மற்றொன்றிற்கு கடத்தப்படும் போது மகரந்தச் சேர்க்கை நடக்கும். இதனால் தாவரங்கள் பல்கிப் பெருகும். 80% மகரந்தச் சேர்க்கைக்கு தேனீ, பட்டாம்பூச்சி போன்ற உயிரினங்களே காரணம் என்கிறது ஐ.நா. அறிக்கை.

தேன் சேகரிக்கும் போது தேனீக்களின் காலில் ஒட்டிக்கொள்ளும் பூக்களின் மகரந்த தூள், அடுத்தடுத்த பூக்களின் மேல் அவை உட்காரும்போது பரவும்.

இதுதான் காடுகளின், சோலைகளின் பரவலுக்கு முக்கிய காரணம். பூக்களில் உள்ள மகரந்தத்தை வெவ்வேறு பூக்களுக்குக் கடத்துவதன் மூலமாக, தேனீக்கள் தாவரங்களுக்கு மிகப்பெரிய உதவியைச் செய்கின்றன என்றே சொல்லலாம்.

"தேனீக்கள் இல்லையென்றால் காய்கறிகள், எண்ணெய் உற்பத்திக்கான பயிர்கள் மட்டுமல்லாது பாதாம், வால்நட்டுகள், காபி, கோகோ பீன்கள், தக்காளி, ஆப்பிள் போன்ற பல பயிர்களில் மகரந்தச் சேர்க்கைகள் பாதிக்கப்படும். இது மனித உணவில் ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு வழிவகுக்கும்," என்றும் ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனவே தேன் உற்பத்திக்கு மட்டுமல்லாது, உலகளவிலான உணவு உற்பத்திக்கும் தேனீக்கள் இன்றியமையாததாக உள்ளன.

தேனீக்களின் முக்கியத்துவம்

உலக தேனீக்கள் தினம்

பட மூலாதாரம், Getty Images

“தேனீக்கள் மட்டுமல்லாது பல பூச்சிகளையும்கூட மனிதர்கள் ஓர் உயிராகவே மதிப்பதில்லை. தேனீக்கள் என்பவை தேன் கொடுக்க மட்டும்தான் இந்த உலகத்தில் உள்ளன என்றுதானே பெரும்பாலானோர் நினைக்கிறார்கள்” என்று கூறுகிறார் கட்டுரையாளரும் காட்டுயிர் ஒளிப்படக் கலைஞருமான ஏ.சண்முகானந்தம்.

“இந்த உலகம் பூச்சிகளால் சூழப்பட்டது. இன்னும் பல வகையான பூச்சி வகைகள் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளன. பூச்சிகளில் முக்கியமானவை தேனீக்கள். அவற்றிலிருந்து பெறப்படும் தேனைக்கூட ஒரு இனிப்பூட்டியாகத்தான் மக்கள் பார்க்கிறார்கள். அதில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி தனியாகப் பேசலாம்."

"ஆனால் தேனீக்கள் செய்யும் மகரந்தச் சேர்க்கைக்காக மனிதர்கள் அதைக் கண்டிப்பாகப் பாதுகாக்க வேண்டும். உலகின் மிகச்சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர் இந்த தேனீக்கள்தான். தேனீக்களின் மகரந்தச் சேர்க்கை இல்லையென்றால், தாவர இனப்பெருக்கம் கடுமையாக பாதிக்கப்படும். பின்னர் உணவு உற்பத்தி குறைந்து, மனித அழிவின் தொடக்கமாக அது இருக்கும்” என்கிறார் சண்முகானந்தம்.

பூக்களின் மகரந்தம் மற்றும் மதுரம் ஆகிய இரண்டும்தான் தேனீக்களின் உணவு என்றும், அப்போதைய பசிக்கு அதை அவை உணவாக எடுத்துக் கொள்ளும் என்றும் கூறுகிறார் சண்முகானந்தம்.

“குளிர் காலங்கள் மற்றும் பூ பூக்காத காலங்களில் உணவுத் தட்டுப்பாட்டைச் சமாளிக்கத்தான் தேனீக்கள் தேனைச் சேகரிக்கின்றன. பூக்கள் இருக்கும் இடத்தை அல்லது தேன் இருக்கும் திசையைத் தனது நடனத்தின் மூலம் அவை தெரியப்படுத்தும்.

உதாரணமாக தேனீக்கள் உயரப் பறந்து வாலை ஆட்டினால், சூரியன் இருக்கும் அதே திசையில் உணவு உள்ளது என்றும், கீழே பறந்து வாலை ஆட்டினால், சூரியனுக்கு நேரெதிர் திசையில் உணவு உள்ளது என்றும் அர்த்தம்” என்று கூறினார்.

தேனீக்களின் இந்த நடனம் குறித்து முதலில் ஆய்வு செய்து அதை விளக்கியவர் விலங்கின நடத்தையியல் நிபுணர் கார்ல் வான் ஃப்ரிஷ். பூச்சிகள் குறித்த ஆராய்ச்சிகளுக்காக இவருக்கு 1973இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

உலக தேனீக்கள் தினம்
படக்குறிப்பு, கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் ஏ.சண்முகானந்தம்.

தொடர்ந்து பேசிய சண்முகானந்தம், “அதிக நறுமணமுள்ள, அழகான மல்லிகை, ரோஜா போன்ற பூக்களைத் தேடி தேனீக்கள் போவதில்லை. மாமரத்தின் பூக்கள், சூரிய காந்தி, எள், முருங்கை, குறிஞ்சி போன்றவற்றைத் தேடி தான் தேனீக்கள் அதிகம் செல்லும். எந்தப் பருவத்தில் எந்தப் பூக்கள் பூக்கும் என்பதையும் அவை அறிந்து வைத்திருக்கும்.

அதேபோல முகரும் திறன் கொண்டே பூக்கள் அல்லது உணவு எங்கு இருக்கிறது என்பதையும் அவை தெரிந்துகொள்ளும். தனித்துவமான பூக்களைக் கண்டறிந்து அவற்றிலிருந்து மட்டுமே தேன் எடுப்பது, அதைத் தனியாக சேகரிப்பது, தேர்ந்த பொறியியல் அறிவுடன் கூட்டைக் கட்டுவது என மிகவும் நுட்பமான உயிரினங்கள் இந்த தேனீக்கள்.

ஆனால் மனிதர்கள் இந்த தேனீக்களை மிகவும் சாதாரணமான பூச்சிகளாகப் பார்க்கிறார்கள். அதற்கு கொடுக்கு மட்டும் இல்லையென்றால் எளிதாக அவற்றை அழிக்கவும் தயாராகவே இருக்கிறார்கள்” என்று கூறுகிறார்.

தேனீக்களுக்கு ஏற்படும் ஆபத்துகள்

உலக தேனீக்கள் தினம்

பட மூலாதாரம், Getty Images

எந்தெந்த வழிகளில் மனிதர்களால் தேனீக்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது என்பதை பட்டியலிட்டு விளக்கினார் முனைவர் பிரியதர்ஷனன் தர்ம ராஜன். இவர் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக்கான அசோகா அறக்கட்டளையின் மூத்த நிபுணர்.

பெங்களூரில் உள்ள அசோகா அறக்கட்டளை, பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சி குறித்த ஆய்வுகளில் ஈடுபடுகிறது.

காலநிலை மாற்றம்

“காலநிலை மாற்றம் ஒரு முக்கியமான பிரச்னை. காலநிலை மாற்றத்தால் பூமியின் வெப்பம் அதிகரிப்பதால் தேனீக்களின் வளர்சிதை மாற்ற விகிதமும் (Metabolic rate) அதிகரிக்கும். இதனால் வழக்கத்தை விட அதிக சக்தியை உணவைச் சேகரிப்பதில் தேனீக்கள் செலவழிக்க வேண்டியிருக்கும்.

தேனீக்கள் தாங்கள் சேகரிக்கும் தேனை தேனடையில் கொட்டிவிட்டு, அதன் நீர்த்தன்மை வற்றிப் போவதற்காக தனது இறகைத் தொடர்ந்து ஆட்டிக் கொண்டிருக்கும். தேன் கூட்டின் வெப்பநிலையை சமநிலையில் வைக்கவும் அவை இதைச் செய்யும். கூட்டில் வெப்பம் அதிகரிக்கும் போது அவை வாழ முடியாத சூழல் ஏற்படும்.

மேலும் காலநிலை மாற்றத்தால் பூக்கள் விளைச்சலும் பாதிக்கப்படுகிறது. உதாரணமாக வசந்த காலத்தின் பூக்கள் முன்னதாகவே பூத்து விடும்போது, தேனீக்கள் அதைத் தவறவிடும். பின்னர் வசந்த காலத்தில் உணவின்றி மடிந்துபோகும்” என்கிறார் முனைவர் பிரியதர்ஷனன்.

சூரியகாந்திச் செடியின் மகரந்தச் சேர்க்கையில் தேனீக்களின் பங்கு அதிகம். சூரியகாந்தி பூக்கும் தருவாயில் மகரந்த சேர்க்கை தீவிரமாக நடைபெற்றால் அதிக மகசூல் கிடைக்கும்.

கடந்தாண்டு தென்காசி மாவட்டத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில், சூரியகாந்தி பயிரிடப்பட்டது. ஆனால் தேனீக்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டதால், தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக செயற்கை முறை மகரந்த சேர்க்கையின் இரண்டு முறைகள் விவசாயிகளுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டு, அது நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆனால் இத்தகைய செயற்கை மகரந்தச் சேர்க்கை முறைகள் போதுமான பலனைத் தராது, பயிர்களின் மகசூல், தரம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறையும் என்றும், பல்லுயிரிய சூழலியல் முறைமைக்கும் (Biodiversity) அது பெரிதாக பயனளிக்காது என்கிறார் முனைவர் பிரியதர்ஷனன்.

உலக தேனீக்கள் தினம்
படக்குறிப்பு, முனைவர் பிரியதர்ஷனன் தர்ம ராஜன்

பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு

“சில பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளின் பயன்பாடு தேனீக்களை நேரடியாக கொல்லலாம் அல்லது அவற்றைக் கடுமையாக பலவீனப்படுத்தலாம். என்னைக் கேட்டால் தேனீக்களின் அழிவுக்கு அவைதான் முக்கிய காரணம் என்று சொல்வேன்” என்கிறார் முனைவர் பிரியதர்ஷனன்.

தேனீக்களின் வாழ்விடங்களில் மாற்றம்

“தேனீக்கள் விளைநிலங்களையும் பூக்களையும் தேடிச் செல்வது உணவுக்காகவும், மகரந்தச் சேர்க்கைக்காகவும் தான். விவசாய நிலங்கள் அழிக்கப்படும்போது அவை உணவின்றி அழிவைச் சந்திக்கின்றன.

தேனீக்களில் காட்டுத் தேனீ வகைகள் தான் அதிகம். சாதாரண தேனீக்களைப் போல அல்லாமல், காட்டுத் தேனீக்களுக்கு மிகப்பெரிய வாழ்விடம் தேவைப்படுகிறது. காடுகள், மரங்கள் அழிக்கப்படும்போது, அவை கூடுகள் கட்டும், உணவு சேகரிக்கும் பகுதிகளும் சேர்ந்தே அழிகின்றன.

வெளிநாடுகளில் தேனீக்களுக்கு என்றே நகரங்களில் கூட மகரந்தப் பாதைகள், பூங்காக்களை உருவாக்குகிறார்கள். அதேபோல இங்கும் கொண்டுவரப்பட வேண்டும். கிராமங்களில் இருக்கும் சிறு வனங்களைப் பாதுகாக்க வேண்டும்” என்று கூறினார் முனைவர் பிரியதர்ஷனன்.

'தேனீக்கள் சூழ் உலகு'

உலக தேனீக்கள் தினம்

பட மூலாதாரம், Getty Images

தேனீக்களின் எண்ணிக்கை குறைந்தால் அதனால் முதலில் நேரடியாகப் பாதிக்கப்படுவது மனிதர்கள் தான் என எச்சரிக்கிறார் கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் ஏ.சண்முகானந்தம்.

“இந்த உலகில் மனிதர்கள் தோன்றுவதற்குப் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பாகவே பரிணமித்து வாழ்ந்து வருபவை பூச்சிகள். இதை மனித இனம் உணர்ந்துகொண்டு, இயற்கையோடு இயைந்த வாழ்வை மேற்கொள்ளும்போது தான் ‘நீடித்த நிலையான வளர்ச்சி’ சாத்தியப்படும்.

பூச்சிகள் மற்றும் தேனீக்கள் சூழ் உலகை உருவாக்க நம்மைச் சுற்றியுள்ள காடுகள், மரங்கள், தாவரங்கள் அடங்கிய பசுமை பரப்பை அழிக்காமல் பாதுகாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். அதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும்” என்று கூறுகிறார் அவர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)