சென்னை - விளாடிவோஸ்டாக்: இந்தியாவில் இருந்து முதல் நேரடி சர்வதேச கடல் பாதை - தமிழ்நாட்டிற்கு என்ன பலன்?

சென்னை - விளாடிவோஸ்டாக் கடல்வழித் தடம்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், சிவகுமார் இராஜகுலம்
  • பதவி, பிபிசி தமிழ்

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் ரஷ்யப் பயணத்தில் விவாதிக்கப்படும் விஷயங்களில் ஒன்று சென்னை - விளாடிவோஸ்டாக் கடல்வழித்தடம். 2019-ம் ஆண்டு முன்மொழியப்பட்ட இந்த திட்டத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்வது குறித்து இந்தியாவும் ரஷ்யாவும் ஆலோசித்துள்ளன.

டிரான்ஸ் சைபீரியன் இருப்புப்பாதை என்ற உலகின் மிக நீளமான இருப்புப் பாதை மாஸ்கோ - விளாடிவோஸ்டாக் இடையிலானது என்கிற அளவில் மட்டுமே அதிக அளவில் அறியப்பட்ட நகரம் அது. தற்போது சென்னை - விளாடிவோஸ்டாக் இடையிலான கடல்வழித்தடம் மூலமாக இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் விளாடிவோஸ்டாக் மீண்டும் பேசப்படும் ஒன்றாக மாறியுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் சென்னை - விளாடிவோஸ்டாக் திட்டத்தில் என்ன இருக்கிறது? அது நடைமுறைக்கு வரும் போது இந்தியாவும் ரஷ்யாவும் எவ்வாறு பரஸ்பரம் பலனடையும்? குறிப்பாக, சென்னை பிராந்தியம் பொருளாதார ரீதியாக எந்த அளவுக்கு பலனடையும்? இந்தியா - ரஷ்யா இடையிலான இந்த புதிய கடல்வழித் தடத்தின் புவிசார் அரசியல் முக்கியத்துவம் என்ன?

சென்னை - விளாடிவோஸ்டாக் கடல்வழித் தடம்

பிரதமர் மோதி 2019-ம் ஆண்டு மேற்கொண்ட ரஷ்யப் பயணத்தின் போது சென்னை - விளாடிவோஸ்டாக் கடல்வழித் திட்டம் முன்மொழியப்பட்டது. 5,647 கடல்மைல் அதாவது சுமார் 10,500 கி.மீ. தொலைவு கொண்ட இந்த கடல்வழித் தடம் இந்தியாவின் சென்னை மற்றும் ரஷ்யாவின் தூர கிழக்கில் பசிபிக் பெருங்கடலில் உள்ள விளாடிவோஸ்டாக் ஆகிய இரு துறைமுகங்களையும் இணைக்கும்.

இந்திய துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்தடங்கள் துறை இதுகுறித்த விவரங்களை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

சென்னை - விளாடிவோஸ்டாக் கடல்வழித் தடம்

பட மூலாதாரம், X/Ministry of Ports, Shipping and Waterways

"இந்தியா - ரஷ்யா இடையே தற்போதுள்ள வர்த்தக வழித்தடம் மும்பை - ரஷ்யாவின் மேற்கில் உள்ள பால்டிக் துறைமுகமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் இடையிலான கடல்வழித்தடம் ஆகும்.

செங்கடல், மத்திய தரைக்கடல், வடகடல் வழியேயான இந்த மும்பை - செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வழித்தடம் 8,675 கடல் மைல் (16,000 கி.மீ.) தொலைவுடையது. இந்த வழியே பொருட்களை கொண்டு செல்ல சுமார் 40 நாட்களாகிறது.

சென்னை - விளாடிவோஸ்டாக் கடல்வழித்தடம் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில் கப்பல்கள் பயணிக்க வேண்டிய தூரம் சுமார் 5,400 கி.மீ. அளவுக்கு குறையும். இதனால், பொருட்களை 16 நாட்கள் முன்னதாகவே இருதரப்பிலும் உரிய இடத்திற்கு கொண்டு சேர்த்துவிடலாம் " என்று அந்த தகவல் கூறுகிறது.

"இந்த புதிய கடல்வழித் தடம் இந்தியா - ரஷ்யா இடையே மட்டுமின்றி வேறு பல வழிகளிலும் வர்த்தகத்திற்கான புதிய வாய்ப்புகளைத் திறந்துவிடும். சென்னை துறைமுகத்தில் இருந்து சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம், மலேஷியா, இந்தோனேஷியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு வர்த்தகமும், தொழில் வாய்ப்புகளும் பெருகும்" என்று இந்திய துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்தடங்கள் துறை தெரிவித்துள்ளது.

ஜெய்சங்கரின் ரஷ்யப் பயணத்தில் என்ன நடந்தது?

இந்தியா - ரஷ்ய தலைவர்கள் அதாவது அதிபர் - பிரதமர் இடையிலான வருடாந்திர உச்சிமாநாடு 2 ஆண்டுகளாக நடக்காத சூழலில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் ரஷ்யப் பயணம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றானது. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மரபுகளை விட்டு, அமைச்சர் மட்டத்தில் இருக்கும் ஜெய்சங்கரை சந்தித்தார். அப்போது ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெ லாவ்ரோவ், அந்நாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் டெனிஸ் மான்டுரோவ் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்திய பிரதமர் மோதி அளித்த கடிதத்தை புதினிடம் ஜெய்சங்கர் அளித்தார். அத்துடன்"ரஷ்யாவுக்கு அடுத்த ஆண்டு அரசு முறைப் பயணமாக வர முடியும் என்று மோதி நம்புகிறார். இரு நாடுகளுக்கு இடையிலான அடுத்தக்கட்ட சந்திப்புகளில் மோதியின் ரஷ்யப் பயணம் எப்போது என்பதை முடிவு செய்யலாம்." என்று அவர் கூறியுள்ளார்.

ரஷ்யாவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறும் வேளையில், இந்தியாவும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை - விளாடிவோஸ்டாக் கடல்வழித் தடம்

பட மூலாதாரம், X/Jaishankar

ஜெய்சங்கரின் ரஷ்யப் பயணத்தின் போது, கூடங்குளத்தில் மேலும் 2 அணுஉலைகளை அமைக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கூடங்குளத்தில் 1000 மெகாவாட் திறன் கொண்ட 2 அணுஉலைகள் ஏற்கனவே இயங்கும் நிலையில், மேலும் 4 அணுஉலைகளை 2027-ம் ஆண்டுக்குள் செயல்பாட்டிற்கு கொண்டு வரும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன. புதிய ஒப்பந்தத்தின்படி, 7 மற்றும் 8-வது அணுஉலைகளும் கூடங்குளத்தில் அமையும்.

இதேபோல், சென்னை - விளாடிவோஸ்டாக் கடல்வழித் தடம் திட்டத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. சர்வதேச வடக்கு - தெற்கு போக்குவரத்து வழித்தடம் என்கிற இந்த திட்டத்தால் இருநாடுகளுக்குமான நன்மைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

புதிய வழித்தடத்தால் சென்னைக்கு என்ன நன்மை?

இந்தியா - ரஷ்யா இரு நாடுகளும் சென்னை - விளாடிவோஸ்டாக் கடல்வழித் தடத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் ஆர்வம் காட்டியதை ஜெய்சங்கரின் ரஷ்யப் பயணம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வழித்தடம் அமைவதால் இந்தியாவுக்கு குறிப்பாக சென்னைக்கு என்ன நன்மை? என்று பொருளாதார நிபுணர் சோம.வள்ளியப்பனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.

அவர் கூறுகையில், "இந்த திட்டம் இன்னும் பேச்சுவார்த்தை அளவில்தான் உள்ளது. செயல்பாட்டிற்கு வர இருநாட்டு அரசியல் சூழலும் சாதகமாக அமைய வேண்டும். அடுத்த ஆண்டு நடக்கும் பொதுத் தேர்தலில் இரு நாடுகளிலும் இதே தலைவர்கள் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த திட்டம் அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறுவதில் சிக்கல் இருக்காது.

ஐரோப்பாவிற்கு வெளியே எரிபொருள் விற்பனைக்கு புதிய வாடிக்கையாளர்களைத் தேடும் ரஷ்யாவும், எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யவும், தொழில், வர்த்தகத்திற்கும் புதிய கூட்டாளிகைளைத் தேடும் இந்தியாவும் இதன் மூலம் பரஸ்பரம் பலன் பெற முடியும். இந்த வழித்தடத்தின் மூலம் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய், நிலக்கரி, எல்.பி.ஜி. எரிவாயு மற்றும் தொழில்துறைக்குத் தேவையான கச்சாப் பொருட்களை ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய முடியும்.

சென்னை - விளாடிவோஸ்டாக் கடல்வழித் தடம்
படக்குறிப்பு, சோம.வள்ளியப்பன், பொருளாதார நிபுணர்

அதேநேரம், இந்தியாவில் இருந்து கட்டுமானப் பொருட்கள், பார்மாசூட்டிகல் தயாரிப்புகள், தொழில்துறை உற்பத்திப் பொருட்கள் போன்றவற்றை ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்க முடியும். இந்த சரக்கு போக்குவரத்தில் சென்னை பிரதான இடம் பிடிப்பதால், இங்கே தொழில்துறை வளர்ச்சி துரிதமாகும் என்பதுடன் புதிய தொழில் வாய்ப்புகளும் உருவாகும். இதனால், இயல்பாகவே வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். தூரமும் நேரமும் குறைவதால் பொருட்களை இடம் மாற்றுவதற்கான செலவும் குறையும் என்பதால் உற்பத்திப் பொருட்களின் விலையும் குறைய வாய்ப்புள்ளது." என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், சென்னையில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம், தாய்லாந்து, சீனா போன்ற நாடுகளுடன் சரக்கு போக்குவரத்து அதிகரிக்கும். தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு மட்டுமின்றி, நிலத்தால் சூழப்பட்ட மங்கோலியாவுக்கு கூட சென்னையில் இருந்து சரக்குகளை அனுப்ப முடியும். இதனால், இந்தியாவில் மும்பையைப் போல சென்னையும் வலுவான பொருளாதார மையமாக உருவெடுக்கும். சென்னை மாநகரம் பலதரப்பட்ட தொழில்களைக் கொண்டதாக மாறும்" என்று தெரிவித்தார்.

புவிசார் அரசியலில் முக்கியத்துவம் என்ன?

இந்தியப் பெருங்கடலில் அண்மைக் காலமாக சீனாவின் வர்த்தக நடவடிக்கைகள் அதிகரித்துவிட்டன. வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை எடுத்துச் செல்லவும், உற்பத்திப் பொருட்களை ஆசிய, ஆப்ரிக்க நாடுகளுக்கு சந்தைப்படுத்தவும் இந்தியப் பெருங்கடலை சீனா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறது. அதற்காக, முத்துமாலை என்ற பெயரில் இலங்கையின் ஹம்பாந்தோட்டா உள்பட இந்தியப் பெருங்கடலில் உள்ள நாடுகளில் துறைமுகங்களை சீனா அமைத்துள்ளது.

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் நடமாட்டம் அதிகரித்து வருவது இந்தியாவுக்கு கவலை தரும் ஒன்றாக மாறியுள்ளது. இந்த நேரத்தில், சீனா தனது அண்டை நாடுகளுடன் மோதிக் கொள்ளும் தென் சீனக் கடல் வழியேயான சென்னை - விளாடிவோஸ்டாக் கடல் வழித் தடம் புவிசார் அரசியல் ரீதியிலும் மிகுந்து முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியப் பெருங்கடலில் இந்தியா - சீனா இடையிலான போட்டியில் இந்த புதிய கடல்வழித்தடத்தின் முக்கியத்துவம் குறித்து லயோலா கல்லூரி பேராசிரியர் கிளாட்சன் சேவியரிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.

"இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் அண்டை நாடுகளை வளைக்கும் சீனாவின் முத்துமாலை திட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த திட்டம் அமையும் என்பதில் சந்தேகமில்லை. இது செயல்பாட்டிற்கு வரும் போது சென்னை - விளாடிவோஸ்டாக் இடையே 10,600 கி.மீ. கடல்வழி நெடுகிலும் இந்தியாவின் இருப்பு உறுதி செய்யப்படும். இதன் மூலம் தென் சீனக் கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் நடவடிக்கை அதிகரிக்கும். அது சீனாவுக்கு சவால் தரக் கூடிய ஒன்றுதான்.

சென்னை - விளாடிவோஸ்டாக் கடல்வழித் தடம்
படக்குறிப்பு, கிளாட்சன் சேவியர், பேராசிரியர், லயோலா கல்லூரி

அதுமட்டுமின்றி, சர்வதேச கடல்வழி வர்த்தகத்தில் இந்தியாவுக்கும், குறிப்பாக சென்னைக்கும் முக்கிய இடம் கிடைக்கும். தற்போதைய நிலையில் சர்வதேச கடல்வழியில் எந்தவொரு இந்திய துறைமுகம் இடம்பெறவில்லை. சிங்கப்பூர் அந்த விஷயத்தில்தான் சாதித்து, துறைமுகத்தின் வெற்றி வாயிலாகவே பெருநகரையும், அதன் வாயிலாக ஒரு நாட்டையுமே வெற்றிகரமாக கட்டியெழுப்பியது. காரணம் சர்வதேச கடல்வழிப் போக்குவரத்தில் சிங்கப்பூர் மிக முக்கியமான இடத்தில் இருக்கிறது. பல நாட்டு பொருட்கள் சிங்கப்பூர் துறைமுகத்திற்கு பெரிய கப்பல்களில் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து சிறிய கப்பல்கள் மூலம் மற்ற இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதியும் கூட குறிப்பிடத்தக்க அளவு சிங்கப்பூர் வழியாகவே நடக்கிறது. தற்போது கொழும்பு துறைமுகமும் அதனை முன்மாதிரியாகக் கொண்டு வளர முயற்சிக்கிறது.

இந்த சூழலில்தான், இந்தியாவில் இருந்து சர்வதேச கடல்வழி போக்குவரத்தை நேரடியாக தொடங்கும் திட்டம் உதித்துள்ளது. இது சர்வதேச சரக்கு போக்குவரத்தில் சென்னையும் முக்கிய இடத்தைப் பிடிக்க வகை செய்யும். இது சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கும் உதவும்" என்று அவர் கூறினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)