பண்டைய காலத்தில் பெண்கள் பாலுறவை எப்படிப் பார்த்தனர்?

பண்டைய காலத்தில் பெண்கள் மத்தியில் `பாலுறவு’ எப்படி பார்க்கப்பட்டது?

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், டெய்சி டன்
  • பதவி, எழுத்தாளர்

ஒரு புதிய புத்தகம், பெண்களை அடிப்படையாக வைத்து பண்டைய உலகத்தின் வரலாற்றை விவரிக்கிறது. எழுத்தாளர் டெய்சி டன் (Daisy Dunn), பெண்கள் பாலுறவைப் பற்றி என்ன நினைத்தார்கள் என்று ஆராய்கிறார், பெண் வெறுப்பு கொண்ட ஆண் 'ஸ்டீரியோடைப்' எண்ணங்களை முற்றிலும் தவறு என்கிறார்.

கி.மு. 7-ஆம் நூற்றாண்டு காலக்கட்டத்தில், கிரேக்கத்தில், பெண்கள் பொது இடங்களில் முக்காடு போட்டிருந்ததாக கூறப்படுகிறது, ரோம் நகரில், அவர்களின் செயல்பாடுகள் மற்றும் சொத்துக்களைக் கையாள்வதை மேற்பார்வையிட 'பாதுகாவலர்கள்' (பொதுவாக அவர்களின் தந்தை அல்லது கணவர்) இருந்தனர்.

ஆனால் 'காம விருப்பமுள்ள பெண்' என்ற கருத்து ஆண்களின் கற்பனையா? அல்லது பொதுவான நம்பிக்கைகளை காட்டிலும் பண்டைய உலகின் பெண்கள் பாலுறவில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்களா?

என் புதிய புத்தகமான 'தி மிஸ்ஸிங் த்ரெட்' (The Missing Thread), பெண்கள் மூலம் எழுதப்பட்ட பண்டைய உலகின் முதல் வரலாற்று புத்தகம். பாலியல் உணர்வு பற்றி பெண்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள் என்பதை வெளிக்கொணர வேண்டுமானால் நாம் இந்த வரலாற்றை உற்று நோக்க வேண்டும்.

பெண்களில் பாலியல் உணர்வு பற்றி விவரிக்கும் பெரும்பாலான வரலாற்று ஆதாரங்கள் ஆண்களால் எழுதப்பட்டவை. எனவே அவை பெண்களின் பாலியல் தொடர்பான பழக்கவழக்கங்களை ஒரே மாதிரியான போக்கில் மிகைப்படுத்திக் கூறுகின்றன. சிலர் ஒரு பெண்ணின் நல்லொழுக்கத்தை விவரிக்கப் 'புனிதமான பெண்' என்கின்றனர். அவ்வாறு இல்லையெனில் 'மனிதாபிமானமற்றவர்’ என்று சொல்கிறார்கள். பெண்ணின் நற்பெயரை அழிக்க அவர்களை பாலியல் ஆசை கொண்டவர்களாக சித்தரிக்கின்றனர்.

இந்த விளக்கங்களை முன்வைத்து ஆய்வு செய்தால், பண்டைய உலகில் பெண்கள் அனைவரும் ஒன்று 'பதிவிரதையாக' (chaste) இருக்கிறார்கள் அல்லது பாலியல் ஒழுக்கமற்றவர்களாக இருக்கிறார்கள் என்ற முடிவைக் கொடுக்கிறது. அதிர்ஷ்டவசமாக, சில உன்னதமானபண்டைய காலப் பெண்களின் இதயங்களை நம்மால் இன்று உற்றுநோக்க முடியும். அவர்கள் பண்டைய காலப் பெண்களின் பாலுணர்வைப் பற்றிய ஆழமான பார்வையை வழங்குகிறார்கள்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய  இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பண்டைய காலத்தில் பெண்கள் மத்தியில் `பாலுறவு’ எப்படி பார்க்கப்பட்டது?

பட மூலாதாரம், Getty Images

இச்சையை வெளிப்படையாகப் பேசிய பெண் கவிஞர்

கி.மு 7 ஆம் நூற்றாண்டில் கிரேக்க தீவான லெஸ்போஸில் வாழ்ந்து அங்கு கவிதைகள் இயற்றிய பெண் கவிஞரான சாஃபோ (Sappho) ஒரு சிறந்த உதாரணம்.

ஆணுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணைக் குறிப்பிட்டு, சாஃபோ, அந்தப் பெண் அனுபவித்த தீவிர உடல் உணர்வுகளை ஆவணப்படுத்தி இருக்கிறார் — படபடக்கும் இதயம், தடுமாறும் வார்த்தைகள், நரம்புகள் வழியாக தீப் பரவுவது போன்ற உணர்வு, பார்வையை மறைக்கும் மயக்கம், ஒலிகள் கேட்பது, குளிர்ந்த வியர்வை, நடுக்கம், வெளிறிய முகம் — பாலியல் இச்சையை அனுபவித்த அனைவருக்கும் இந்த உணர்வுகள் தெரிந்திருந்திருக்கும்.

மற்றொரு கவிதையில், சாஃபோ ஒரு பெண்ணுக்கு மலர்களால் ஆன மாலை அணிவிப்பதை பற்றி விவரித்திருக்கிறார். ஒரு மென்மையான படுக்கையில், அந்தப் பெண் எப்படி 'தனது ஆசையைத் தணித்துக்கொள்வார்' என்பதை ஏக்கத்துடன் நினைவு கூர்கிறார். மோகத்தின் கட்டுப்படுத்த முடியாத தன்மையை உணர்ந்த ஒரு பெண்ணின் வாக்குமூலங்கள் இவை.

இன்று நமக்கு சாஃபோ-வின் கவிதைகள் முழுமையாகக் கிடைக்கவில்லை. சிதறிய வரிகள்தான் கிடைக்கின்றன. எனவே அவற்றைத் துல்லியமாக வாசிப்பது கடினம்.

பாலியல் இச்சையைத் தூண்டும் பொருட்கள்

ஆனால் அறிஞர்கள் பண்டைய காகித மடல் (papyri) ஒன்றில் 'டில்டோ' (dildo) என்ற பாலியல் உணர்வைத் தூண்டும் பொருள் தொடர்பான குறிப்பைக் கண்டறிந்துள்ளனர். இது கிரேக்க மொழியில் 'ஒலிஸ்போய்’ (olisboi) என்று அழைக்கப்படுகிறது.

இவை கிரேக்கத்தில் கருவுறுதல் சடங்குகளிலும், கேளிக்கைக்காகவும் பயன்படுத்தப்பட்டன, மேலும் அவை பல குவளைகளில் தீட்டப்பட்ட ஓவியங்களில் இடம்பெற்றுள்ளன. ரோம் நகரிலும் மக்கள், ஆணுறுப்பு வடிவிலான பொருட்கள் (phallic objects) அதிர்ஷ்டம் தரும் மந்திர தாயத்தின் (talisman) குணம் கொண்டவை என நம்பினர். நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்பப்படும் சின்னங்களைப் பார்த்துப் பண்டைய கால பெண்கள் வெட்கப்பட்டிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

இந்தக் காலக்கட்டம் வரை பழங்காலப் பெண்கள் சிற்றின்பத்தைப் பார்த்து நடுங்கி சிலிர்க்கவில்லை. பலர் அதனுடன் புதைக்கப்பட்டனர். ரோம் முக்கியத்துவம் பெறுவதற்கு முந்தைய காலகட்டத்தில், மிகவும் திறமை வாய்ந்த எட்ருஸ்கன்கள் (Etruscans) இத்தாலிய நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்தினர். அவர்கள் காதல் காட்சிகளை சித்திரமாகத் தீட்டி அந்த நிலப்பரப்பை நிரப்பினர். ஏராளமான கலைப் படைப்புகள் மற்றும் கல்லறை சிலைகள், ஆண்களும் பெண்களும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்திருப்பதைச் சித்தரிக்கின்றன.

கி.மு. 8-ஆம் நூற்றாண்டில் எட்ருஸ்கன் பெண்ணின் சடலத்துடன் அடக்கம் செய்யப்பட்ட ஒரு தூபம் போடும் கருவியில், ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரது பிறப்புறுப்பை மற்றவர் தொடும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது.

பண்டைய காலத்தில் பெண்கள் மத்தியில் `பாலுறவு’ எப்படி பார்க்கப்பட்டது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பண்டைய கிரேக்கக் கவிஞர் சாஃபோ, பெண்களின் இச்சைகளுக்கு சக்திவாய்ந்த ஒரு உணர்ச்சி வடிவத்தைக் கொடுத்தார்

பாலியல் தொழில் பற்றிய நம்பிக்கைகள்

அந்தக் காலகட்டத்தில் பாம்பேய் (Pompeii) நகரத்தில் இருந்தவை போன்ற பழங்கால விபச்சார விடுதிகளில் மட்டுமே பாலுறவு தொடர்பான சித்தரிப்புகள் அடிக்கடி காட்சியளிக்கிறது. சிறிய அறைகளில் பாலியல் தொழிலாளிகள் தங்கள் தொழிலை நடத்தினர். அதன் சுவர்கள் முழுவதும் சித்திரங்களால் நிரம்பி இருக்கும். ஆபாச வார்த்தைகளும் எழுதப்பட்டிருக்கும். அதில் பெரும்பகுதி ஆண் வாடிக்கையாளர்களால் எழுதப்பட்டவை, அவர்கள், அங்கு பாலியல் தொழில் செய்த பெண்களின் பெயரைக் குறிப்பிட்டு அவர்களது சேவையை பற்றி கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

இத்தகைய தொழிலாளர்கள் படும் இன்னல்கள் பற்றிய விளக்கங்களுடன் வரலாற்றுக் குறிப்புகள் மற்றும் உரைகள் ஏராளம் உள்ளன. கி.மு. 4-ஆம் நூற்றாண்டில், நீரா (Neaera) என்ற பெண்ணுக்கு எதிராக, ஏதென்ஸ் நகரின் அரசியல்வாதி அப்பல்லோடோரஸ் ஆற்றிய வழக்கு உரை, இந்தப் பெண்களின் வாழ்க்கையில் இருந்த நிலையற்ற, ஆபத்தான தன்மையைப் பிரதிபலிக்கிறது.

ஆச்சரியமாக எப்போதாவது, இந்த உலகத்துடன் தொடர்பில் இருக்கும் ஒரு பெண்ணிடமிருந்து, வார்த்தைகளையும் கேட்க முடிகிறது.

கி.மு. 3-ஆம் நூற்றாண்டில், இத்தாலியில் வசித்த நோசிஸ் என்ற பெண் கவிஞர் ஒரு கலைப்படைப்பைப் புகழ்ந்து கவிதை எழுதி இருந்தார். அந்தப் படைப்பு ஒரு பாலியல் தொழிலாளியால் நிதியளிக்கப்பட்டது. நோசிஸ் தனது கவிதையில், பாலியல் தொழிலாளி (Polyarchis) திரட்டிய பணத்தைப் பயன்படுத்தி ஒரு கோவிலில் காதல் மற்றும் பாலுறவின் தெய்வமாகக் கருதப்படும் அஃப்ரோடைட்டின் புகழ்பெற்ற சிலை நிறுவப்பட்டது.

பாலியார்கிஸ் என்பது ஒழுங்கின்மையை பற்றியது அல்ல. `டோரிச்சா’ (Doricha) என்றழைக்கப்பட்ட ஹெட்டேரா (உயர்நிலை பாலியல் தொழிலாளி) ஒருவர் தான் சம்பாதித்த பணத்தைப் பொதுமக்களுக்கு எதையாவது வாங்க பயன்படுத்தினார். டோரிச்சா, தான் சம்பாதித்த பணத்தில் எருதுகளை சமைக்கப் பயன்படுத்தும் ஸ்பிட்ஸ் (spits) உபகரணத்தை டெல்ஃபி நகரில் காட்சிக்கு வைத்தார்.

இந்தப் பெண்கள் தங்களின் பாலியல் தொழிலைப் பற்றி தவறாக நினைக்கக்கூடாது என்பதற்காக இதுபோன்ற செயல்களை செய்யவில்லை. மாறாக, அவர்கள் இறந்த பிறகு நினைவுகூரப்படுவதற்கான அரிய வாய்ப்பாக இதனைப் பார்த்தனர்.

பண்டைய காலத்தில் பெண்கள் மத்தியில் `பாலுறவு’ எப்படி பார்க்கப்பட்டது?

பட மூலாதாரம், Getty Images

ஆண் எழுத்தாளர்களின் கருத்துகள்

ஆண் எழுத்தாளர்கள், அவர்களது முன்முடிவுகளையும் தாண்டி, பெண்கள் மற்றும் பாலுறவு பற்றிய சில சுவாரஸ்யமான நுண்ணறிவுகளை நமக்கு வழங்குகின்றனர். கி.மு. 411-இல், நகைச்சுவை நாடக ஆசிரியர் அரிஸ்டோஃபேன்ஸ் (Aristophanes), லிசிஸ்ட்ராட்டா (Lysistrata) என்ற நாடகத்தை நடத்தினார். அதில் ஏதென்ஸ் நகரின் பெண்கள் பெலோபொன்னேசியன் போரின் போது சமாதான ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்ள வலியுறுத்தி தங்கள் கணவர்களை வற்புறுத்தும் முயற்சியில் 'பாலுறவுக்கு தடை விதித்ததாகச்' சித்தரிக்கப்பட்டது. பெலோபொன்னேசியன் போ ஏதென்ஸுக்கும் ஸ்பார்டாவுக்கும் இடையே முப்பது ஆண்டுகாலமாக நடந்த ஒரு உண்மையான மோதலாகும்.

இந்த நகைச்சுவை நாடகத்தில் நடித்த பெண்களில் பலருக்கு தங்கள் இன்பத்தை விட்டுக் கொடுப்பதில் விருப்பம் இல்லை. எவ்வாறாயினும், நாடகம் ஒருகட்டத்தில் தீவிரமான திசையில் திரும்பியது. அரிஸ்டோஃபேன்ஸ் மிகவும் உறுதியான பெண்களின் கண்ணோட்டத்தை வழங்குகிறார்.

கணவருடனான பாலுறவு கொள்ளாமல் போராட்டம் செய்யும் முதன்மை கதாபாத்திரமான லிசிஸ்ட்ராட்டா, போர்க்காலத்தில் பெண்களுக்கு அது உண்மையில் எப்படி இருக்கும் என்பதை விவரிக்கிறது. யுத்தம் பற்றி விவாதிக்கப்படும் பேரவையில் அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருப்பது மட்டுமல்ல, கணவரைப் பிரிந்து அவர்கள் மீண்டும் மீண்டும் துயரத்துக்கு ஆளாகின்றனர். திருமணமான பெண்களுக்கு இதுபோன்ற நீடித்த மோதல்கள் நரகமாக இருந்தாலும், திருமணமாகாத பெண்களுக்கு இது இன்னும் மோசமான சூழலை ஏற்படுத்தும், அவர்கள் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பை முற்றிலுமாக இழந்துவிடுவர்.

லிசிஸ்ட்ராட்டா சுட்டிக் காட்டுகையில், ஆண்கள் போரிலிருந்து நரைத்த முடியுடன் வீடு திரும்பினாலும் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் கன்னிப் பெண்களுக்கு இது பொருந்தாது, அவர்களில் பலர் திருமணம் செய்துகொள்ளப்படுவதற்கும், குழந்தை பெற்று கொள்வதற்கும் மிகவும் வயதானவர்களாகக் கருதப்படுவார்கள். இந்த வரிகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் போரின் அனுபவம் எவ்வளவு வித்தியாசமானதாக இருந்தது என்பதை மிகத் துல்லியமாக வெளிப்படுத்துகின்றன, அன்றைய பெண்களின் உணர்வுகள் எப்படி இருக்கும் என்பதை அவை பிரதிபலிக்கின்றன.

பண்டைய காலத்தில் பெண்கள் மத்தியில் `பாலுறவு’ எப்படி பார்க்கப்பட்டது?

பட மூலாதாரம், Getty Images

பண்டையகால பாலுறவுக் குறிப்புகள்

பெண்கள் சில சமயங்களில் இத்தகைய எண்ணங்களை மடல்களில் எழுதுகின்றனர். பித்தகோரஸ் உடன் தொடர்புடைய ஒரு கிரேக்கப் பெண்ணான தத்துவஞானி தியானோ (Theano - சிலர் இவரை அவரது மனைவி என்றும் கூறுகிறார்கள்), ஒரு கடிதத்தில், அவரது நண்பரான யூரிடைஸுக்கு சில முக்கியமான ஆலோசனைகளை வழங்குகிறார். அதில் "ஒரு பெண், தன் கணவருடன் படுக்கை அறைக்குள் நுழையும் போது ​​தன் ஆடைகளுடன் சேர்ந்து தன் வெட்கத்தையும் தூக்கி எறிய வேண்டும்,” என்று எழுதியிருக்கிறார். படுக்கையில் இருந்து எழுந்தது மீண்டும் இரண்டையும் சேர்த்து அணிந்து கொள்ளலாம் என்கிறார்.

தியானோவின் கடிதமாகச் சொல்லப்படும் மடல் ஆய்வுக்கு உட்பட்டது, அது உண்மையானதாக இல்லாமல் இருக்கலாம். ஆயினும்கூட, நவீன காலங்களில் பல பெண்கள் ஒருவருக்கொருவர் கூறிக் கொள்வதை இது நெருக்கமாக எதிரொலிக்கிறது. மேலும் அந்த அறிவுரை பண்டைய உலகத்திலும் பெண்களால் பின்பற்றப்பட்டதாகத் தெரிகிறது.

எலிஃபான்டிஸ் என்னும் ஒரு கிரேக்கப் பெண் கவிஞர் பெண்களுக்கு பாலியல் தொடர்பான குறிப்புகள் கொடுக்க மிகவும் ஆர்வமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் பல சிறிய புத்தகங்களை எழுதியதாகக் கூறப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, இன்று அவரது எழுத்துக்கள் இருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஆனால் இது ரோமானியக் கவிஞர் மார்ஷியல் மற்றும் ரோமானிய வாழ்க்கை வரலாற்றாசிரியர், காப்பக நிபுணர் சூட்டோனியஸ் ஆகிய இருவரும் இதனைக் குறிப்பிடுகின்றனர். எலிஃபான்டிஸ் புத்தகப் பிரதிகளை பேரரசர் டைபீரியஸ் (பாலியல் இச்சைகளுக்கு பெயர்பெற்றவர்) வைத்திருந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

ஆண்களின் இலக்கிய எழுத்துக்களில் பிற பெண்கள் மேற்கோள் காட்டப்பட்டால், அவர்கள் வெளிப்படையாகப் பாலுறவு தொடர்பான எழுத்துக்களாக இல்லாமல் அன்பின் அடிப்படையில் தங்களை வெளிப்படுத்த முனைகிறார்கள். இது மார்ஷியல் மற்றும் கேடல்லஸ் உட்பட அவர்களின் சமகால படைப்பாளிகள் சிலரிடமிருந்து அவர்களை வேறுப்படுத்தி காட்டுகிறது.

லெஸ்பியா என்பது கேதுலஸின் கற்பனைக் காதலி. கவிதையில் அவரிடம், "ஒரு பெண் தன் காதலரிடம் இந்த நேரத்தில் சொல்வதை / காற்று மற்றும் ஓடும் நீரில் எழுதப்பட வேண்டும்" என்று கூறுகிறார். இது 'தலையணை பேச்சு' (pillow talk) என்ற சொற்றொடரை நினைவுக்குக் கொண்டு வருகிறது.

ரோமானியக் கவிஞர்களில் ஒருவரான சுல்பிசியா, தனது பிறந்தநாளில் தனது காதலன் செரிந்தஸிடமிருந்து விலகி கிராமப்புறத்தில் வசித்தபோது ஏற்பட்ட துயரத்தை விவரிக்கிறார் - அதன் பிறகு அவர் ரோம் நகரில் இருக்க முடியும் என்ற நிம்மதியடைகிறார்.

இந்தப் பெண்கள் தங்கள் காதலருடனான பாலுறவைப் பற்றிய நுணுக்கமாக விவரணைகளைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நிஜத்தில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தலாம், ஆனால் திரைச்சீலைகள் மூடப்படும்போது, பெண்கள் அதீத உணர்ச்சிவசப்படக்கூடிய நபர்களாக இருக்கலாம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)