ஓம் பிர்லா மீண்டும் சபாநாயகர் - பாஜக கை ஓங்கியிருந்த போதும் இந்தியா கூட்டணி போட்டியிட்டது ஏன்?

சபாநாயகர் தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

18வது மக்களவை கருத்து வேறுபாடு மற்றும் மோதலுடன் தொடங்கியுள்ளது. இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் 48 ஆண்டுகளுக்கு பிறகு சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா வெற்றி பெற்றார்.

மக்களவையில் எண்ணிக்கை பலத்தின் அடிப்படையில் பார்க்கும் போது, பாஜக கூட்டணியின் கை ஓங்கியிருந்த போதிலும் இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டது ஏன்?

சபாநாயகர் தேர்தலில் ஓம் பிர்லா வெற்றி

நாடாளுமன்ற மக்களவையில் புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (புதன்கிழமை) காலை 11 மணியளவில் நடைபெற்றது. இதில், ஆளும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் 17-வது மக்களவையின் சபாநாயகராக இருந்த ஓம் பிர்லா போட்டியிட்டார்.

எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரசைச் சேர்ந்த, நாடாளுமன்ற அலுவல்களில் அதிக அனுபவம் பெற்ற மூத்த தலைவரான கொடிக்குனில் சுரேஷ் களமிறக்கப்பட்டார்.

ஓம் பிர்லா - கொடிக்குனில் சுரேஷ் ஆகிய இருவரில் யார் சபாநாயகர் என்பதை தீர்மானிக்க குரல் வாக்கெடுப்பு முறை கடைபிடிக்கப்பட்டது. அதில் ஓம் பிர்லா வெற்றி பெற்றார். பிரதமர் மோதி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

சபாநாயகர் தேர்தல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பாஜகவுக்கு சாதகமான நிலை

பிரதமர் மோதி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆகியோர் ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் அமரச் செய்தனர்.

சுதந்திர இந்திய வரலாற்றில், சபாநாயகர் பதவிக்கு மூன்று முறை மட்டுமே தேர்தல் நடந்துள்ளது. 1952, 1967-க்குப் பிறகு கடைசியாக 1976-ம் ஆண்டு சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. மற்றபடி ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே எப்போதும் ஒருமித்த கருத்தே இருந்து வந்துள்ளது.

1976-ம் ஆண்டுக்குப் பிறகு 48 ஆண்டுகள் கழித்து மக்களவை சபாநாயகர் பதவிக்கு மீண்டும் தேர்தல் நடந்துள்ளது.

சபாநாயகர் தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

ராகுல்காந்தி குற்றச்சாட்டும், பாஜக பதிலும்

மக்களவையில் எண்ணிக்கை பலம் பாஜக கூட்டணிக்கு இருந்த போதிலும் இந்தியா கூட்டணி வேட்பாளரை நிறுத்த தீர்மானித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

செவ்வாயன்று, நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “நாம் ஒன்றாகச் செயல்பட வேண்டும் என்று மோதி கூறுகிறார். நாங்கள் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறோம். ஆனால் அவரது வார்த்தைகளுக்கும் செயலுக்கும் வித்தியாசம் உள்ளது. ஆளுங்கட்சியின் சபாநாயகர் வேட்பாளரை ஆதரிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம், ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவியை வழங்குமாறு மல்லிகார்ஜுன கார்கே கேட்டபோது, ​​​​பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவரை மீண்டும் பேசுமாறு கூறினார், ஆனால் இதுவரை அந்த அழைப்பு வரவில்லை." என்றார்.

ராகுல் குற்றச்சாட்டிற்கு பதில் கொடுத்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, "சபாநாயகர் எந்த ஒரு கட்சியையும் சேர்ந்தவர் அல்ல. ஆனால் அவையை நடத்த ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். சபாநாயகர் பதவிக்கு காங்கிரஸ் தனது வேட்பாளரை அறிவித்தது வருத்தமளிக்கிறது" என்றார்.

சபாநாயகர் தேர்தல்

பட மூலாதாரம், ANI

18வது மக்களவை மோதலுடன் தொடக்கம்

சபாநாயகர் தேர்தல் குறித்து 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த இந்தியா கூட்டணி வேட்பாளர் கொடிக்குன்னில் சுரேஷ், “வெற்றி தோல்வி பிரச்னை இல்லை, ஆனால் சபாநாயகர் ஆளுங்கட்சியிலும், துணை சபாநாயகர் எதிர்க்கட்சியிலும் இருப்பார்கள் என்பது மரபு. இப்போது எதிர்க்கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், துணை சபாநாயகர் பதவி எங்கள் உரிமை." என்று கூறியுள்ளார்.

ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான இந்த மோதல் குறித்து அந்த பத்திரிகை தலையங்கமும் எழுதியுள்ளது.

அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஒருமித்த கருத்தை விரும்புவதாகவும் அரசியலமைப்பிற்கு விசுவாசமாக இருப்பதாகவும் கூறினாலும், இதுவரை ஆட்சி மற்றும் அரசியல் தொடர்பான எந்தவொரு முக்கிய பிரச்னையிலும் அவர்களுக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லை என்று அந்த தலையங்கம் கூறுகிறது. சபாநாயகர் பதவி தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணியும் இந்தியா கூட்டணியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டிருக்கின்றன.

துணை சபாநாயகர் பதவியை தந்தால், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை ஆதரிக்க எதிர்க்கட்சிகள் விருப்பம் தெரிவித்தன. கடந்த காலங்களிலும் துணை சபாநாயகர் பதவி பெரும்பாலும் எதிர்க்கட்சி உறுப்பினருக்கே வழங்கப்பட்டது.

16வது மக்களவையில் இந்த பதவி அதிமுகவுக்கு வழங்கப்பட்டது. 17வது மக்களவையின் பதவி காலம் முழுவதும் துணை சபாநாயகர் பதவி காலியாகவே இருந்தது இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் அதுவரை இல்லாத ஒன்று. இம்முறை துணை சபாநாயகர் பதவி யாருக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சபாநாயகர் தேர்தல்

பட மூலாதாரம், ANI

சபாநாயகர் பதவி ஏன் முக்கியமானது?

மக்களவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதில் அல்லது கட்சித்தாவல் தடைச் சட்டத்தை அமல்படுத்துவதில் சபாநாயகரின் பங்கு மிக முக்கியமானது. அவையில் எந்தவொரு பிரச்னைக்கும் சபாநாயகரின் முடிவே இறுதியானது.

சபாநாயகர் அபையில் ஒழுங்கையும் ஒழுங்கையும் பராமரிக்க வேண்டும். மேலும் அவை நடவடிக்கைகளை ஒத்திவைக்கலாம் அல்லது இடைநிறுத்தலாம்.

மக்களவையின் நடைமுறை மற்றும் செயல்பாட்டு விதிகள் தொடர்பான இந்திய அரசியலமைப்பின் விதிகளுக்கு செயல் வடிவம் கொடுப்பவராக சபாநாயகர் கருதப்படுகிறார். அதாவது, அவையின் சூழலில் அவர் என்ன விளக்கம் கொடுத்தாலும் அதுவே இறுதியானதாகும்.

அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணையின்படி, கட்சி விலகல் காரணமாக ஒரு எம்.பி.யை பதவி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், 1992-ல் உச்ச நீதிமன்றம் சபாநாயகரின் முடிவு நீதிமன்ற மறுஆய்வுக்கு உட்பட்டது என்று தீர்ப்பளித்தது.

18வது மக்களவையின் தொடக்கத்தை பார்க்கும் போது, ​​இந்த கூட்டத்தொடரில் அதிக விவாதங்கள், கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் என்று தோன்றுகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)