கள்ளக்குறிச்சி விவகாரம்: விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாடு, திமுக கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்துமா?

விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாடு

பட மூலாதாரம், @VanniKural

படக்குறிப்பு, முழு மதுவிலக்கு கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று மாலை (ஜூன் 24, 2024) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது

கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 219 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் 156 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான நாள் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் வட்டாரத்திலும் இவ்விவகாரம் மிகப்பெரிய பரபரப்பை கிளப்பியுள்ளது.

கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு தார்மிகப் பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலகக் கோரி அ.தி.மு.க சார்பில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல் உள்பட தமிழ்நாட்டின் பல இடங்களில் திங்கள்கிழமை (ஜூன் 24, 2024) கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

அதேபோல, கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை கோரி, திங்கள்கிழமை அன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து தமிழக பா.ஜ.க தலைவர் கே.அண்ணாமலை, தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் மனு அளித்துள்ளனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய  இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தி.மு.க-வுக்கு தர்ம சங்கடம்

இந்நிலையில் தி.மு.க-வின் கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாகவும் திங்கள்கிழமை அன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் மற்றும் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்திட வேண்டும், ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் இது நடத்தப்பட்டது.

எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்துவது, ஆளுநரைச் சந்திப்பது போன்றவை எதிர்பார்த்த ஒன்று தான் எனவும், ஆனால் தி.மு.க-வின் தோழமைக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகளும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது தி.மு.க-வுக்கு ஒரு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியுள்ளது எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் கூறியது என்ன? தி.மு.க இதை எப்படிப் பார்க்கிறது?

விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாடு

பட மூலாதாரம், @aloor_ShaNavas

படக்குறிப்பு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாகவும் திங்கள்கிழமை அன்று சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

'தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு'

சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மாலை (ஜூன் 24, 2024) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "மதுவிலக்கு பற்றி நாங்கள் புதிதாக பேசவில்லை. பம்பாய் மாகாணத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மதுவிலக்கு குறித்து அதே அவையில் வலியுறுத்தியுள்ளார். நாங்கள் அம்பேத்கரின் வாரிசுகள் அதனால் முழு மதுவிலக்கை தொடர்ந்து வலியுறுத்துகிறோம்," என்று கூறினார்.

தமிழ்நாட்டில் மட்டுமே மதுவை தடைசெய்ய சொல்லவில்லை என்றும் தேசிய அளவில் இதை கொள்கையாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசையும் வலியுறுத்துவதாகவும் அவர் கூறினார்.

"சாராயத்தில் கள்ளச்சாராயம், நல்ல சாராயம் என்பதே கிடையாது. எல்லாம் விஷம் தான். இப்படி சாராயத்தை வாங்கி குடிப்பவர்கள் அடித்தட்டு மக்கள். எனவே அனைத்து வகையான சாராயத்தையும் தடை செய்ய வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறோம்," என்று கூறினார்.

போதைப் பழக்கம் என்பது தேசியப் பிரச்னை என்றும், கள்ளக்குறிச்சி விவகாரத்தை மட்டும் பேசாமல், தொலைநோக்குப் பார்வையில் மதுவிலக்கே நிரந்தரத் தீர்வு என்பதை விடுதலைச் சிறுத்தைகள் முன்வைப்பதாகவும் அவர் கூறினார்.

"பா.ஜ.க-வும், அ.தி.மு.க-வும் அணுகுவது போல நாங்கள் இதை அணுகவில்லை. அதே நேரத்தில் தி.மு.க-வுக்கு வக்காலத்தும் வாங்கவில்லை. மதுவிலக்கு கொண்டுவந்தால் ஏற்படும் நிதியிழப்பை மட்டும் தமிழக அரசு பார்க்கக்கூடாது. குடிப்பழக்கத்தால் ஏற்படும் மனிதவள இழப்பையும் கணக்கில் கொள்ள வேண்டும்," என்றார் திருமாவளவன்.

இத்தகைய விஷச் சாராய மரணங்கள், இந்தியா முழுவதும் பல்வேறு கட்சிகளின் ஆட்சியின் கீழ் நடந்துள்ளதாகவும், எனவே 'தி.மு.க எதிர்ப்பு' என்ற மனநிலையில் இருந்து கள்ளக்குறிச்சி விவகாரத்தை அணுகக் கூடாது என்றும் அவர் கூறினார்.

மதுவிலக்கு தி.மு.க-வுக்கு எதிரான நிலைப்பாடா?

திமுகவுக்கு எதிரான நிலைபாடா
படக்குறிப்பு, 'தி.மு.க எதிர்ப்பு' என்ற மனநிலையில் இருந்து கள்ளக்குறிச்சி விவகாரத்தை அணுகக் கூடாது என்று திருமாவளவன் கூறினார்

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாகவும், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாடு குறித்தும் நம்மிடம் பேசினார் அக்கட்சியின் மாநிலக் கொள்கைபரப்புத் துணைச் செயலாளர் ஆதிமொழி.

"மக்களுக்கான பணி என்பது வேறு, தேர்தல் அரசியல் என்பது வேறு. அ.தி.மு.க, பா.ஜ.க போன்ற கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக போராட்டம், ஆளுநர் சந்திப்பு என செயல்படுகின்றன. ஆனால் விடுதலைச் சிறுத்தைகளோ அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால், மதுவிலக்கின் அவசியம் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தோம்," என்கிறார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாடு குறித்து தி.மு.க புரிந்துகொள்ளும் என்றும், கூட்டணியில் எந்தச் சலசலப்பும் இல்லை என்றும் கூறுகிறார் ஆதிமொழி.

"நிச்சயம் மதுவிலக்கு சவாலான ஒன்று தான். ஆனால், சாத்தியமில்லாத ஒன்று இல்லை. 2016-இல் அதைத் தேர்தல் வாக்குறுதியாகக் கூட தி.மு.க அளித்திருந்தது. டாஸ்மாக் என்பதே 1983-இல் எம்.ஜி.ஆர் கொண்டு வந்தது தான், பின்னர் அதற்கு 2003-இல் ஏகபோக அதிகாரத்தை அளித்தவர் ஜெயலலிதா. எனவே டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று வலியுறுத்துவது தி.மு.க-விற்கு எதிரான நிலைப்பாடு அல்ல," என்றார்.

மதுவிலக்கு
படக்குறிப்பு, 2022-23-ஆம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு ரூ.44,098 கோடி வருவாய் கிடைத்துள்ளது

ரூ.44,000 கோடி வருமானம்

தமிழ்நாடு வாணிபக் கழகம் (Tamil Nadu State Marketing Corporation Limited என்பதன் சுருக்கமே டாஸ்மாக். 1983-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது இது தொடங்கப்பட்டது. இது முற்றிலும் அரசால் நிர்வகிக்கப்படும் நிறுவனம். மாநிலத்தில் மதுவை மொத்த மற்றும் சில்லறை விற்பனை செய்யும் உரிமை இந்த நிறுவனத்துக்கு மட்டுமே இருக்கிறது.

தமிழ்நாட்டில் தனியார்வசம் இருந்த மதுபானச் சில்லறை விற்பனையை கடந்த 2003-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தன் வசம் எடுத்துக்கொண்டது. அதைத் தொடர்ந்து மது விற்பனை மூலம் அரசுக்கு வரும் வருமானம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2003-04-ஆம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.3,639.93 கோடி வருவாய் கிடைத்தது. 2008-2009-ஆம் ஆண்டில் இந்த வருமானம் ரூ.10,000 கோடியைத் தாண்டியது.

அடுத்த நான்கே ஆண்டுகளில் (2012-2013) ரூ.20,000 கோடி வருவாயை டாஸ்மாக் நிர்வாகம் எட்டியது. 2018-19-ஆம் நிதியாண்டில் ரூ.30,000 கோடியைக் கடந்த டாஸ்மாக் நிர்வாகத்தின் வருமானம் , 2022-2023-ஆம் நிதியாண்டில் ரூ.40,000 கோடியைக் கடந்துள்ளது. 2022-23-ஆம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.44,098 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

செந்தில்குமார்

பட மூலாதாரம், @DrSenthil_MDRD

படக்குறிப்பு, தி.மு.க-வின் உறுப்பினரும், தருமபுரி தொகுதியின் முன்னாள் எம்.பியுமான செந்தில்குமார்

தி.மு.க கூறுவது என்ன?

இது தொடர்பாக கருத்து தெரிவித்த தி.மு.க-வின் உறுப்பினரும் முன்னாள் எம்.பி-யுமான செந்தில்குமார், "2016 தேர்தலில் மதுவிலக்கை நாங்கள் வலியுறுத்தினோம். அப்போது ஒரு அரசியல் கட்சியாக அதுவே எங்களுக்கு சரியான தீர்வாகத் தோன்றியது. ஆனால் ஒரு அரசியல் கட்சியாக எடுக்கக்கூடிய முடிவுகளுக்கும், ஆளும் அரசாக எடுக்கக்கூடிய முடிவுகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன," என்று கூறுகிறார்.

2016-ஆம் ஆண்டில் மதுவிலக்கை அமல்படுத்தியே தீர வேண்டும் என்று மக்கள் மத்தியில் ஒரு பொதுக்கருத்து உருவாகியிருந்ததை அந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல் பிரதிபலித்தது. தேர்தலில் முக்கிய விவாதப் பொருளாக மது விலக்கு இருந்தது. பிரதான கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டுமே மதுவிலக்கைக் கொண்டு வர உறுதியளித்தன.

தொடர்ந்து பேசிய செந்தில்குமார், "விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு என்று சில கொள்கைகள் உள்ளன. அவர்களை நம்பியிருக்கும் மக்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய கடமையும் உள்ளது. அதை நாங்கள் புரிந்து கொள்கிறோம்," என்றும் கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் மீதான நெருக்கடி

பட மூலாதாரம், THIRUMA OFFICIAL FACEBOOK PAGE

படக்குறிப்பு, வேங்கைவயல் பிரச்னையை விடுதலைச் சிறுத்தைகள் தீவிரமாக கையாளவில்லை என்ற விமர்சனம் எழுந்தது

'விடுதலைச் சிறுத்தைகள் மீதான நெருக்கடி'

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பான தங்களின் நிலைப்பாடு, எந்த வகையிலும் தோழமைக் கட்சியான தி.மு.க-வை பாதிக்கக்கூடாது என்ற நோக்கத்தில் தான், தேசிய அளவில் மதுவிலக்கு என்பதை விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது என்று கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் பிரியன்.

"நிச்சயமாக தி.மு.க-வுக்கு இதுவொரு தர்மசங்கடமான நிலை தான். ஆனால் அதே சமயத்தில் நிர்வாகச் சீர்கேட்டை மட்டும் தான் விடுதலைச் சிறுத்தைகள் கண்டித்தார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தை மதுவிலக்கு என்ற பெயரில் தான் முன்னெடுத்தார்கள். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பக்கம் தாங்கள் நிற்கிறோம் என்பதை வெளிப்படுத்த வேண்டும். அதேநேரத்தில் கூட்டணியிலும் விரிசல் விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தான் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது," என்கிறார் பிரியன்.

தொடர்ந்து பேசிய அவர், "இப்போதுதான் மக்களவைத் தேர்தல் முடிந்துள்ளது. வரப்போகும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் தி.மு.க கூட்டணிக்கு பெரிய பாதிப்பு இருக்காது. வாக்கு சதவீதம் வேண்டுமானால் பாதிக்கப்படலாம். மற்றபடி தி.மு.க ஆளும் கட்சியாக இடைத்தேர்தலைச் சந்திப்பதால், அதற்கான ஆதாயங்களும் உள்ளன. எனவே தான் தி.மு.க-வும் இந்த ஆர்ப்பாட்டத்தைத் தங்களுக்கு எதிரானதாக பார்க்கவில்லை," என்கிறார்.

திமுகவுக்கு எதிரான நிலைபாடா
படக்குறிப்பு, தி.மு.க-வின் தோழமைக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகளும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது தி.மு.க-வுக்கு ஒரு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியுள்ளது

கட்சி தர்மம், கூட்டணி தர்மம்

வேங்கைவயல் பிரச்னையை விடுதலைச் சிறுத்தைகள் தீவிரமாக கையாளவில்லை என்ற விமர்சனம் எழுந்ததாகவும், எனவே கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தங்கள் நிலைப்பாட்டை உறுதி செய்ய வேண்டிய நெருக்கடி அக்கட்சிக்கு ஏற்பட்டதாகவும் கூறுகிறார் அரசியல் விமர்சகர் ரகு.

"தங்களுக்கான வாக்கு வங்கியை இழந்துவிடக்கூடாது, அல்லது பலப்படுத்த வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. இதற்கு முன்பும் பலமுறை அடித்தட்டு மக்கள் அல்லது பட்டியிலின மக்களுக்காக விடுதலைச் சிறுத்தைகள் களத்தில் நின்றுள்ளது,” என்கிறார்.

"அதேபோல தி.மு.க-வின் மற்றொரு கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட (சி.பி.எம்) பல போராட்டங்களை நடத்தியுள்ளது. கூட்டணி தர்மம் என்பது வேறு. கூட்டணிக்காகத் தங்கள் நிலைப்பாடு அல்லது கொள்கைகளை விட்டுக்கொடுத்தால், கட்சிகள் மக்களின் மனதில் இருந்து மறைந்து விடும். அதற்குச் சிறந்த உதாரணம் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்துக்கொண்ட கட்சிகள்," என்கிறார் ரகு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)