தைவானில் புதிய அதிபர் பொறுப்பேற்றுள்ள நிலையில் சீனா திடீர் ராணுவ ஒத்திகை நடத்துவது ஏன்?

சீனா

பட மூலாதாரம், Getty Images

தைவானின் புதிய அதிபராக வில்லியம் லாய் பதவியேற்றதைத் தொடர்ந்து, அந்த நாட்டைச் சுற்றி சீனா தனது ராணுவ பயிற்சியைத் தொடங்கியுள்ளது.

இந்த நிகழ்வு தைவான் மீது சீனா உரிமை கோரும் விஷயத்தில் உண்மையான பிரச்னை என்ன என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

சீனா, தைவானை தன்னிடமிருந்து பிரிந்து சென்ற மாகாணமாகவே கருதி வருகிறது. ஒருநாள் மீண்டும் அந்நாடு தன்னுடன் வந்து இணைந்துவிடும் என்றும் நம்பி வருகிறது. இதற்காக சில நேரங்களில் தனது படைபலத்தையும் அது பயன்படுத்தத் தயங்குவதில்லை.

ஆனால் தைவான் மக்கள் பலரும் தங்களை ஒரு தனி நாடாகவே கருதுகிறார்கள். இருப்பினும், பெரும்பாலான மக்கள் தற்போதைய நிலையை அப்படியே தொடர்வதற்கு ஆதரவாக உள்ளனர். அதாவது சீனாவிடம் இருந்து தைவான் சுதந்திரம் பெற்றதாக அறிவிப்பதையோ, அதேநேரம் தைவான் சீனா பக்கம் செல்வதையோ அவர்கள் விரும்பவில்லை.

சீனாவிற்கும் தைவானுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய வரலாறு

சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சில காலத்திற்கு டச்சு காலனியாக இருந்ததற்குப் பிறகு, சீனாவின் சிங் வம்சம் தைவானை ஆண்டு வந்தது.

தைவான் வரலாற்றின்படி, அதன் ஆதிகுடி மக்கள் ஆஸ்ட்ரோனேசிய பழங்குடிகள் என்று அறியப்படுகிறது. இவர்கள் தெற்கு சீனாவில் இருந்து வந்தவர்கள் என்றும் நம்பப்படுகிறது.

முதன்முதலில் சீன அரசர் ஒருவர் தைவானுக்கு குழு ஒன்றை அனுப்பியதாக, கி.பி 239இல் சீன வரலாற்றுப் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தகவலின் அடிப்படையிலேயே சீனா தைவான் மீது உரிமை கோருகிறது.

சில காலத்திற்கு டச்சு காலனியாக இருந்ததற்குப் பிறகு, சீனாவின் சிங் வம்சம் தைவானை ஆண்டு வந்தது. ஆனால், சீனா ஜப்பானிடம் தோற்ற நேரத்தில், தைவானும் ஜப்பானின் கைகளுக்குச் சென்றது.

பின்னர் இரண்டாம் உலகப் போரின்போது சீனாவால் ஜப்பான் தோற்கடிக்கப்பட்டவுடன், அந்நாடு சீனாவில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளைவிட்டு வெளியேறியது. பின்னர், சீனக் குடியரசின் (ROC) அதிகாரப்பூர்வ பகுதியாக தைவான் அங்கீகரிக்கப்பட்டது. அதன் நட்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் ஒப்புதலுக்குப் பின் சீனா தைவானில் ஆட்சி நடத்தத் தொடங்கியது.

ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் சீனாவில் உள்நாட்டுப் போர் வெடித்தது. அப்போது சீனாவின் மாபெரும் தலைவரும், ராணுவத் தளபதியுமான சாங் காய் ஷேக்கின் ராணுவம், மாவோ சே துங்கின் கம்யூனிஸ்ட் ராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டது.

பின்னர் 1949ஆம் ஆண்டு, தேசியவாத குமிங்டாங் கட்சியின் சாங் காய்-ஷேக், அவரது கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உள்ளிட்ட 15 லட்சம் பேர் சீனாவை விட்டு வெளியேறி தைவானுக்கு சென்றனர்.

தைவானில் சர்வாதிகார ஆட்சியைத் தொடங்கிய சாங் 1980 வரை அங்கு ஆதிக்கம் செலுத்தினார். அவரது மரணத்திற்குப் பிறகு, தைவானில் ஜனநாயகத்தை நோக்கிய மாற்றங்கள் தொடங்கின மற்றும் 1996இல் முதல்முறையாக தேர்தல்கள் நடத்தப்பட்டன.

தைவானை யார் அங்கீகரிப்பது?

சீனா

பட மூலாதாரம், CENTRAL PRESS

படக்குறிப்பு, கடந்த 1970களில், தைவான் அரசை சீனாவில் வாழும் ஒட்டுமொத்த மக்களின் உண்மையான பிரதிநிதியாகக் கருத முடியாது என்று பல நாடுகள் வாதிடத் தொடங்கின.

தைவான் ஒரு நாடு என்பதில் வெவ்வேறு விதமான கருத்து வேறுபாடுகள் உள்ளன. தைவானிடம் அதன் சொந்த அரசமைப்பு சட்டம் உள்ளது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் உள்ளனர். மேலும், சுமார் 300,000 வீரர்களைக் கொண்ட ராணுவமும் உள்ளது.

நாட்டைவிட்டு வெளியேறிய சாங்கின் ஆர்ஓசி(ROC) அரசு மீண்டும் சீனாவை கைப்பற்றும் நோக்கத்தில், சீனா முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக முன்பு கூறியது.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் சீனாவின் இடம் தைவான் அரசிடம் இருந்தது. பல மேற்கத்திய நாடுகளும் அதை ஒரே சீன அரசாக அங்கீகரித்தன.

ஆனால் 1970களில், தைவான் அரசை சீனாவில் வாழும் ஒட்டுமொத்த மக்களின் உண்மையான பிரதிநிதியாகக் கருத முடியாது என்று பல நாடுகள் வாதிடத் தொடங்கின.

கடந்த 1971ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபை பெய்ஜிங்கிற்கு ராஜ்ஜீய அங்கீகாரம் வழங்கியது. 1978இல் சீனா தனது சந்தைப் பொருளாதாரத்தைத் தொடங்கியபோது, ​​​​அமெரிக்கா ஒரு வணிக வாய்ப்பு அங்கிருப்பதைக் கண்டது. இதைத் தொடர்ந்து, அமெரிக்கா 1979இல் பெய்ஜிங்குடன் முறையான ராஜ்ஜீய உறவுகளைத் தொடங்கியது.

அப்போதிருந்து, ஆர்ஓசி அரசை அங்கீகரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது மற்றும் தற்போது 12 நாடுகள் மட்டுமே தைவானை அங்கீகரிக்கின்றன. தைவானை அங்கீகரிக்கக் கூடாது என்று சீனா மற்ற நாடுகளுக்கு ராஜ்ஜீய அழுத்தங்களைக் கொடுத்து வருகிறது.

தைவானுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு எப்படி இருக்கிறது?

சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 'ஒரு நாடு இரு அமைப்பு' என்ற திட்டத்தின் கீழ் சீனாவின் ஒரு பகுதியாக தன்னை ஒப்புக்கொண்டால், அதற்கு சுயாட்சி வழங்கப்படும் என்று தைவானிடம் சீனா முன்மொழிந்தது.

சீனாவில் செய்யப்படும் முதலீடுகள் மற்றும் பயணம் தொடர்பான விதிகளை 1980களில் தைவான் தளர்த்தியபோது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேம்படத் தொடங்கின. 1991இல், சீன மக்கள் குடியரசுடனான போர் முடிவுக்கு வந்ததாக தைவான் ஆர்ஓசி அரசு அறிவித்தது.

'ஒரு நாடு இரு அமைப்பு' என்ற திட்டத்தின் கீழ் சீனாவின் ஒரு பகுதியாக தன்னை ஒப்புக்கொண்டால், அதற்கு சுயாட்சி வழங்கப்படும் என்று தைவானிடம் சீனா முன்மொழிந்தது.

இதே திட்டத்தின் கீழ், 1997ஆம் ஆண்டு சில சுதந்திர உரிமைகளுடன் சீனாவுடன் மீண்டும் இணைந்து கொண்டது ஹாங்காங். ஆனால், சமீப காலமாக ஹாங்காங் மீது கட்டுப்பாடுகளை அதிகரிக்க சீனா முயன்று வருகிறது.

தைவான் சீனாவின் முன்மொழிவை நிராகரித்த நிலையில், ஆர்ஓசி அரசு சட்டவிரோதமானது என்று சீனா வலியுறுத்தத் தொடங்கியது. ஆனால், இன்னமும் சீனா மற்றும் தைவானின் அதிகாரபூர்வமற்ற பிரதிநிதிகளுக்கு இடையில் சிறிய அளவில் உரையாடல்கள் நடந்து வருகின்றன.

சீனாவுக்கு எதிராக வெளிப்படையாகப் பேசிய சென் ஷ்வே பியான், 2000ஆம் ஆண்டில் தைவானின் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். சென் மற்றும் அவரது ஜனநாயக முற்போக்குக் கட்சி (DPP), தைவானின் "சுதந்திரத்தை" உறுதியாக ஆதரித்தது.

கடந்த 2004ஆம் ஆண்டு மீண்டும் அவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு ஓராண்டு கழித்து, சீனா பிரிவினை எதிர்ப்பு சட்டத்தை நிறைவேற்றியது. தைவான் சீனாவில் இருந்து பிரிந்து செல்வதைத் தடுக்க அமைதியற்ற வழிகளையும் பயன்படுத்தலாம் என்று இந்தச் சட்டத்தில் விதிகள் இருந்தன.

சென் ஷ்வே பியானுக்கு பிறகு, சீன மக்கள் குடியரசுடன் நெருக்கமான உறவுகளை விரும்பிய கேஎம்டி கட்சி தைவானின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது.

ஆனால் மீண்டும் 2016ஆம் ஆண்டு ஜனநாயக முற்போக்குக் கட்சியின், சாய் இங்-வென் அதிபராகப் பதவியேற்ற பிறகு, சீனாவுடனான உறவுகள் மேலும் மோசமடைந்தது. அதற்குக் காரணம் தைவான் 'ஒரே சீனா' கொள்கையை ஏற்க மறுத்ததே என்று சீனா கூறியது.

தைவானின் சுதந்திரத்தை முறையாக அறிவிப்பேன் என்று சாய் இங்-வென் ஒருபோதும் கூறவில்லை என்றாலும், தைவான் ஏற்கெனவே சுதந்திரமாக இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.

சீனா

பட மூலாதாரம், REUTERS

படக்குறிப்பு, சமீபத்தில் "பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கு" "கடுமையான தண்டனை" என்றும் பெய்ஜிங் தெரிவித்துள்ளது.

சாய் இங்-வென்னின் ஆட்சிக் காலத்தில், தைவான் மீது ஷி ஜின்பிங் உரிமை கோருவது அதிகரித்தது. அடிக்கடி தைவான் மீண்டும் சீனாவோடு சேர்ந்து விடும் என்று கூறி வந்தார். சீனாவின் அந்தக் கனவை சாத்தியமாக்குவதற்கான ஆண்டாக 2049ஐ நிர்ணயித்துள்ளார் அவர்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் சாய் இங்-வென்னின் துணை அதிபரான வில்லியம் லாய் அந்நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை “பிரிவினைவாதி” என்று சீனா முத்திரை குத்தியது.

வில்லியம் பதவியேற்று ஒரு வார காலமே ஆன நிலையில் கடந்த வியாழன் அன்று தைவானுக்கு அருகில் ராணுவ பயிற்சியை நடத்தியுள்ளது சீனா.

இதையொட்டி "பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கு" "கடுமையான தண்டனை" என்றும் பெய்ஜிங் தெரிவித்துள்ளது. மேலும், ஜனநாயக முற்போக்குக் கட்சியின் மோசமான தலைவர் லாய் என்று சீனா கூறி வருகிறது.

சீனா-தைவான் உறவுக்கும் அமெரிக்காவிற்கும் என்ன தொடர்பு?

சீனா

பட மூலாதாரம், REUTERS

படக்குறிப்பு, அமெரிக்கா மற்றும் சீனாவிற்கும் இடையில் மிக நீண்டகாலமாக நீடித்து வரும் மிகவும் சர்ச்சைக்குரிய பிரச்னைகளில் தைவானும் ஒன்று.

அமெரிக்கா சீனாவுடன் ராஜ்ஜீய உறவுகளைக் கொண்டுள்ளது. "ஒரே சீனா கொள்கை"யின் கீழ் சீன அரசையும் அந்நாடு அங்கீகரிக்கிறது. அதேநேரம் தைவானின் மிக முக்கியமான நட்பு நாடாகவும் அமெரிக்கா இருந்து வருகிறது.

தைவானுக்கு தற்காப்புக்காக ஆயுதங்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளது மட்டுமின்றி, ராணுவரீதியாக தைவானை அது பாதுகாக்கும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையில் மிக நீண்டகாலமாக நீடித்து வரும் மிகவும் சர்ச்சைக்குரிய பிரச்னைகளில் தைவானும் ஒன்று. எப்போதெல்லாம் தைவானை ஆதரிப்பதாக அமெரிக்கா பேசுகிறதோ, அப்போதெல்லாம் அந்நாட்டை சீனா கண்டிக்கிறது.

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி 2022ஆம் ஆண்டு தைவானுக்கு சுற்றுப் பயணம் வந்திருந்த நிலையில், அதற்குப் பதிலடியாக சீனா தைவானை சுற்றி பெரிய அளவிலான ராணுவப் பயிற்சிகளை நடத்தியது.

அதிபர் ஷி ஜின்பிங்கின் ஆட்சியில், 'சாம்பல் மண்டலப் போரை' சீனா தீவிரப்படுத்தியது. தைவானுக்கு அருகில் தனது போர் விமானங்களை நிறுத்தி வைக்கும் சீனா, அமெரிக்கா மற்றும் தைவானுக்கு இடையில் எந்தப் பேச்சுவார்த்தை நடந்தாலும் அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இதுபோன்ற ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்கிறது.

'சாம்பல் மண்டலம்' என்பது ஒரு நாடு நேரடியாக தாக்குதல் நடத்துவதற்குப் பதிலாக, அந்த பயத்தை அப்படியே வைத்திருப்பதாகும்.

கடந்த 2022ஆம் ஆண்டில், தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்தில், சீனா தனது போர் விமானங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியது.

தற்போது இந்தத் தேர்தல் முடிவுகள் அமெரிக்க-சீன உறவுகளின் திசைப்போக்கைத் தீர்மானிக்கும். இதில் யார் வெற்றி பெற்றாலும் அமெரிக்கா, சீனா மற்றும் தைவான் இடையிலான உறவில் அது தாக்கத்தை ஏற்படுத்தும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)