உங்கள் தொப்புளில் பருத்தி போன்று கழிவுகள் சேர்கிறதா? அதில் என்ன இருக்கிறது தெரியுமா?

தொப்புளில் பருத்தி கழிவுகள் இருப்பதற்கு என்ன காரணம்? தவிர்ப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பருத்தி போன்ற கழிவுகளை சுத்தம் செய்யும் போபோது பாக்டீரியாவும் சுத்தம் செய்யப்படுகிறது.
  • எழுதியவர், ஜேசன் ஜி கோல்ட்மேன்
  • பதவி, பிபிசி ஃபீச்சர்ஸ் செய்தியாளர்

தொப்புளில் உருவாகும் மென்மையான, பருத்தி போன்ற கழிவுகளைப் பற்றி தெரிந்து கொள்ள இரண்டு முக்கிய விஷயங்கள் உள்ளன.

முதலில், அறிவியல் ரீதியாக "நேவல் ஃப்ளஃப்" (naval fluff) என்று அழைக்கப்படும் இதனை, ‘பெல்லி பட்டன் லிண்ட்’ (BBL) என்று அழைக்கிறார்கள்.

இரண்டாவதாக, வயிற்றில் அதிக முடி உள்ள நடுத்தர வயது ஆண்கள், குறிப்பாக சமீபத்தில் எடை அதிகரித்தவர்களுக்கு தொப்புளில் இந்த கழிவுகள் அதிகமாக இருக்கும்.

ஆஸ்திரேலிய அறிவியல் வானொலி நிகழ்ச்சியில் சிட்னி பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர் டாக்டர் கார்ல் க்ருசெல்னிக்கியிடம், ​​தொப்புளில் பருத்தி போன்ற கழிவுகள் எங்கிருந்து வருகிறது, அது எப்படி உருவாகிறது என்று ஒருவர் கேட்டார் .

இது க்ருசெல்னிக்கியை இணைய கணக்கெடுப்பை நடத்தத் தூண்டியது. அதனடிப்படையில், உடலில் முடி கொண்ட நடுத்தர வயது ஆண்களுக்கு பெல்லி பட்டன் லிண்ட் ஒரு பிரச்னை என்று அவர் முடிவு செய்தார்.

வாட்ஸ் ஆப்

இணைய கணக்கெடுப்புடன், க்ருசெல்னிக்கியும் அவரது சகாக்களும் தன்னார்வலர்களிடமிருந்து மாதிரிகளையும் சேகரித்தனர். இதற்காக தன்னார்வலர்களிடம் தங்களின் தொப்புளைச் சுற்றியுள்ள முடியை அகற்றுமாறு கேட்டுக் கொண்டனர். இது பஞ்சு போன்ற கழிவுகள் சேர்வதை தடுக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. இது டாக்டர் க்ருசெல்னிக்கி மற்றும் அவரது சகாக்கள் தொப்புளில் கழிவுகள் உருவாவதற்கான காரணத்தைக் கண்டறிய வழிவகுத்தது.

தொப்புளைச் சுற்றியுள்ள முடி, நாம் அணியும் ஆடையின் உள்புறம் இருந்து சிறிய நாரிழைகளை இழுத்து தொப்புளில் சேர்க்கிறது. இந்த செயல்பாடு ஒருவழிப் பாதையாக, அதாவது ஆடையில் இருந்து தொப்புளுக்கு முடி வாயிலாக நாரிழைகள் கடத்தப்படுவது மட்டுமே நடைபெறுகிறது.

தொப்புளில் பருத்தி கழிவுகள் இருப்பதற்கு என்ன காரணம்? தவிர்ப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

பழைய ஆடைகளில் பிரச்னை குறைவு

தொப்புளில் உள்ள முடிதான் இதற்கு காரணம் என்று க்ருசெல்னிக்கி மட்டும் கூறவில்லை. 2009 ஆம் ஆண்டில், வியன்னா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளரான ஜார்ஜ் ஸ்டெய்ன்ஹவுசரும் மெடிக்கல் ஹைப்போதீசிஸ் எனும் மருத்துவ இதழில் இதுகுறித்த கண்டுபிடிப்புகளை வெளியிட்டார்.

மூன்று ஆண்டுகளாக ஒவ்வொரு மாலையும், ஸ்டெய்ன்ஹவுசர் தனது தொப்புளில் உருவாகும் பருத்தி போன்ற கழிவுகளை சேகரித்தார். அவர் தினமும் காலையில் குளிப்பது உட்பட தனிப்பட்ட சுகாதாரத்தை கடைபிடித்தாலும், மாலையில் அவரது தொப்புள் இத்தகைய கழிவுகளால் நிரம்பிவிடும்.

ஸ்டெய்ன்ஹவுசர் தனது தொப்புளில் இருந்து 503 மாதிரிகளை சேகரித்தார். அவற்றின் மொத்த எடை ஒரு கிராம் அளவுக்குக் கூட இல்லை. சராசரியாக, ஒவ்வொரு கழிவுப் பொருளும் 1.82 மில்லிகிராம் எடையும், ஏழு துண்டுகள் 7.2 மில்லிகிராமுக்கு மேல் எடையும் இருந்தது. அவற்றில் மிகப்பெரியது 9.17 மில்லிகிராம் எடை கொண்டது.

"அது பருத்தி இழைகளின் உருவாக்கம் என்பது தெளிவாகிறது" என்று ஸ்டெய்ன்ஹவுசர் கூறினார். ஏனெனில் அவர் தினமும் எந்த நிறத்தில் சட்டை அணிகிறாரோ, அதே நிறத்தில்தான் கழிவுகளும் இருந்தன. பழைய சட்டைகளை அணிந்த போது கழிவுகள் குறைவாக இருந்தன.

ஸ்டெயின்ஹவுசர் இறுதியில் க்ருசெல்னிக்கியின் முடிவை உறுதிப்படுத்தினார். "தொப்புளில் பருத்தி போன்ற கழிவுகள் உருவாவதற்கு தொப்புளைச் சுற்றியுள்ள முடியே காரணம். முடிகள் சட்டையில் இருந்து சிறிய நாரிழைகளை நகர்த்தி, அவற்றை தொப்புளை நோக்கி செலுத்தும்” என்று அவர் வாதிட்டார்.

"முடிகளின் முனைகள் ஒருவித 'கொக்கிகள்' போன்று செயல்படுகின்றன” என்கிறார் அவர். ஒருமுறை, அவர் தன் தொப்புளை சுற்றியுள்ள முடியை அகற்றிய பின்னர், தொப்புளில் கழிவுகள் இல்லாமல் சுத்தமாக இருந்தது. இதே விளைவுகள் சோதனையில் ஈடுபட்ட பங்கேற்பாளர்களுக்கும் ஏற்பட்டது.

ஆனால், ஸ்டெய்ன்ஹவுசர் தனது ஆராய்ச்சியை இன்னும் ஒரு படி மேலே கொண்டு சென்றார். அவர் முழு வெள்ளை நிறத்தில், 100 சதவிகித பருத்தியிலான டி-ஷர்ட்டை அணிந்திருந்தார். பின்னர் சேகரிக்கப்பட்ட பெல்லி பட்டன் லிண்ட் மாதிரியின் வேதியியல் கலவையை ஆய்வு செய்தார். தொப்புளில் இருந்து சேகரிக்கப்பட்ட கழிவு சட்டையிலிருந்து மட்டுமே நாரிழைகளைக் கொண்டிருந்தால், அது முற்றிலும் செல்லுலோஸால் ஆனது என்று ஆய்வு முடிவு வந்திருக்க வேண்டும். ஆனால், ஆய்வு முடிவு அவ்வாறானதாக இல்லை. மற்ற கழிவுகளும் தொப்புளை அடைவதை ஸ்டெய்ன்ஹவுசர் கவனித்தார்.

தொப்புளில் பருத்தி கழிவுகள் இருப்பதற்கு என்ன காரணம்? தவிர்ப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எந்த வண்ணத்தில் ஆடை அணிகிறோமோ, அதே வண்ணத்தில் கழிவுகள் இருக்க வாய்ப்புண்டு.

ரசாயன சோதனைகளின் அடிப்படையில், மீதமுள்ள கழிவுகள் தூசி, தோல் செல்கள், கொழுப்பு, புரதங்கள் மற்றும் வியர்வையாக இருக்கலாம் என்று ஸ்டெய்ன்ஹவுசர் ஊகித்தார். பருத்தி போன்ற கழிவுகள் உள்ளவர்களின் தொப்புள் சுத்தமாக இருக்கும் என்று அவர் வாதிட்டார். ஏனெனில் பருத்தி கழிவுகளை அகற்றும் போது தொப்புள் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டுவிடும் என்பது அவரது வாதம்.

க்ருசெல்னிக்கி மற்றும் ஸ்டெய்ன்ஹவுசர் போன்ற ஆராய்ச்சியாளர்கள் தொப்புளில் உள்ள இந்த பருத்தி போன்ற கழிவுகளை மட்டுமே பகுப்பாய்வு செய்தனர். ஆனால் அமெரிக்காவின் வடக்கு கரோலினா ஸ்டேட் பல்கலைக் கழகமோ (NCSU) தொப்புளுக்குள் வேறு என்ன இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள ஆராய்ச்சி செய்யப்பட்டது.

அந்தப் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர் ராப் டன், 'பெல்லி பட்டன் பன்முகத்தன்மை திட்டம்' என்ற திட்டத்தில் பணியாற்றினார்.

2011 ஆம் ஆண்டில், ராப் டன் மற்றும் அவரது சகாக்கள் 500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களிடம் இருந்து தொப்புள் கழிவுகளின் மாதிரிகளை சேகரித்தனர். இந்த ஆராய்ச்சியாளர்கள் பருத்தி போன்ற கழிவுகளில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. மாறாக, தொப்புளில் உள்ள பூஞ்சை, பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிரிகளை அவர்கள் புரிந்து கொள்ள விரும்பினர். நமது தொப்புளில் எந்த வகையான பாக்டீரியாக்கள் வாழ்கின்றன என்பதை அறிய விரும்பினர்.

அந்த ஆய்வில் ராப் டன் மற்றும் அவரது குழுவினர் தொப்புளில் மறைந்திருக்கும் நுண்ணுயிரிகளைக் கண்டுபிடித்தனர்.

தொப்புளில் பருத்தி கழிவுகள் இருப்பதற்கு என்ன காரணம்? தவிர்ப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

தொப்புளில் உள்ள பாக்டீரியாக்கள் எவை?

முதல் 60 பேரின் மாதிரிகளை பரிசோதித்ததில், 2,368 வகையான பாக்டீரியாக்களை அவர்கள் கண்டறிந்தனர். இது வட அமெரிக்காவின் பறவைகள் அல்லது எறும்புகளின் வகைகளைக் காட்டிலும் 2 மடங்கு அதிகம். அவற்றில், 2,128 வகை பாக்டீரியாக்கள் ஆறு பேருக்கும் குறைவானவர்களின் தொப்புளில் மட்டுமே காணப்பட்டன.

மனித தொப்புளில் காணப்படும் பெரும்பாலான பாக்டீரியாக்கள் சில குறிப்பிட்ட இனங்களைச் சேர்ந்தவையே. அனைத்து நபர்களின் தொப்புளிலும் ஒரே வகை பாக்டீரியா காணப்படாது. ஆனால், குறிப்பிட்ட 8 வகையான பாக்டீரியாக்கள் இந்த ஆய்வில் பங்கேற்ற 70 சதவீதம் பேரிடம் காணப்பட்டன. ஒரு நபரிடம் இருந்த ஒட்டுமொத்த பாக்டீரியாக்களில் இவையே கிட்டத்தட்ட பாதியளவிற்கு இருந்தன.

"மனிதனின் தோலிலும், தொப்புளிலும் வாழக் கூடியவை"

இந்த பாக்டீரியாக்கள் மனிதனின் தோலிலும், தொப்புளிலும் வாழ்வதற்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொண்டவை என்று ராப் டனும் அவரது குழுவினரும் கருதுகின்றனர்.

ஒரு நபரின் தொப்புளில் எந்த வகையான பாக்டீரியா இருக்கும் என்று கணிக்க முடியாது. ஆனால், தொப்புளில் எந்த வகையான பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன? எவை அரிதானவை? என்பதை ஆராய்ச்சியாளர்களால் கூற முடியும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)