கனடா, ஆஸ்திரேலியாவில் மாணவர் விசா விதிகள் கடுமை - தமிழ்நாட்டு மாணவர்கள் என்ன செய்கிறார்கள்?

கனடா, ஆஸ்திரேலியா செல்வதைத் தவிர்க்கும் தமிழ்நாட்டு மாணவர்கள்

பட மூலாதாரம், Getty Images

வெளிநாடு சென்று கல்வி கற்க வேண்டும் என விரும்பும் இந்திய மாணவர்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது கனடா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை தான். குறிப்பாக கனடாவில் கல்வி கற்க இந்திய மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பிப்பது வழக்கம்.

ஆனால் கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் சமீப காலமாக, மாணவர் விசாக்களைப் பெறுவதற்கான சட்டங்களையும் விதிமுறைகளையும் கடுமையாக்கி வருகின்றன. தமிழ்நாட்டிலிருந்து இந்த நாடுகளுக்கு சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் மத்தியில் இந்த புதிய விசா விதிமுறைகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதைப் பார்க்கலாம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய  இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

விசா விதிகள் கடுமை

கனடா அரசாங்கம், இந்த ஆண்டின் தொடக்கத்தில், சர்வதேச மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் மற்றும் நாட்டின் உட்கட்டமைப்பு சுமைகளை கருத்தில் கொண்டு 2024 ஜனவரி மாதம் முதல் இரண்டு வருடங்களுக்கு வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை 35 சதவிகிதம் வரை குறைப்பதாக அறிவித்தது.

இதனால் 2024ஆம் ஆண்டுக்குள் தோராயமாக 3,60,000 மாணவர் விசாக்களை மட்டுமே வழங்க கனடா அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது. இதைத் தவிர மற்றொரு பெரிய மாற்றத்தையும் கனடா அரசு செய்தது. கனடாவில் அரசு-தனியார் கூட்டுறவின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் பட்டம் பெறும் மாணவர்களுக்கு செப்டம்பர் முதல் அங்கு பணி செய்வதற்கான அனுமதி வழங்கப்படாது. கனடாவில் படித்து குடியுரிமை பெற விரும்பும் மாணவர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுமட்டுமல்லாது வரலாற்றில் முதன்முறையாக, தற்காலிகமாக வசிப்பவர்களின் எண்ணிக்கையைப் புதிதாக வருபவர்கள் சார்ந்து மட்டும் கட்டுப்படுத்த கனடா கருதியது. அடுத்த மூன்று ஆண்டுகளில் தற்காலிகமாக வசிப்பவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று கனடா குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் இந்த ஆண்டு மார்ச் மாதம் தெரிவித்தார். செப்டம்பர் மாதம் முதல் இந்த நடவடிக்கை அமலுக்கு வரும். இந்த வரம்பு, சர்வதேச மாணவர்கள், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் அகதிகளுக்கும் பொருந்தும்.

அதேபோல ஆஸ்திரேலிய அரசாங்கமும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் அந்நாட்டில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்படும் என 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தது. மாணவர் விசாவுக்கான தகுதித் தேர்வுகளையும் அது கடுமையாக்கியது.

நிதிசார் விதிமுறைகளிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய மாணவர் விசாவுக்காக விண்ணப்பிப்பவர்கள் தங்கள் சேமிப்பில் 16,29,964 ரூபாய் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கடந்தாண்டு இந்தத் தொகை 13,44,405 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த மே மாதம் இது அமலுக்கு வந்தது.

கனடா, ஆஸ்திரேலியா செல்வதைத் தவிர்க்கும் தமிழ்நாட்டு மாணவர்கள்

பட மூலாதாரம், Getty Images

புதிய விதிகளின் தாக்கம்

கனடா, ஆஸ்திரேலியா சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் மத்தியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என 'ட்ரூமேட்டிக்ஸ் ஓவர்சீஸ் எஜுகேஷன் கன்சல்டன்சி'யின் இயக்குநர் சுரேஷிடம் கேட்டோம்.

"நிச்சயமாக 40-50 சதவீத மாணவர்களை இது பாதித்துள்ளது. உதாரணமாக தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுக்கு சராசரியாக 40 ஆயிரம் பேர் வரை கல்வி கற்பதற்காக கனடாவுக்கு செல்வார்கள், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

கனடாவுக்கு அடுத்து ஆஸ்திரேலியாவை தமிழ்நாட்டு மாணவர்கள் விரும்புவார்கள், இப்போது அங்கும் விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல ஆர்வம் காட்டுகிறார்கள்" என்று கூறுகிறார் சுரேஷ்.

சமீப காலங்களில் இந்தியா- கனடா உறவில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக, பெற்றோர் பலரும் தங்கள் பிள்ளைகளை அனுப்ப தயக்கம் காட்டியதாகவும், இப்போது இந்த புதிய கட்டுப்பாடுகளால் அவர்கள் மேலும் தயங்குவதாகவும் கூறுகிறார் அவர்.

"ஆஸ்திரேலியா புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. இந்த வருடம் மே மாதம் முதல் நல்ல நிதி நிலைமை கொண்ட மாணவர்களால் மட்டுமே ஆஸ்திரேலியா மாணவர் விசா பெற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் வருடத்திற்கு குறைந்தது 15 முதல் 20 லட்சம் வரை சம்பாதிக்கும் பெற்றோர்களால் மட்டுமே தங்கள் பிள்ளைகளை அங்கு மேல்படிப்பிற்கு அனுப்ப முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது" என்று கூறுகிறார் சுரேஷ்.

பிரான்ஸ், நெதர்லாந்து, சுவீடன், அயர்லாந்து, பிரிட்டன் போன்ற நாடுகளை மாணவர்கள் மாற்றாகப் பார்க்கிறார்கள் என்றும், இந்த நாடுகளில் மாணவர் விசா கிடைப்பது எளிது என்றும் கூறுகிறார் சுரேஷ்.

தொடர்ந்து பேசுகையில், "இந்த நாடுகள் பெரும்பாலும் கல்விக் கடன் பெற்று வரும் மாணவர்களை ஏற்றுக் கொள்கிறார்கள். பெற்றோர் வருமானத்தை பார்ப்பதில்லை, அதேபோல விசா விதிகளும் எளிமையானவை. உண்மை என்னவென்றால், சர்வதேச மாணவர்கள் அல்லது புதிதாக குடியேறுபவர்கள் இனியும் தங்களுக்கு தேவையில்லை என்று ஆஸ்திரேலியா, கனடா நாடுகள் நினைக்கின்றன. வரும்காலத்தில் மீண்டும் தேவை என்று நினைத்தால் அவை விதிகளைத் தளர்த்தும்." என்கிறார்.

இந்தியா- கனடா இடையேயான கசப்புணர்வு

கனடா, ஆஸ்திரேலியா செல்வதைத் தவிர்க்கும் தமிழ்நாட்டு மாணவர்கள்

பட மூலாதாரம், Getty Images

சென்னையைச் சேர்ந்த வினோத் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கனடா செல்வதற்காக முயற்சித்து வந்தார், ஆனால் புதிய விதிகள் மற்றும் சமீபத்தில் இந்திய- கனடா உறவில் ஏற்பட்ட பதற்றங்கள் காரணமாகவும் தன்னை கனடா செல்ல வேண்டாமென பெற்றோர் கூறி விட்டதாகச் சொல்கிறார்.

"அவர்கள் பயப்படுவதிலும் ஒரு நியாயம் உள்ளது. செய்திகளில் வருவதையெல்லாம் அவர்களும் பார்க்கிறார்கள். கடன் வாங்கி என்னை படிக்க அனுப்பி வைத்துவிட்டு, கவலையுடன் தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்தவாறு அவர்களால் உட்கார முடியாது அல்லவா." என்கிறார்.

காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த வருடம் ஜுன் மாதம் கனடாவில் படுகொலை செய்யப்பட்டார். இதன் பின்னணியில் இந்திய புலனாய்வு முகமைகளின் பங்கு இருப்பதற்கான 'நம்பத் தகுந்த' ஆதாரங்கள் இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த பின் இந்தியா - கனடா உறவில் விரிசல் ஏற்பட்டது.

வினோத் குமாருக்கு அயர்லாந்து நாட்டின் பல்கலைக்கழகம் ஒன்றில், முதுகலைப் பட்டப்படிப்பு படிப்பதற்கான மாணவர் விசா கிடைத்துள்ளது. செப்டம்பர் மாதம் அவரது வகுப்புகள் தொடங்குகின்றன.

'கனடாவில் நிலைமை முன்பு போல இல்லை'

கனடா, ஆஸ்திரேலியா செல்வதைத் தவிர்க்கும் தமிழ்நாட்டு மாணவர்கள்

பட மூலாதாரம், Getty Images

முதுகலைப் படிப்பிற்காக மாணவர் விசா மூலம் கனடா சென்றவர் கோயம்புத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இப்போது அங்குள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த புதிய விதிகள் தொடர்பாக பிபிசியிடம் பேசினார்.

"பெரும்பாலும் கனடா வரும் மாணவர்களின் நோக்கம் என்பது நிரந்தரக் குடியுரிமை தான். இங்குள்ள வாழ்க்கைத் தரம் காரணமாக தான் அத்தகைய ஆசை பலருக்கும் இருந்தது. ஆனால் இன்று கனடாவில் அனைத்தும் மாறிவிட்டது. கடந்த சில வருடங்களில் விலைவாசி மிகவும் அதிகரித்துள்ளது. வரியும் மிக அதிகம்.

கொரோனா காலத்திற்கு பிறகு கனடா தனது விசா விதிகளைத் தளர்த்தியதால் தான் பலர் இங்கு வந்தனர். நானும் அப்படிதான் வந்தேன். அப்போது அவர்களுக்கு சர்வதேச மாணவர்களின் வருகை தேவைப்பட்டது, இப்போது அது தேவையில்லை என்று நினைக்கிறார்கள். எனவே புதிய கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். சமீபகால அரசியல் பிரச்னைகள் காரணமாக இந்தியர்கள் மீதான பார்வையும் மாறியுள்ளது" என்கிறார் விக்னேஷ்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)