முதலீட்டிற்கு உகந்த 10 நாடுகள் பட்டியல் - இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

முதலீடு, இந்தியா

பட மூலாதாரம், Getty Images

எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் (EIU) வணிக ரீதியாக உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

வணிகச் செய்திகளுக்குப் பெயர் பெற்ற தி எகனாமிஸ்ட் குழுமத்தின் ஆய்வுப் பிரிவின் இந்த பட்டியலில் இந்தியா 51-வது இடத்தில் உள்ளது.

EIU-ன் இந்த உலகளாவிய பட்டியலில் பெரிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு சிறந்த வாய்ப்புகளை வழங்கும் நாடுகளை உள்ளடக்கியது.

இதில் ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மை, அரசியல் சூழ்நிலை, சந்தை வாய்ப்புகள், வர்த்தக கட்டுப்பாடுகள் மற்றும் வரி விதிப்பு ஆகியவை அடங்கும்.

"அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்ன நடக்கும் என்பதை நாங்கள் மதிப்பிடுகிறோம்," என்று லத்தீன் அமெரிக்காவிற்கான EIU-ன் மூத்த பொருளாதார நிபுணர் நிக்கோலஸ் சால்டியா கூறுகிறார்.

உலகிலேயே தொழில் செய்ய சிறந்த 10 நாடுகளின் பட்டியல் - இந்தியா எந்த இடத்தில் உள்ளது?

பட மூலாதாரம், DEA/M. BORCHI/DE AGOSTINI VIA GETTY IMAGES

முதல் 10 நாடுகள்

11 வகைகளாகப் பிரிக்கப்பட்ட இந்த ஆய்வுக்காக மொத்தம் 91 குறிகாட்டிகள் தீர்மானிக்கப்பட்டன. இவற்றின் அடிப்படையில் 82 நாடுகளின் பட்டியலை ஆய்வாளர்கள் தயாரித்துள்ளனர்.

"எங்கள் பகுப்பாய்வில், அரசியல் ஸ்திரமின்மையின் ஆபத்து போன்ற குறிகாட்டிகளையும் நாங்கள் சேர்த்துள்ளோம். ஏனெனில் அது ஒரு நாட்டின் வணிகச் சூழலை பாதிக்கிறது," என்கிறார் நிக்கோலஸ்.

EIU அறிக்கையின்படி, சிங்கப்பூர், டென்மார்க் மற்றும் அமெரிக்கா ஆகியவை பட்டியலில் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன. வரும் ஆண்டுகளில் இந்த நாடுகள் அதிக முதலீட்டை ஈர்க்க முடியும். இதையடுத்து, அப்பட்டியலில் ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் இடம்பெற்றுள்ளன.

இவை தவிர, இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் கனடா, சுவீடன், நியூசிலாந்து, ஹாங்காங் மற்றும் பின்லாந்து ஆகியவை அடங்கும்.

உலகிலேயே தொழில் செய்ய சிறந்த 10 நாடுகளின் பட்டியல் - இந்தியா எந்த இடத்தில் உள்ளது?

சிங்கப்பூரின் வெற்றிக்குக் காரணம் என்ன?

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு சிறிய நாடு இந்தப் பட்டியலில் எப்படி முதலிடம் வகிக்கிறது?

60 லட்சம் மக்கள் தொகை கொண்ட சிங்கப்பூர், பெரும் முதலீட்டாளர்களுக்கு சொர்க்கமாக உள்ளது. இதற்குக் காரணம் வர்த்தகத்திற்கான வெளிப்படையான தன்மை, மாறிவரும் தொழில்நுட்பத்துடன் மாற்றங்களைக் கொண்டுவருவது, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் குறைவான ஊழல் ஆகியவை காரணங்களாக உள்ளன.

சிங்கப்பூர், தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் நிதிச் சேவைகளில் அந்நிய நேரடி முதலீட்டை வலுவாக ஊக்குவிக்கிறது. குறைவான வரிகளும் ஒரு காரணமாக உள்ளது. சிங்கப்பூர் வர்த்தகத்திற்கான தடைகளையும் நீக்குகிறது.

நிறுவனங்கள் தங்கள் நாட்டில் முதலீடு செய்ய ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல், வணிக நடவடிக்கைகளை அதிகரிக்க துறைமுகங்கள், விமான நிலையங்கள், சாலைகள் மற்றும் பொது போக்குவரத்து ஆகியவற்றில் பெரும் முதலீடுகளை செய்துள்ளது.

சிங்கப்பூர் கடல் வணிகத்திற்கான முக்கிய மையமாகவும் உள்ளது. பெரிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் மிகவும் திறமையான பணியாளர்களையும் சிங்கப்பூர் கொண்டுள்ளது.

உலகிலேயே தொழில் செய்ய சிறந்த 10 நாடுகளின் பட்டியல் - இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
படக்குறிப்பு, அர்ஜென்டினாவின் உசுவாயா நகரம்

மாற்றத்தின் பாதையில் அர்ஜென்டினா

வணிக அடிப்படையில் முதல் 10 நாடுகளைத் தவிர, மற்றொரு பட்டியலும் EIU அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில், தரவரிசையின் அடிப்படையில் நாடுகளின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை. மாறாக, நிலைமை மேம்பட்டு, வரும் ஆண்டுகளில் அதிக முதலீட்டை ஈர்க்கக் கூடிய நாடுகளின் பெயர்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த பட்டியலில் கிரீஸ் (உலகளாவிய தரவரிசையில் 34-வது இடம்), அர்ஜென்டினா (54-வது இடம்), இந்தியா (51-வது இடம்), அங்கோலா (78-வது இடம்) மற்றும் கத்தார் (26-வது இடம்) ஆகியவை உள்ளன.

வலதுசாரித் தலைவரான ஜேவியர் மைலி தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவின் அதிபரான பிறகு, அதன் நிலைமை மேம்பட்டு கிரீஸுக்கு அடுத்தபடியாக உள்ளது.

அடுத்த ஐந்தாண்டுகளில் இங்கு தனியார் முதலீட்டை ஈர்க்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

நிக்கோலஸ் கூறுகையில், "வரும் ஆண்டுகளில் இங்குள்ள அரசாங்கம் வணிகத்திற்கு எதிர்மறையான பல தலையீட்டு கொள்கைகளை மாற்றும் என்று நாங்கள் நினைக்கிறோம்" என்றார்.

குறிப்பாக சுரங்க மற்றும் எரிசக்தித் துறைகளில் வர்த்தகத்தை தாராளமயமாக்குதல், நாணயத்திலிருந்து அரசாங்கக் கட்டுப்பாட்டை அகற்றுதல் மற்றும் வெளிநாட்டு முதலீட்டை அதிகரிப்பது ஆகியவை இதில் அடங்கும்.

பொருளாதாரத்தின் திசையை மாற்றுவதில் முக்கியமானதாக நிரூபிக்கக்கூடிய விலைக் கட்டுப்பாட்டில் அரசாங்கத்தின் பங்கையும் ஜேவியர் மைலி அரசாங்கம் குறைத்து வருகிறது.

ஆனால், அர்ஜென்டினா அரசாங்கம் அந்த சீர்திருத்தங்களை தற்போதுதான் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.

"இன்னும் முன்னேற வேண்டிய இடங்கள் உள்ளன" என்று தி எகனாமிஸ்ட் கூறுகிறது.

தரவரிசையை மேம்படுத்திய மற்றொரு நாடு டொமினிகன் குடியரசு.

லத்தீன் அமெரிக்காவில் அரசியல் ரீதியாக மிகவும் நிலையானதாகக் கருதப்படும் இந்த நாடு, தொடர்ச்சியாக பொருளாதார வளர்ச்சியின் பாதையில் செல்கிறது என்று நிக்கோலஸ் கூறுகிறார்.

இருப்பினும், டொமினிகன் குடியரசு சந்தையில் வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவும், சிறிய பொருளாதாரம் என்பதால் இங்கு காலூன்றுவது மிகவும் கடினம் என்றும் அவர் கூறுகிறார்.

இருப்பினும், நிபுணர்களின் கருத்துப்படி, இந்நாடு "தொடர்ந்து முன்னோக்கி நகர்கிறது."

இந்தியாவுக்கு இளைஞர்களின் பலம்

EIU அறிக்கையின்படி, முதலீட்டாளர்கள் சீனாவுக்கு வெளியே மற்ற நாடுகளில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். இதன் மூலம் இந்தியா பயனடையலாம்.

சீனாவை விட பரந்த சந்தை வாய்ப்பை வழங்கும் ஒரே சந்தை இந்தியா. இங்கு அதிக இளைஞர்கள் உள்ளனர். மேலும், தொழிலாளர்களின் தேவைக்கேற்ப விநியோகம் சாத்தியமாகலாம்.

நாட்டில் வலுவான பொருளாதார அடிப்படைகள், டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் இளம் மக்கள்தொகை உள்ள நிலையில், உற்பத்தித் துறையில் அதிக முதலீட்டை ஈர்க்கும் வகையில் கொள்கை மாற்றங்களை நோக்கி அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.

அதேசமயம், இனிவரும் காலங்களில் கத்தாரும், இந்தியாவும் வலுவாக முன்னேறும் இரு நாடுகளாக இருக்கலாம் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. கொள்கை அளவில் பெரிய மாற்றங்கள் ஏற்படக்கூடிய நாடுகள் இவை. உள் கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு மற்றும் சந்தை வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

முதலீடு,இந்தியா

பட மூலாதாரம், Getty Images

தரவரிசையில் சரிந்த சிலி

அர்ஜென்டினாவின் அண்டை நாடான சிலி EIU தரவரிசையில் சிறந்த நிலையில் இருக்கும் லத்தீன் அமெரிக்க நாடாக உள்ளது.

இருப்பினும், அதன் தரவரிசையில் எட்டு புள்ளிகள் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த பட்டியலில் 22-வது இடத்தில் இருந்து 30 வது இடத்திற்கு சரிந்துள்ளது.

"கேப்ரியல் போரிக்கின் தற்போதைய அரசாங்கம் வணிகத்திற்கு சரிவராத கொள்கைகளை ஊக்குவித்து வருகிறது" என்கிறார் நிக்கோலஸ்.

லித்தியத்தை உதாரணமாகக் கூறும்போது, ​​அரசாங்கம் வகுத்துள்ள கொள்கையின்படி, இந்தத் துறையில் முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்கள் கட்டாயமாக அரசாங்கத்துடன் கூட்டு சேர வேண்டும் என்று கூறுகிறார்.

"இது முதலீட்டிற்கு எதிர்மறையானது" என்கிறார் நிக்கோலஸ்.

EIU இன் பகுப்பாய்வில் சிலி குறைந்த இடத்தைப் பெற்றதற்கு மற்றொரு காரணம், அரசாங்கம் தொழிலாளர் சட்டங்களை "அதிக கட்டுப்பாடுகள் கொண்டதாக" இயற்றியுள்ளது.

குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிப்பது மற்றும் வேலை நேரத்தைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகள் இதில் அடங்கும்.

சுரங்கத் துறையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

சிலியின் மக்கள்தொகையில் பெரும்பாலானோர் வயதானவர்களாக அந்த பகுப்பாய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் வெளிநாட்டிலிருந்து வெவ்வேறு கல்வி தகுதிகளுடன் வருகிறார்கள், இது நாட்டில் இளம் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதாக, EIU பகுப்பாய்வு கூறுகிறது.

EIU தரவரிசையில் இரண்டாவது லத்தீன் அமெரிக்க நாடு மெக்சிகோ (உலகளவில் 45-வது இடம்) மற்றும் மூன்றாவது கோஸ்டாரிகா (47-வது இடம்).

அதேநேரத்தில், லத்தீன் அமெரிக்கா மற்றும் முழு உலக நாடுகளின் பட்டியலில் வெனிசுலா கடைசி இடத்தில் உள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)