இந்தியா - இரான் ஒப்பந்தத்தால் பாகிஸ்தான், சீனாவுக்கு என்ன சவால்? அமெரிக்கா எதிர்ப்பது ஏன்?

இந்தியா, இரான், சாபஹார் ஒப்பந்தம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, நரேந்திர மோதி மற்றும் இப்ராஹிம் ரைசி

இந்தியா மற்றும் இரானுக்கு இடையே திங்கள்கிழமை ஒரு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இது பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு ஒரு பெரிய அடியாக கருதப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் இப்போது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஒரு விவாதத்தை உருவாக்கியிருக்கிறது. இரானுடன் ஒப்பந்தம் செய்ததால் இந்தியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படவும் சாத்தியங்கள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்திருக்கும் நிலையில், யாரும் இந்த ஒப்பந்தம் குறித்து 'குறுகிய கண்ணோட்டத்துடன்' பார்க்கக் கூடாது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

என்ன ஒப்பந்தம்?

இரானின் சாபஹார் நகரத்தில் அமைந்துள்ள ஷாஹித் பெஹெஸ்தி துறைமுகத்தை இயக்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியாவும் இரானும் கையெழுத்திட்டுள்ளன.

ஷாஹித் பெஹெஸ்தி இரானின் இரண்டாவது மிக முக்கியமான துறைமுகமாகும்.

இந்தியா போர்ட்ஸ் குளோபல் லிமிடெட் மற்றும் இரானின் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அமைப்பு ஆகியவற்றுக்கு இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தியாவின் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த் சோனோவால் இரானுக்குச் சென்று இரானிய அமைச்சருடன் இந்த முக்கியமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இரான் எல்லைக்கு அருகில் உள்ள குவாதர் துறைமுகத்தை பாகிஸ்தானும் சீனாவும் மேம்படுத்தி வருகின்றன. இந்தியா, இரான் மற்றும் ஆப்கானிஸ்தானை இணைக்கும் சாபஹார் துறைமுகம், குவாதர் துறைமுகத்திற்கு சவாலாக பார்க்கப்படுகிறது.

இது பத்து ஆண்டுகள் நீடிக்கும் ஒப்பந்தம். அதன் பிறகு அது தானாகவே நீட்டிக்கப்படும்.

2016-ஆம் ஆண்டில், ஷாஹித் பெஹெஸ்தி துறைமுகத்தை இயக்குவதற்காக இரானுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த புதிய ஒப்பந்தம் 2016 ஒப்பந்தத்தின் புதிய பதிப்பு என்று கூறப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் துறைமுகத்தில் பெரிய முதலீட்டுக்கு வழி வகுக்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் திங்கள்கிழமை தெரிவித்தார்.

இந்தியா, இரான், சாபஹார் ஒப்பந்தம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க வெளியுறவுத் துறையின் முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல்

அமெரிக்காவின் 'எச்சரிக்கையும்' இந்தியாவின் பதிலும்

இந்நிலையில் இரானுடன் இந்தியா இந்த ஒப்பந்தத்தைச் செய்ததால் இந்தியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படவும் சாத்தியங்கள் உள்ளதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.

அதற்கு பதிலளித்திருக்கும் இந்திய வெளியுறவித்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இந்த விஷயத்தைக் குறித்து யாரும் 'குறுகிய கண்ணோட்டத்துடன்' பார்க்கக்கூடாது என்று தெரிவித்திருக்கிறார்.

செவ்வாய்க்கிழமை (மே 14), அமெரிக்க வெளியுறவுத் துறையின் முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல், இரான்மீது அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் அமலில் இருப்பதாகவும், "இரானுடன் வணிகத் தொடர்பில் இருக்கும் எவர்மீதும் இந்தத் தடைகள் விதிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன," என்றார்.

இதுகுறித்துப் பேசிய அவர், அமெரிக்காவே கடந்தகாலத்தில் சாபஹார் துறைமுகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருப்பதாகத் தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (மே 14) கொல்கத்தாவில் அவர் எழுதிய நூலின் வங்காள மொழிபெயர்ப்பின் வெளியீட்டு விழாவில் உரையாற்றியபோது இதை அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவின் கூற்றைப்பற்றிக் கேட்கப்பட்டபோது, "இது பேச்சுவார்த்தை மூலம் அனைவருக்கும் சாதகமானது என்று புரியவைக்கப் படவேண்டிய விஷயம்." என்றார்.

மேலும் பேசிய அவர், "சாபஹார் துறைமுகத்துடன் இந்தியாவுக்கு நீண்ட உறவு இருக்கிறது. ஆனால் முன்னர் இவ்விஷயத்தில் நீண்டகால ஒப்பந்தம் செய்ய முடியவில்லை, காரணம் இரான் தரப்பில் சில சிக்கல்கள் இருந்தன. ஆனால் ஒருவழியாக இப்போது நீண்டகால ஒப்பந்தத்தைச் செய்யமுடிந்திருக்கிறது. இது அவசியமானது. இந்த ஒப்பந்தம் இல்லாமல் துறைமுகத்தின் நிர்வாகத்தரத்தை மேம்படுத்தமுடியாது. இந்தத் துறைமுகத்தின் நிர்வாகம், அந்த ஒட்டுமொத்த பூகோளப் பகுதிக்கும் லாபகரமாக இருக்கும் என்று நம்புகிறோம்," என்றார்.

இந்தியா, இரான், சாபஹார் ஒப்பந்தம்

பட மூலாதாரம், MEA

படக்குறிப்பு, இப்ராஹிம் ரைசி மற்றும் நரேந்திர மோதி

ஒப்பந்தம் பற்றி இந்தியா சொல்வது என்ன?

இந்த ஒப்பந்தம் பிராந்திய இணைப்பு மற்றும் ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியா மற்றும் யூரேசியாவிற்கு பாதைகளை திறக்கும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா போர்ட்ஸ் குளோபல் லிமிடெட் சுமார் 120 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் என்று செய்தி முகமை ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது. இந்த முதலீட்டுடன் கூடுதலாக 250 மில்லியன் டாலர் நிதி உதவி வழங்கப்படும். இதன் மூலம் இந்த ஒப்பந்தம் சுமார் 370 மில்லியன் டாலர் மதிப்புடையதாக இருக்கும்.

இந்தியா போர்ட்ஸ் குளோபல் லிமிடெட் இந்த துறைமுகத்தை முதன்முதலில் 2018 இன் பிற்பகுதியில் இயக்கத் தொடங்கியது.

இந்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை கடந்த 3 ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வந்தது.

இரானின் சாபஹார் துறைமுகம் மூலம் ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவிற்கான தனது அணுகலை மேலும் எளிதாக்க இந்தியா விரும்புகிறது.

இந்தியாவின் செயல் உத்தி மற்றும் தூதாண்மை நலன்களுக்கும் இந்த துறைமுகம் மிகவும் முக்கியமானது.

சாபஹார் துறைமுக விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. அவை தீர்க்கப்பட்டு இப்போது இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

இந்தியா, இரான், சாபஹார் ஒப்பந்தம்

பட மூலாதாரம், X/@INDIA_IN_IRAN

படக்குறிப்பு, இந்தியாவின் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த் சோனோவால் இரானுக்குச் சென்று இரானிய அமைச்சருடன் இந்த முக்கியமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்

ஜெய்சங்கரை சந்தித்த இரான் அதிபர் வலியுறுத்தல்

இந்த ஆண்டு ஜனவரியில் இரான் அதிபர் இப்ராகிம் ரைசி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார்.

இந்த சந்திப்பில் இந்தியா மற்றும் இரான் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை செயல்படுத்துவது மற்றும் விரைவுபடுத்துவது குறித்து அதிபர் இப்ராஹிம் ரைசி வலியுறுத்தினார்.

இந்தியாவுக்கும் இரானுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் ஏற்பட்டுள்ள தாமதத்தை போக்கவேண்டிய அவசியம் உள்ளது என்றும் ரைசி கூறியிருந்தார். ரைசி சாபஹாரை மனதில் வைத்து அவ்வாறு கூறியிருந்தார்.

2023-இல், பிரதமர் நரேந்திர மோதிக்கும் இரான் அதிபர் ரைசிக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்தபோது, சாபஹார் விவகாரம் எழுப்பப்பட்டது.

சாபஹாரைப் பொறுத்தவரை திட்ட தாமதம் காரணமாக இரான் இந்தியா மீது அதிருப்தியுடன் இருப்பதாக கூறப்பட்டது.

இந்த திட்டத்தை இந்தியா விரைவில் முடிக்க வேண்டும் என இரான் விரும்புகிறது. சீனா தனது திட்டங்களை விரைவாக செயல்படுத்துகிறது. ஆனால் இந்தியா அதைச் செய்ய முடியாத நிலையில் சீனாவுடன் இந்தியா ஒப்பிடப்படுகிறது.

சீனாவிற்கு பணம் மற்றும் வளங்களுக்குப் பஞ்சமில்லை. எனவே அதன் கை மேலோங்கி உள்ளது என்று பல வல்லுனர்கள் நம்புகிறார்கள்.

அமெரிக்காவின் தடைகள் காரணமாகவும் இந்த துறைமுகத்தை மேம்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது என்று செய்தி முகமை ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது.

இந்தியா மற்றும் இரான் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானபோது அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்தியா, இரான், சாபஹார் ஒப்பந்தம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இப்ராஹிம் ரைசி 2023 இல் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார்.

சாபஹார் ஒப்பந்தத்தால் பாகிஸ்தான், சீனாவுக்கு என்ன சவால்?

அரபிக்கடலில் சீனாவின் இருப்பை சவால் செய்வதில் இந்தியாவுக்கு சாபஹார் துறைமுகம் உதவிகரமாக இருக்கும்.

பாகிஸ்தானில் உள்ள குவாதர் துறைமுகத்தை சீனா மேம்படுத்தி வருகிறது.

இந்த துறைமுகம் சாபஹார் துறைமுகத்திலிருந்து சாலை வழியாக 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கடல் வழியாக வெறும் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இதன் மூலம் குவாதர் மற்றும் சாபஹார் துறைமுகம் தொடர்பாக இந்தியா - சீனா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

உத்திசார் கண்ணோட்டத்தில் பார்த்தால் குவாதர் துறைமுகத்தில் சீன இருப்பு இந்தியாவிற்கு பிரச்னைகளை உருவாக்கலாம். இத்தகைய சூழ்நிலையில் சாபஹார் துறைமுகத்தில் இந்தியா இருப்பதே சாதகமாக கருதப்படுகிறது.

"இரான் இந்தியாவுடன் வரலாற்று உறவுகளைக் கொண்டுள்ளது. அந்த நல்லுறவைத் தக்கவைக்க இந்தியா முயற்சிக்கும். சாபஹார் துறைமுகத்தின் பணிகளை தொடரவும் இந்தத் திட்டத்துடன் தொடர்ந்து இணைந்திருக்கவும் இந்தியா விரும்பும்,” என்று மத்திய கிழக்கு விவகாரங்களில் நிபுணரான கமர் ஆகா பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியபிறகு மத்திய ஆசியாவுடனான இந்தியாவின் நேரடித் தொடர்பு குறைந்துவிட்டது. தேவை ஏற்பட்டால் சாபஹார் மூலம் இந்தியா இப்போது காபூல் வரை தனது செல்வாக்கை செலுத்த முடியும். மேலும் மத்திய ஆசிய நாடுகளுடனான வர்த்தகமும் அதிகரிக்கும்.

முன்னதாக, ஆப்கானிஸ்தானுக்கு உணவு தானியங்களை வழங்க பாகிஸ்தானின் சாலைகளை இந்தியா பயன்படுத்த வேண்டியிருந்தது.

இந்த துறைமுகம் மூலம் இந்தியா எண்ணெய் மற்றும் எரிவாயுக்கான பெரிய சந்தையை அணுகமுடியும்.

இந்தியா, இரான், சாபஹார் ஒப்பந்தம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2019-ஆம் ஆண்டில் முதல் முறையாக, ஆப்கானிஸ்தானில் இருந்து பொருட்கள் பாகிஸ்தானைத் தவிர்த்து, இந்த துறைமுகத்தைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு வந்தன.

சாபஹார் துறைமுகம் ஏன் முக்கியமானது?

இரானின் கடலோர நகரமான சாபஹாரில் துறைமுகத்தை மேம்படுத்துவதற்காக இந்தியா மற்றும் இரான் இடையே 2003 இல் ஒப்பந்தம் ஏற்பட்டது.

2016-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோதி இரான் சென்றார். 15 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் இரானுக்குச் சென்றது அதுவே முதல்முறை.

இந்த ஒப்பந்தம் 2016-ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது.

கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் முறையாக இந்த துறைமுகத்தை பயன்படுத்தி ஆப்கானிஸ்தானில் இருந்து பொருட்கள் இந்தியாவிற்கு வந்தன.

2020-ஆம் ஆண்டில் ஒரு திட்டத்தில் இருந்து இந்தியாவை இரான் விலக்கியதாக அறிக்கைகள் வெளிவந்தன.

சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத்திற்கு அதாவது INSTC-க்கு சாபஹார் துறைமுகம் மிகவும் முக்கியமானது,

இந்த வழித்தடத்தின் கீழ், இந்தியா, இரான், ஆப்கானிஸ்தான், ஆர்மீனியா, அஜர்பைஜான், ரஷ்யா, மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கு இடையே சரக்குகளை கொண்டு செல்வதற்காக 7,200கி.மீ. நீளமுள்ள கப்பல், ரயில் மற்றும் சாலை வலையமைப்பு உருவாக்கப்பட உள்ளது.

இந்த பாதையானது இந்தியாவின் ஐரோப்பாவுக்கான அணுகலை எளிதாக்குவதுடன் இரான் மற்றும் ரஷ்யாவிற்கும் பயனளிக்கும். இந்த திட்டத்திற்கு இரானின் சாபஹார் துறைமுகம் மிகவும் முக்கியமானது.

பிரதமர் மோதியின் பயணத்தின் போது, ரயில்வே ஒப்பந்தத்தில் ஏற்பட்ட தாமதம் குறித்து இரானின் கோபத்தை பார்க்க முடிந்தது.

டெல்லியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டின்போது புதிய வர்த்தகப் பாதை அமைக்க ஒப்புக்கொள்ளப்பட்டபோது, இந்தத் திட்டத்தின் எதிர்காலம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

இந்தியா-ஐரோப்பா-மத்திய கிழக்கு வழித்தடம் உருவானால், சாபஹார் துறைமுகத்துக்கு அதிக முக்கியத்துவம் இருக்காது என்று கூறப்பட்டது. இரானின் மீதான புறக்கணிப்பாகவும் இது பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது இந்தியாவுக்கும் இரானுக்கும் இடையே சாபஹார் விவகாரத்தில் முக்கிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் படர்ந்த பனி உருகுவது போல இது பார்க்கப்படுகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)