உலகம் முழுவதும் பல கோடி மக்களின் பசி போக்கிய 'கொலைகார விஞ்ஞானி'

ஃபிரிட்ஸ் ஹேபர் - கொலைகார விஞ்ஞானி

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், ஆங்கா பதக்
  • பதவி, பிபிசி மராத்தி

நான் குழந்தையாக இருக்கும்போது, பள்ளி தேர்வுகளில் கட்டுரை எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்தேன். அறிவியல் வரமா அல்லது சாபமா? என்ற அந்த தலைப்பின் சாட்சியாகவே ஒருவர் வாழ்ந்திருக்கிறார்.

வரலாறு அவர் மீது வெள்ளை அல்லது கருப்பு நிறங்களை பூசலாம். ஒருவரின் குடும்பத்திற்கு பேரிடர் அல்லது ஏழு தலைமுறைகளின் உயிரை காப்பாற்றிய ஒருவர் என்று வரலாறு கூறலாம்.

இவரின் கண்டுபிடிப்புகளில் ஒன்று லட்சக்கணக்கானோர் உயிரிழக்க காரணமாக இருந்தாலும், கோடிக்கணக்கான உயிர்களை காப்பாற்றவும் செய்துள்ளது. யார் இந்த விஞ்ஞானி, அவர் அப்படி என்ன செய்தார்?

அவரின் பெயர் ஃபிரிட்ஸ் ஹேபர்.

உலகில் இன்று ஐந்தில் இரண்டு பேர் உயிர் வாழ இந்த விஞ்ஞானியே காரணம் என்று கூறப்படுகிறது. ஏனெனில், இவரது கண்டுபிடிப்பு அத்தகையது. ஆனாலும், அவர் ஒரு ‘கொலைகாரர்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

எளிமையான வார்த்தைகளில் கூற வேண்டுமானால், அவர் இரசாயன உரங்கள் மற்றும் இரசாயன வாயுக்களை உருவாக்கினார். ஆனால், எதுவும் எளிமையாக நடக்கவில்லை. இந்த இரண்டு கண்டுபிடிப்புகளும் உலகையே புரட்டி போட்டன.

தேசபக்தியை நிரூபிக்கும் உணர்வால் வேட்டையாடப்பட்ட குழந்தைப் பருவம்

ஃபிரிட்ஸ் ஜெர்மனியை சேர்ந்த விஞ்ஞானி. அது மட்டுமின்றி அவரும் பிறப்பின் அடிப்படையில் ஒரு யூதர், பின்னர் அவர் கிறிஸ்துவத்துக்கு மாறி விட்டார்.

இவர் 1868 ஆம் ஆண்டு ப்ரெஸ்லாவ் நகரில் பிறந்தவர். இந்த நகரம் தற்போது போலந்தில் உள்ளது, ஆனால் அந்த காலகட்டத்தில் பிரஷ்ய பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது.

“பிறந்த சில வாரங்களிலேயே அவர் தனது தாயை இழந்தார். தனது மனைவி இறந்த சோகத்தில் அவரது தந்தையும் இவரை புறக்கணித்துவிட்டார்” என்று தெரிவிக்கிறார் ‘மாஸ்டர் மைண்ட் , ஃபிரிட்ஸ் ஹேபரின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி’ என்ற புத்தகத்தின் ஆசிரியரான அமெரிக்க பத்திரிக்கையாளர் டேன் சார்லஸ்.

ஃபிரிட்ஸின் 7 வயதில் அவரது தந்தை மறுமணம் செய்து கொண்டார். இதனால், அவருக்கு மூன்று ஒன்றுவிட்ட சகோதரிகளும் இருந்தனர்.

ஃபிரிட்ஸ் தனது இரண்டாம் தாயிடம் நல்ல உறவைக் கொண்டிருந்தார், அதே சமயம் அவரது தந்தையிடமிருந்து விலகியே இருந்தார்.

“அவர்கள் இருவரும் வெவ்வேறு குணங்களுடையவர்களாக இருந்ததாக” கூறுகிறார் டேன். ஃபிரிட்ஸ் தந்தை இயல்பாக பெண்களுடன் நெருங்கி பழகுபவராக இருந்த நிலையில், ஃபிரிட்ஸோ அனைவருக்கும் உதவும் குணம் கொண்டவராக இருந்தார். ஃபிரிட்ஸ் குடும்ப தொழிலை செய்ய வேண்டும் என்று அவரது தந்தை விரும்ப, ஃபிரிட்ஸோ வேதியலில் ஆர்வமாக இருந்தார். இந்த வேறுபாடுகளின் காரணமாக, அவர் வீட்டை விட்டே வெளியேறிவிட்டார்.”

ஃபிரிட்ஸ் ஹேபர் - கொலைகார விஞ்ஞானி

பட மூலாதாரம், Getty Images

ஃபிரிட்ஸ் குறித்து புரிந்து கொள்ள வேண்டுமென்றால், நீங்கள் அந்த கால ஜெர்மனி குறித்து படிக்க வேண்டும். 19ம் நூற்றாண்டில் ஜெர்மனி இப்படியான நாடாக இருக்கவில்லை. அப்போதைய பிரஷ்யப் பேரரசு வெவ்வேறு சமஸ்தானங்களாக இருந்தது மற்றும் தொடர்ந்து போரில் ஈடுபட்டு கொண்டிருந்தது.

1871 ஆம் ஆண்டு நடைபெற்ற போர் பிரஷ்ய பேரரசின் முடிவாக அமைந்தது. பல்வேறு சிற்றரசுகளாக இருந்த அந்நாடு கலைக்கப்பட்டு ஜெர்மனியாக உருவாக்கப்பட்டது.

ஃபிரிட்ஸுக்கு அப்போது 3 வயது. அந்த சமயத்தில் புதிய தேசம் உருவானதால், தேசிய உணர்வும் வலுப்பெற்றது.

தேச பக்தி என்ற கருத்து அப்போது புதிதாக பிறந்து, எப்படி அந்த சூழலில் குழந்தையாக இருந்த ஃபிரிட்ஸை பாதித்தது என்பதை பின்னர் பார்க்கலாம்.

புதிதாக அமைந்த ஜெர்மனியின் மன்னர் கெய்சர் வில்லியம். பொருளாதாரத்தில் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவை விட ஜெர்மனி பின்தங்கியிருப்பதை அவர் புரிந்து கொண்டார். எனவே, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்துறையில் அந்த ஆராய்ச்சியின் பயன்பாடுகளை ஆதரித்தார் அவர்.

புதிய ஜெர்மனியில் அறிவியல் ஒரு புதிய நாணயமாக உருவெடுத்தது.

அதே சமயம் மற்றொரு மாற்றமும் ஜெர்மனியில் நிகழ்ந்து கொண்டிருந்தது. யூத மதத்திற்கு எதிராக ஒரு எதிர்மறை உணர்வு ஜெர்மனியில் உருவாகி வந்தது, யூதர்கள் நசுக்கப்பட்டார்கள். இந்த உணர்வே 30-40 ஆண்டுகளுக்குப் பிறகு ஹிட்லரின் நாஜி சித்தாந்தத்தின் அடித்தளமாக மாறியது.

ஃபிரிட்ஸ் ஹேபர் - கொலைகார விஞ்ஞானி

பட மூலாதாரம், Getty Images

ப்ரெஸ்லாவில் இளம் வயது ஃபிரிட்ஸுக்கு சிறையில் அடைக்கப்பட்டது போல் இருந்தது. அங்கு அவர் வாழ்ந்த வாழ்க்கை அவருக்கு சோர்வை அளித்தது. அவரோ வானத்தைத் தொட விரும்பினார்.

“வாழ்க்கை மற்றும் எதிர்காலம் என்ற முடிவில்லா கடலில் நீங்கள் பயணம் செய்யும்போது உங்களை வழிநடத்தும் ஒரே விஷயம் உங்கள் விருப்பம். அதற்கான ஒரே எல்லை உங்கள் கல்விதான்” என்று தனது இளம் வயதில் எழுதினார் ஃபிரிட்ஸ்.

வேதியியல் படிப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறி பெர்லின் சென்றார் இளம்வயது ஃபிரிட்ஸ். ஒரு கிராமத்தை சேர்ந்த சாதாரண யூத சிறுவன் என்பதில் இருந்து மாறி வெற்றிகரமான யூத குடிமகனாக வேண்டும் என்பதே அவரது கனவு.

ஆனால், வேதியலை கற்பது ஒன்றும் அவர் நினைத்தது போல் அவ்வளவு எளிமையாக இல்லை. அவருக்கும் அது கடினமாகவே இருந்தது. அவர் தனது பல்கலைக்கழகத்தை மாற்றினார். பட்டம் பெற்ற பிறகு சில வருடங்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் பணிபுரிந்தார். இதற்கிடையில் அவர் தனது தந்தையின் தொழிலையும் சில நாட்கள் கவனித்து கொண்டார்.

பெர்லினில் இருந்த சமயத்தில் அங்கு வளர்ந்து வந்த யூத-விரோத உணர்வை அறிந்து கொண்டார் ஃபிரிட்ஸ். அப்போது என்ன நடந்தது என்று தெளிவாக தெரியவில்லை, ஆனால் அவர் கிறிஸ்துவத்தை தழுவி விட்டார்.

இந்த யூத-வெறுப்பு அவரது வாழக்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜெர்மன் சமூகத்தில் மரியாதை மற்றும் பாராட்டை பெறுவதே அவரது நிலையான போராட்டமாக இருந்தது. தான் ஒரு உண்மையான ஜெர்மானியன் என்பதை நிரூபிக்கும் பொருட்டு, அவர் பல செயல்களை செய்தார். அதில் மில்லியன் கணக்கான உயிரை காவு வாங்கிய ஒரு சம்பவமும் அடங்கும்.

‘கொலைகார’ விஞ்ஞானி

பெர்லினில் உள்ள சுவர் ஒன்றில் 'கொலைகாரன்' என்ற வார்த்தை ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டுள்ளது. அந்த வார்த்தை ஃபிரிட்ஸைக் குறிக்கும். அவர் எப்படி மக்களின் உயிரைக் காப்பாற்றினார் என்பதை தெரிந்து கொள்வதற்கு முன், ஏன் அவர் 'கொலைகாரர்' என்று அழைக்கப்படுகிறார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

முதலாம் உலகப்போர் வேதியல் ஆயுதங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. அதற்க்கு முன்பெல்லாம், போரில் இறந்த மக்கள், வெறும் துப்பாக்கி மற்றும் பீரங்கிகளால் கொல்லப்பட்டவர்கள் மட்டுமே.

ஆனால், நூற்றுக்கணக்கான மக்களை ஒரே நேரத்தில் கொல்லக்கூடிய விஷ வாயு அப்போது பயன்படுத்தப்படவில்லை. இந்த நச்சு வாயுக்களின் எரியும் தன்மையை முழுமையாக தடை செய்தது 1925 ஜெனிவா உடன்படிக்கை.

அதற்கு பிறகு அவை இடையிடையே பயன்படுத்தப்பட்டாலும், முதல் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட அளவிற்கு பயன்படுத்தப்படவில்லை.

ஃபிரிட்ஸ் தான் இந்த இரசாயன ஆயுதங்களின் பிறப்பிடம்.

வேதியியலில் ஒரு புதிய முறையைக் கண்டுபிடித்தார் ஃபிரிட்ஸ். அதைப் பயன்படுத்தி குளோரின் வாயுவைத் தயாரித்தார். இவர்தான் முதலாம் உலகப் போரின் போது ஜெர்மனி இரசாயன ஆயுதத் துறையின் தலைவராக இருந்தார்.

1915 இல் பெல்ஜியத்தில் உள்ள ஈப்ராவில் தான் முதன் முதலில் ஃப்ரிட்ஸ் தயாரித்த குளோரின் வாயு பயன்படுத்தப்பட்டது. அப்போது இந்த ஆயுதம் பற்றிய அறிவும், பாதுகாப்பும் இல்லாத 1,100 எதிரி வீரர்கள் கொல்லப்பட்டனர்.

குளோரின் வாயு உடலுக்குள் சென்றவுடன் , மார்பில் உள்ள தண்ணீரோடு கலக்கும் அது ஹைட்ரோக்ளோரிக் அமிலத்தை உருவாக்குகிறது. அந்த அமிலம் உடலில் உள்ள செல்களை அழித்து அந்த நபர் உயிரிழக்க காரணமாகிறது. சரியான நேரத்திற்கு அவர்களுக்கு சிகிச்சை கொடுத்தாலும் கூட இதனால் நுரையீரல் நோய் மற்றும் குறைபாடுகளை உருவாகும்.

ஃபிரிட்ஸ் ஹேபர் - கொலைகார விஞ்ஞானி

பட மூலாதாரம், Getty Images

ஆனால், விரைவிலேயே ஜெர்மனிக்கு எதிரான படைகள் எப்படி குளோரின் வாயுவை தவிர்ப்பது என்பதை கற்றுக்கொண்டன.

குளோரின் வாயு தண்ணீரில் கரையக்கூடியது. எனவே, ஒருவர் தனது வாய் மற்றும் மூக்கை தண்ணீரில் நனைத்த துணி அல்லது தங்களது சிறுநீரில் நினைத்த துணியால் அடைத்து கொண்டால் குளோரின் வாயு அதில் கரைந்து விடும். அதனால், உடலுக்குள் செல்லாது. இது போன்ற சூழலில் கண்ணெரிச்சல், வாந்தி, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம். ஆனால், உயிரிழப்போ அல்லது குறைபாடுகளோ ஏற்படாது.

இதனால், ஃபிரிட்ஸ் மற்றொரு புதிய வாயுவை உருவாக்க வேண்டியிருந்தது. பாஸ்ஜீன்(phosgene) தான் அவரது அடுத்த கண்டுபிடிப்பு. இதுவும் முதலில் ஈப்ராவில் தான் பயன்படுத்தப்பட்டது.

பாஸ்ஜீன் ஒரு நிறமற்ற வாயு, அது ஈரமான புல் போன்ற வாசனையுடன் இருந்தது. ஆனால் அது வாசனைக்கு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். மற்ற நேரங்களில் வாசனை கூட இருக்காது. ஆனால் இந்த வாயு மிகவும் விஷத்தன்மை கொண்டது. இது நுரையீரலில் உள்ள புரதங்களுடன் இணைந்து இரத்த ஓட்டத்தை நிறுத்தி விடும் என்பதால் அந்த நபர் இறந்து விடுவார்.

ஜெர்மனிக்குப் பிறகு, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவின் பிற நாடுகளும் ஃபாஸ்ஜின் வாயுவைப் பயன்படுத்தத் தொடங்கின.

முதல் உலகப் போரின்போது இந்த விஷ வாயுக்களால் சுமார் 91 ஆயிரம் பேர் இறந்தனர்.

ஃபிரிட்ஸ் இரசாயன ஆயுதங்களின் தந்தை என்று கூறப்படுகிறது. அவரும் இன்னொரு விஷயத்தைப் பெற்றெடுத்தார், ஆனால் அதற்குப் பிறகு வருவோம்.

முதலாம் உலகப் போரின் போது, ஃபிரிட்ஸ், கெய்சர் வில்ஹெல்மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார். அங்கு அவர் குளோரின் வாயுவைப் பரிசோதிக்கத் தொடங்கினார். இதன் மூலம் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்றார்கள்.

ஈப்ராவில் 1,100 எதிரி வீரர்களைக் கொன்ற பிறகு, அவர் ஜெர்மன் இராணுவத்தில் கேப்டன் பதவிக்கு உயர்த்தப்பட்டார். ஃபிரிட்ஸ் தனது வெற்றியைக் கொண்டாடும் அதே நாளில், அவரது மனைவி கிளாரா தற்கொலை செய்து கொண்டார்.

ஆட்களைக் கொல்லும் கணவனின் வேலை அவளுக்குப் பிடிக்கவில்லை.

ஆனால் ஃபிரிட்ஸ் ராணுவத்திற்காக பல்வேறு இரசாயன ஆயுதங்களைத் தொடர்ந்து உருவாக்கினார்.

போர் முடிந்ததும், ஜெர்மனி தோற்றது. ஃபிரிட்ஸ் மறுமணம் செய்து கொண்டார். ஆனால் அவரது எதிர்காலம் இருண்டது. அவருக்கு 1915 இல் நோபல் பரிசும் வழங்கப்பட்டது, ஆனால் அவர் போர்க்குற்றங்களுக்காக பிடிபட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று பயந்தார்.

ஃபிரிட்ஸ் ஹேபர் - கொலைகார விஞ்ஞானி

பட மூலாதாரம், AP

காற்றில் இருந்து ரொட்டியைப் பறிக்கும் விஞ்ஞானி

ஃபிரிட்ஸூக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய நிகழ்வு என்று சொன்னால் தவறில்லை.

நம் முன்னோர்களை வாழ வைத்து, இன்று நாம் வாழ வைத்த கண்டுபிடிப்புக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.

பத்தொன்பதாம் நூற்றாண்டு நெருங்கும் போது, உலகம் ஒரு பெரிய பிரச்னையை எதிர்கொண்டது. அது பசி.

மக்கள் தொகை பெருகியது, உண்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது ஆனால் நிலம் அப்படியே இருந்தது. எவ்வளவு வருமானம் வருகிறதோ அவ்வளவு வருமானம் வரும்.

இப்போது பசி, உணவு போன்றவற்றால் போர்கள் வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

அந்த நேரத்தில், தாவரங்களின் வளர்ச்சிக்கு நைட்ரஜன் அவசியம் என்பது அனைவருக்கும் தெரியும். நைட்ரஜன் பூமியில் ஏராளமாக உள்ளது. வளிமண்டலத்தில் 70 சதவீதத்திற்கும் அதிகமான நைட்ரஜன் உள்ளது. ஆனால் அது நைட்ரஜன் வாயு வடிவில் இருந்ததுதான் மிகப்பெரிய பிரச்சனை.

பல தசாப்தங்களாக, வாயு நைட்ரஜனை எவ்வாறு உறுதிப்படுத்துவது மற்றும் மண்ணில் சேர்ப்பது என்ற கேள்வியுடன் ஆராய்ச்சியாளர்கள் போராடி வந்தனர். வயல்களில் ஆடுகளை வைப்பதையோ அல்லது கோழி எருவை தயாரிப்பதையோ அல்லது மோசமான நிலையில், தென் அமெரிக்காவில் காணப்படும் நைட்ரேட் கலவைகளை மண்ணில் சேர்ப்பதையோ தாண்டி யாரும் பெரிதாக செய்ய முன்வரவில்லை.

ஃபிரிட்ஸ் ஹேபர்தான் இதற்கான விடையைக் கண்டுபிடித்தார். 1909 ஆம் ஆண்டில், நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜனில் இருந்து அமோனியாவை ஒருங்கிணைக்கும் நுட்பத்தை அவர் உருவாக்கினார்.

கார்ல் போஷ், ஒரு இரசாயன பொறியாளர், அவரது சக ஊழியர். இருவரின் பணி ஹேபர்-போஷ் முறைக்கு வழிவகுத்தது, இது இன்றும் பயன்படுத்தப்படுகிறது.

இன்று வயல்களில் பயிர்கள் செழித்து வளர்ந்திருப்பது இருவரது பெருமையும் தான்.

ஃபிரிட்ஸ் அந்த நேரத்தில் 'ரொட்டியை மெல்லிய காற்றிலிருந்து வெளியே எக்கும்' விஞ்ஞானி என்று பாராட்டப்பட்டார்.

அதே அமோனியா பின்னர் ரசாயன உரங்களில் பயன்படுத்தப்பட்டது. ரசாயன உரங்களின் பயன்பாடு எல்லா இடங்களிலும் தொடங்கியது. இந்தியாவிலும் பசுமைப் புரட்சி ஏற்பட்டது.

பல தலைமுறைகளாக பட்டினியால் வாடிய நம் முன்னோர்கள் அதன் பின்னரே நிரம்ப சாப்பிட்டு, நம்மைப் பெற்றெடுத்தனர். அந்த வகையில் உலகம் முழுவதும் பல கோடி மக்களின் பசியைப் போக்கியவர் அவர்.

ஃபிரிட்ஸ் கிட்டத்தட்ட 400 கோடி மனிதர்களைப் பெற்றெடுத்த பெருமைக்குரியவர். ரசாயன உரங்களுக்கு வழிவகுக்காமல் இருந்திருந்தால், இன்று பூமியில் இவ்வளவு மக்கள் தொகை இருந்திருக்காது.

இது 20 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு.

ஃபிரிட்ஸ் ஹேபர் - கொலைகார விஞ்ஞானி

பட மூலாதாரம், IRRI

ஆனால் அவை இரசாயன ஆயுதங்களுக்கும் வழிவகுத்தன. லட்சக்ணக்கான யூதர்களைக் கொல்ல ஹிட்லர் எரிவாயு அறைகளில் பயன்படுத்திய விஷ வாயுவும் ஃபிரிட்ஸின் ஆராய்ச்சியின் அடிப்படையிலானது என்று கூறப்படுகிறது.

ஃபிரிட்ஸ் பூச்சிக்கொல்லி வாயுக்கள் எனப்படும் மேலும் சில நச்சு வாயுக்களை உருவாக்கினார். இது ஸைக்ளோன் (Zyklon) செயல்முறைக்கு வழிவகுத்தது. இது ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொல்ல ஹிட்லருக்கு உதவியது.

ஃபிரிட்ஸின் உறவினர்கள் பலர் ஹிட்லரின் வதை முகாம்களில் கொல்லப்பட்டனர்.

நிச்சயமாக அதை பார்க்க ஃபிரிட்ஸ் உயிருடன் இல்லை. அவரும் தனது சொந்த ஆராய்ச்சியின் காரணமாகவே இறந்தார்.

காலத்தின் கோலத்தைப் பாருங்கள், லட்சக்கணக்கான யூதர்களைக் கொன்ற ஆயுதத்தைக் கண்டுபிடித்தவர் பிறப்பால் யூதர்.

சோக முடிவு

முதல் உலகப் போரில் ஜெர்மனி தோல்வியடைந்ததால் ஃபிரிட்ஸும் பாதிக்கப்பட்டார். இரசாயன வாயுவை உருவாக்கியதற்காகத் தண்டிக்கப்படுவார் என்ற அச்சத்தில் சில காலம் வாழ்ந்தார்.

மறுபுறம், முதல் உலகப் போரில் வென்ற நாடுகளால் ஜெர்மனி கடுமையாக தண்டிக்கப்பட்டது. அந்த தேசம் துன்பத்தில் இருந்தது. அபராதம் செலுத்த வேண்டிய நிலையில் பொருளாதாரம் அதல பாதாளத்தில் வீழ்ந்துவிட்டது.

இந்த காலகட்டத்தில், ஜெர்மனியை கடனில் இருந்து விடுவிக்க ஃபிரிட்ஸ் கடல் நீரில் தங்கத்தை உருவாக்க முயன்றார். ஆனால் அதில் அவர் தோல்வியடைந்தார்.

ஜெர்மனியில் யூத எதிர்ப்பு உச்சத்தில் இருந்தது. 1930கள் விடிந்தன. ஒரு மனிதர் ஜெர்மனி மக்களுக்கு செல்வம் மற்றும் பேரரசின் கனவைக் காட்டத் தொடங்கினார். யூதர்களால் தான் இந்த நிலைமை நமக்கு வந்தது என்று பிரசாரம் செய்த அவரது பெயர் அடால்ஃப் ஹிட்லர்.

ஃபிரிட்ஸின் மகள் ஈவா பிபிசி ரேடியோ 4 இன் கிறிஸ் பவுல்பியிடம் கூறினார், "ஒரு சமயம் அவர் (ஃபிரிட்ஸ்) தனது பல்கலைக்கழகத்திற்குச் சென்றபோது, தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் அவரை அவமானப்படுத்திவிட்டு வெளியேறச் சொன்னார், யூதர்கள் இங்கு அனுமதிக்கப்படவில்லை." என்று அவர் கூறினார்.

ஆகவே, அவர் ராஜினாமா செய்தார்.

ஜெர்மனிக்காக எவ்வளவோ உதவிகளை செய்தும், அந்த நாட்டாலேயே இப்படி நடத்தப்பட்டதன் ஏமாற்றத்தையும் அவமானத்தையும் ஃபிரிட்ஸால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

ஜெர்மன் சமூகத்தில் யூத வெறுப்பு அந்த அளவுக்கு மிகவும் ஆழமாக வேரூன்றியிருந்தது. அது ஃபிரிட்ஸ் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதையும் ஜெர்மனி போரில் எதிரிகளை திணறடிக்க அவர் இரசாயன வாயுவை உருவாக்கி கொடுத்ததையும் கூட கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.

இதற்குப் பிறகு, ஃப்ரிட்ஸும் சில காலம் தலைமறைவாகிவிட்டார். அவர் 1934 இல் மாரடைப்பால் இறந்தார்.

மனித குலத்திற்கு இவ்வளவு பெரிய கண்டுபிடிப்பை செய்தாலும், அவரும், அவரது பணியும் சற்றே புறக்கணிக்கப்பட்டது. அவரது நண்பரும் சக பணியாளருமான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வளர்ந்ததால், அவருக்கு கிடைத்த அளவுக்கு ஃபிரிட்ஸ் மரியாதை பெறவில்லை. அவரது பணிகள் சர்ச்சைக்குரியதாகவே உள்ளன.

கிறிஸ் பவுல்பி தனது கட்டுரையில் அவருக்குப் பதிலாக தனது மருமகன் வந்ததாகக் குறிப்பிடுகிறார்.

ஃபிரிட்ஸின் மகனான ஃபிரிட்ஸ் ஸ்டெர்ன் என்ற வரலாற்றாசிரியர் எழுதுகையில், “ ஃபிரிட்ஸ் ஹேபரின் பணி சிக்கலானது. அதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். அவர் தனது வாழ்க்கையை அறிவியலுக்காக அர்ப்பணித்தார். ஆனால், தனது நாட்டுப்பற்றை நிரூபிக்கும் வகையில், போரில் பயன்படுத்தப்படும் விஷ வாயுக்களையும் அவர் கண்டுபிடித்தார். முதல் உலகப் போரின் போது இந்த விஷவாயு பேரழிவை ஏற்படுத்தியது." என்று குறிப்பிடுகிறார்.

ஃபிரிட்ஸைப் பற்றி ஐன்ஸ்டீன் கூறுகையில், “ஹேபரின் வாழ்க்கை ஜெர்மன் யூதரின் சோகக் கதை. அவர் ஜெர்மனியை ஒருதலையாக நேசித்தார்" என்கிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)