இளைஞர்களிடையே பாஜகவுக்கு தொடரும் ஆதரவு - புள்ளிவிவரங்கள் கூறுவது என்ன?

தேர்தல் முடிவுகள் கூறுவது

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், சஞ்சய் குமார்
  • பதவி, சிஎஸ்டிஎஸ்

இந்தியா போன்ற ஒரு பெரிய மற்றும் பன்முகத்தன்மை வாய்ந்த நாட்டில், வாக்காளர்களின், குறிப்பாக இளைஞர்களின் (25 வயதுக்குட்பட்ட) விருப்பத்தேர்வுகள், மிகவும் கவனமாக ஆராய்ந்து புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒரு விஷயமாகும்.

முக்கியமான தேர்தல் களங்களில், அவர்களது வாக்குகள் தான் யார் வெற்றியாளர் என்பதைத் தீர்மானிக்கும். எனவே அவர்கள் தான் அரசியல் கட்சிகளின் பிரதான இலக்குகள்.

எனவே, நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் இளைஞர்கள் வாக்களித்தது எப்படி?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய  இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இளைஞர்கள் மத்தியில் இருக்கும் பாஜக ஈர்ப்பு

2019ஆம் ஆண்டில் 20 சதவீத இளைஞர் வாக்காளர்கள் காங்கிரஸை ஆதரித்தனர். இந்த எண்ணிக்கை 2024-இல் ஒரு சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. இளைஞர்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவு பெருமளவில் வளரவில்லை என்பதை தான் இது காட்டுகிறது.

மாறாக, 2019இல் இளைஞர்களிடம் இருந்து பாஜகவுக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. அப்போது 40 சதவீத இளைஞர் வாக்காளர்களின் ஆதரவைப் பெற்றது பாஜக. இந்த இளைஞர் வாக்கு வங்கி தான், வயது முதிர்ந்த வாக்காளர்களிடமிருந்து பாஜகவை வேறுபடுத்திக் காட்டுகிறது.

2024ஆம் ஆண்டில் பாஜகவின் இளம் ஆதரவாளர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் குறையவில்லை. 25 வயதுக்குட்பட்ட வாக்காளர்களிடையே ஒரு சதவீத வாக்குகளும், 26 முதல் 35 வயதுக்குட்பட்ட வாக்காளர்களிடையே இரண்டு சதவீத வாக்குகளும் மட்டுமே குறைந்துள்ளன. (அட்டவணை 1)

இங்கு ஒரு கேள்வி எழுகிறது? பின்னர் எப்படி இந்த முறை காங்கிரஸ் கட்சியால், பாஜகவுக்கு சவால் விட முடிந்தது?

அட்டவணை 1

2024 மக்களவைத் தேர்தலில், 21 சதவீத இளம் வாக்காளர்கள் காங்கிரஸையும், 39 சதவீதம் பேர் பாஜகவையும், 7 சதவீதம் பேர் பாஜகவின் கூட்டணிக் கட்சிகளையும் ஆதரித்தனர். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மொத்தம் 46 சதவீத இளைஞர்கள் வாக்குகள் கிடைத்துள்ளன.

இருப்பினும், இந்தியா கூட்டணிக்கு என்ன பலன் கிடைத்தது என்றால், காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் 12 சதவீத இளைஞர் வாக்குகளைப் பெற்றன, இது பாஜக கூட்டணிக் கட்சிகளை (7%) விட அதிகமாக இருந்தது. மேலும் இது என்டிஏ மற்றும் இந்தியா கூட்டணிக்கு இடையிலான வாக்குப் பங்கில் இருந்த இடைவெளியைக் குறைக்க உதவியது. (அட்டவணை 2)

சுருக்கமாக சொன்னால், பாஜக தனது இளைஞர் ஆதரவை குறிப்பிடத்தக்க இழப்பு ஏதுமின்றி, அப்படியே தக்க வைத்துக் கொண்டது. அதே நேரத்தில் காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகளும் இளம் வாக்காளர்கள் மத்தியில் கணிசமான வெற்றியைப் பெற்றன.

மிக முக்கியமாக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வாக்குப் பங்கு, வயது வாரியான வாக்காளர் குழுக்களில் சமமாக இருந்தபோதும், பாஜகவைப் பொறுத்தவரை, வயது அதிகரிக்கும்போது ஆதரவு குறைந்துள்ளது.

வயதான வாக்காளர்களை விட, இளம் வாக்காளர்கள் மத்தியில் பாஜகவின் மீதான ஈர்ப்பு அப்படியே உள்ளது என்பதே இதன் அர்த்தம்.

அட்டவணை 2

காங்கிரசுக்கு இருக்கும் பெண்களின் ஆதரவு

இந்தியத் தேர்தல்களில் பெண் வாக்காளர்களின் முக்கியத்துவம் மிகைப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

சமீப ஆண்டுகளில் இந்திய அரசியலில் பெண்கள் அதிக முக்கியத்துவத்தைப் பிடித்துள்ளனர் என்பது உண்மைதான்.

ஆனால் மறுபுறம், பாஜகவுக்கு 2019இல் ஒரு பெரிய வெற்றி மற்றும் 2024இல் ஓரளவு வெற்றி என கிடைத்துள்ள போதிலும், பாஜகவுக்கு ஆதரவாக பெண்களின் வாக்குகளில் ஒரு தீர்க்கமான மாற்றம் ஏற்பட்டுள்ளது எனக் கூற எந்த ஆதாரமும் இல்லை.

நிச்சயமாக, இந்திய பெண்கள் முன்பை விட அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வருகிறார்கள்.

பெண்களின் வாக்களிப்பு குறித்த ஆரம்ப தரவுகள் (7வது கட்ட வாக்குப்பதிவைத் தவிர) 2019இல் இருந்ததைப் போலவே, பெண்களும் ஆண்களும் ஒரே விகிதத்தில் வாக்களித்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது.

2019 மக்களவைத் தேர்தலின் போது, ​​ஆண்களின் வாக்குப்பதிவை விட பெண்களின் வாக்குப்பதிவு வெறும் 0.6% மட்டுமே குறைவாக இருந்தது என்பதை இங்கு நினைவூட்டுவது அவசியம். ஏனெனில் 1990களில் இந்த வித்தியாசம் 10% அதிகமாக இருந்தது.

ஆனால் தேசிய அளவில் பாஜகவுக்கு ஆதரவான வகையில் பெண்களின் வாக்குகளில் ஒரு தீர்க்கமான மாற்றம் ஏற்பட்டுள்ளது என்ற கூற்றை நிரூபிக்க முடியவில்லை.

தேர்தல் முடிவுகள் கூறுவது
படக்குறிப்பு, காங்கிரஸ் தொடர்ந்து ஆண்களை விட பெண்களிடையே அதிக ஆதரவைப் பெற்றுள்ளது

இந்த விஷயத்தில் பிரபலமான கூற்றுகளுக்கு மாறாக, லோக்நிதி-சிஎஸ்டிஎஸ் (Lokniti-CSDS) தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின் தரவுகள், ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களிடையே பாஜக அதிக ஆதரவைப் பெறவில்லை என்பதைக் காட்டுகிறது. இது 2024 மக்களவைத் தேர்தலுக்கு மட்டுமல்ல, கடந்த 2019 மற்றும் 2014 மக்களவைத் தேர்தலுக்கும் பொருந்தும்.

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் 37% ஆண்களும் 36% பெண்களும் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர், அதாவது அக்கட்சி பெற்ற வாக்குகளில் ஒரு சதவீத பாலின வேறுபாடு மட்டுமே உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுபுறம், காங்கிரஸ் தொடர்ந்து ஆண்களை விட பெண்களிடையே அதிக ஆதரவைப் பெற்றுள்ளது.

என்இஎஸ் (NES) தரவை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வு, 1990களில் இருந்து காங்கிரஸ் வாக்கு வங்கியில் நிலவும் பாலின வேறுபாடு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதைக் காட்டுகிறது. இருப்பினும், 2024இல் காங்கிரசுக்கு ஆண்களை விட பெண்களின் ஆதரவே அதிகமாக கிடைத்துள்ளது.

தேர்தல் முடிவுகள் கூறுவது

பெண்களின் ஆதரவு பாஜகவுக்கு உள்ளதா?

முன்னதாக, 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் மகத்தான வெற்றியின் கதை அதன் பிரபலமான நலத்திட்டங்களுடன் இணைக்கப்பட்டது, குறிப்பாக பெண் வாக்காளர்களை மனதில் வைத்து கொண்டு வரப்பட்ட உஜ்வாலா திட்டம்.

ஆனால், லோக்நிதி-சிஎஸ்டிஎஸ்-இன் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புத் தரவுகள், 2019இல் கூட பாஜகவுக்கு பெண்கள் மத்தியில் அதிக ஆதரவு இல்லாத நிலையே இருந்தது என்பதைக் காட்டுகிறது.

2024இல் கூட இந்நிலை தொடரும் என்று தெரிகிறது. பெண்கள் மத்தியில் பாஜக தொடர்ந்து பின்தங்கியிருப்பதை இரண்டு நிலைகளில் விளக்கலாம்.

முதலாவதாக, 2014 வரை பாஜக கட்சியின் ஒட்டுமொத்த வாக்குப் பங்கு குறைவாகவே இருந்தது. மேலும் அவர்களின் மொத்த எண்ணிக்கையைக் கூட்டினாலும் கூட, உண்மையில் அதிக அளவிலான பெண்கள் அக்கட்சிக்கு வாக்களிக்கவில்லை என்பது புரியும்.

இரண்டாவது- நீண்ட காலமாக, இந்திய சமூகத்தின் சமூக அதிகாரம் பெற்ற பிரிவின் விருப்பமான கட்சியாகவே பாஜக அறியப்பட்டது, எனவே அதன் சமூக அடித்தளம் சீரற்றதாக இருந்தது. இந்த இரண்டு காரணிகளும் சேர்ந்து இன்றுவரை கட்சியின் வாக்கு வங்கியில் நிலவும் பாலின இடைவெளிக்கு சாத்தியமான ஒரு விளக்கத்தை கொடுக்கலாம்.

அட்டவணை 2 காட்டுவது போல, இந்த வேறுபாடு 2024இல் கூட தெரிகிறது. பல்வேறு சமூகக் குழுக்களில் உள்ள பெண்களின் வாக்களிப்பு விருப்பம், படித்த பெண்களிடையே பாஜக சற்று முன்னிலையில் இருப்பதைக் காட்டுகிறது. ஆனால் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களுக்கு இடையே எந்த வித்தியாசமும் இல்லை.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தலித்துகள், பழங்குடியினர், கிராமப்புற வாக்காளர்கள் போன்ற பல்வேறு சமூகங்களிடையே பாஜக தனது அடித்தளத்தை அதிகரித்தாலும், 2024ஆம் ஆண்டில் பதிவான பெண்கள் வாக்குகள் குறித்த தரவுகள், பெண் வாக்காளர்களிடையே பாஜகவுக்கு குறைவான செல்வாக்கே இன்றும் உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது.

(லோக்நிதி-சிஎஸ்டிஎஸ்-ஆல் நடத்தப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு, 191 மக்களவைத் தொகுதிகளில் 776 இடங்களில் எடுக்கப்பட்டது. இந்த கணக்கெடுப்பு மாதிரியானது, தேசிய அளவில் இந்திய வாக்காளர்களின் சமூக சுயவிவரத்தை பிரதிபலிக்கிறது. அனைத்து ஆய்வுகளும் தனிமனித நேர்காணல்கள் மூலம், பெரும்பாலான வாக்காளர்களின் வீடுகளில் நடத்தப்பட்டன)

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)