பாகிஸ்தானை வெளியேற்றியது அமெரிக்கா: இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்துக்கு சூப்பர் 8 வாய்ப்புள்ளதா?

டி20 உலகக் கோப்பை சூப்பர் 8

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஏ பிரிவில் பாகிஸ்தானை வெளியேற்றி சூப்பர் 8 சுற்றுக்குள் அமெரிக்கா நுழைந்துள்ளது.

நடப்பு உலகக் கோப்பை டி20 தொடரில் முன்னாள் சாம்பியன் அணிகள் பலவும் முதல் சுற்றிலேயே வெளியேறும் ஆபத்தில் இருக்கின்றன.

ஏ பிரிவில் பாகிஸ்தானை வெளியேற்றி அறிமுக அணியான அமெரிக்கா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இலங்கை, இங்கிலாந்து ஆகியவற்றுடன் நியூசிலாந்து அணியும் தனது பிரிவில் அனுபவமில்லாத அணிகளுடன் தோற்றதால் அவற்றுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.

அதிலும் நியூசிலாந்துக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது.

இந்த அணிகளுக்கு இனி சூப்பர் 8 செல்வதற்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பது பற்றிப் பார்க்கலாம்.

வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நியூஸிலாந்தின் நிலைமை என்ன?

வலிமை வாய்ந்த அணிகளுள் ஒன்றாகக் கருதப்படும் நியூசிலாந்து, இந்த உலகக் கோப்பை டி20 தொடரில் இருந்து வெளியேறிவிட்டது.

குரூப் சி பிரிவில் இடம் பெற்றுள்ள நியூசிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோற்றுப் போனதால் அந்த அணியின் வாய்ப்புகள் மங்கின.

வெள்ளிக்கிழமை ஆப்கானிஸ்தான் பப்புவா நியூ கினி அணியைத் தோற்கடித்து 6 புள்ளிகளைப் பெற்றதால் அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்குள் சென்றுவிட்டது. அதனால் நியூசிலாந்து தொடரில் இருந்து வெளியேறுகிறது.

டி20 உலகக் கோப்பை சூப்பர் 8

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நியூசிலாந்து தொடரில் இருந்து வெளியேறுகிறது.

19 பந்துகளிலேயே போட்டியை முடித்த இங்கிலாந்துக்கு வாய்ப்பு இருக்கிறதா?

பி பிரிவில் இருக்கும் இங்கிலாந்து 3 புள்ளிகளை பெற்றிருக்கிறது. ரன் ரேட்டும் கவலைப்படும் அளவுக்கு இல்லை. ஓமன் அணியுடனான ஆட்டத்தில் 48 ரன்கள் இலக்கை 19 பந்துகளிலேயே முடித்து ரன்ரேட்டை +3.081 என பெருமளவு உயர்த்தி வைத்திருக்கிறது இங்கிலாந்து.

கடைசியாக நமீபியா அணியுடன் இங்கிலாந்து அணி வெல்லும்பட்சத்தில் சூப்பர் 8 செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இங்கிலாந்துக்கு போட்டியாக இருப்பது ஸ்காட்லாந்து. அந்த அணி 5 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. ரன் ரேட் +2.164. கடைசியாக ஆஸ்திரேலிய அணியை ஸ்காட்லாந்து தோற்கடித்தால் இங்கிலாந்து அணி வெளியேறுவது உறுதியாகிவிடும்.

டி20 உலகக் கோப்பை சூப்பர் 8

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நமீபியா அணியுடன் இங்கிலாந்து அணி வெல்லும்பட்சத்தில் சூப்பர் 8 செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்

பாகிஸ்தான் வெளியேற்றம்.

குரூப் ஏ பிரிவில் இந்தியா ஏற்கெனவே சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துவிட்டது.

இன்னொரு இடத்திற்கு பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய அணிகள் போட்டியிட்டன.

பாகிஸ்தான் அணியை விட கூடுதலாக 2 புள்ளிகள் பெற்று மொத்தம் 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்த அமெரிக்கா நேற்று அயர்லாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்தவிருந்தது.

போட்டி நடக்கவிருந்த ப்ளோரிடா மாகாணம் லாடர்ஹில் நகரத்தில் தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இதனால், அமெரிக்கா, அயர்லாந்து ஆகிய இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.

இதன் மூலம் தனது புள்ளிக் கணக்கை 5ஆக உயர்த்திக் கொண்ட அமெரிக்கா, சூப்பர்8 சுற்றுக்குள் முன்னேறியது. 2 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ள பாகிஸ்தான் அடுத்த போட்டியில் அயர்லாந்தை வென்றாலும் கூட 4 புள்ளிகள் மட்டுமே பெற முடியும் என்பதால் முதல் சுற்றோடு அந்த அணி வெளியேற்றப்பட்டுவிட்டது.

ஏ பிரிவில் இருந்து இந்தியாவும், அமெரிக்காவும் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளன.

டி20 உலகக் கோப்பை சூப்பர் 8

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மழையால் போட்டி ரத்தானால் பாகிஸ்தான் அணி மொத்தம் 3 புள்ளிகளை மட்டுமே பெற முடியும். அதனால் போட்டியில் இருந்து வெளியேற நேரிடும்

இலங்கைக்கு இனி வாய்ப்பு உள்ளதா?

டி பிரிவில் கடைசி இடத்தில் இருக்கிறது இலங்கை. நெதர்லாந்து, நேபாளம் போன்ற அணிகள்கூட இலங்கைக்கு மேலே இருக்கின்றன.

தற்போது 1 புள்ளியை மட்டும் பெற்றிருக்கும் இலங்கை கடைசியாக மோதும் நெதர்லாந்துடன் வெற்றி பெற்றாலும் 3 புள்ளிகளை மட்டுமே பெற முடியும். ஏற்கெனவே இந்தப் பிரிவில் தென்னாப்பிரிக்காவும் வங்கதேசமும் 4 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருக்கின்றன. அதனால் இனி இலங்கை சூப்பர் 8 சுற்றுக்குச் செல்ல முடியாது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)