சீன ராணுவம்: போர்களில் வெற்றிபெற என்றே புதிய சிறப்புப் பிரிவு - அதன் பணிகள் என்ன?

சீன ராணுவத்தில் செய்யப்பட்ட பெரிய மாற்றம் - புதிய பிரிவின் வேலை என்ன?

பட மூலாதாரம், Getty Images

நவீன யுத்தத்தின் சவால்களைக் கருத்தில் கொண்டு சீனா தனது ராணுவத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் செய்யப்பட்ட மிகப்பெரிய மாற்றம் இது.

பிபிசி மானிட்டரிங் செய்திப் பிரிவின்படி, ஏப்ரல் 19 அன்று சீனா ஒரு புதிய ராணுவப் பிரிவை உருவாக்குவதாக அறிவித்தது. சீனாவின் அரசாங்க செய்தி முகமை ஷின்ஹுவாவின் கூற்றுப்படி, இந்தப் புதிய ராணுவப் பிரிவுக்கு தகவல் ஆதரவுப் படை (Information Support Force) என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தச் சிறப்பு ராணுவப் பிரிவு ஒரு நிகழ்ச்சியின்போது அறிவிக்கப்பட்டதாக, அச்செய்தி முகமை தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் அதிபர் ஷி ஜின்பிங்குடன் மத்திய ராணுவ ஆணையத்தின் மூத்த உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராக ஷி ஜின்பிங் உள்ளார். இந்தச் சிறப்புப் பிரிவு ராணுவத்தின் ஒரு மூலோபாயப் பிரிவாக இருக்கும் என்றும், தகவல் அமைப்புச் சங்கிலியை வலுப்படுத்துவதே அதன் பணியாக இருக்கும் என்றும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிகாரிகளிடம் அவர் கூறினார்.

கட்சியின் கட்டளைகளை உறுதியாகக் கேட்டு, ராணுவத்தின் முழுமையான தலைமையின் கொள்கை மற்றும் அமைப்பைச் செயல்படுத்தி, அப்பிரிவு விசுவாசமாகவும் நம்பகமானதாகவும் இருப்பதை உறுதி செய்யும்படி ஷி ஜின்பிங் கேட்டுக் கொண்டார்.

சீனாவின் நான்கு படைப் பிரிவுகள்

சீன ராணுவத்தில் செய்யப்பட்ட பெரிய மாற்றம் - புதிய பிரிவின் வேலை என்ன?

பட மூலாதாரம், Getty Images

செய்தி முகமை ஷின்ஹுவாவின் அறிக்கைப்படி, டிசம்பர் 31, 2015 அன்று உருவாக்கப்பட்ட மூலோபாய ஆதரவுப் படை கலைக்கப்பட்டதுதான், ராணுவத்தில் கடைசியாக செய்யப்பட்ட பெரிய சீர்திருத்தம். இதன்கீழ், விண்வெளி மற்றும் சைபர் பிரிவுகள் தகவல் ஆதரவுப் படைக்கு இணையாகச் செயல்படுகின்றன.

புதிய பிரிவு உருவாக்கம் குறித்து சீன பாதுகாப்பு அமைச்சகம் செய்தியாளர் சந்திப்பையும் நடத்தியது. புதிய சீர்திருத்தத்தின் கீழ், மக்கள் விடுதலை ராணுவம் இப்போது ராணுவம், கடற்படை, விமானப் படை மற்றும் ராக்கெட் படை என நான்கு சேவைகளைக் கொண்டுள்ளதாக செய்தித் தொடர்பாளர் வூ கியான் கூறினார்.

இந்த நான்கு சேவைகளைத் தவிர, பிஎல்ஏ (மக்கள் விடுதலை ராணுவம்) நான்கு படைப் பிரிவுகளையும் கொண்டுள்ளது. அவற்றில், விண்வெளி படை, சைபர் படை, தகவல் ஆதரவுப் படை மற்றும் கூட்டுத் தளவாடங்கள் ஆதரவுப் படை ஆகியவை அடங்கும்.

"விண்வெளி படையின் உதவியுடன் சீனா விண்வெளியில் தன்னை வலுப்படுத்திக் கொள்ளும், சைபர் தாக்குதல்களில் இருந்து சைபர் படை நாட்டைப் பாதுகாக்கும், தரவுகளைப் பாதுகாப்பதற்கும் உதவும்" என்று செய்தித் தொடர்பாளர் வூ கியான் கூறினார்.

இருப்பினும், புதிய பிரிவு குறித்து அவர் அதிக தகவல்களைத் தெரிவிக்கவில்லை. ராணுவத்தின் செய்தித்தாளான பிஎல்ஏ டெய்லி, நவீன போர்களில் வெற்றி என்பது தகவல்களைப் பொறுத்தது, அத்தகைய சூழ்நிலையில் சிறந்த தகவல்களைக் கொண்டவர்களே போரில் வெற்றி பெறுவர் எனத் தெரிவித்துள்ளது.

மூலோபாயப் படையில் பணிபுரிந்தவர்களுக்கு புதிய பொறுப்பு

சீன ராணுவத்தில் செய்யப்பட்ட பெரிய மாற்றம் - புதிய பிரிவின் வேலை என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஷி ஜின்பிங்

சீன ஊடகங்களைப் போலன்றி, ஹாங்காங் ஊடகங்கள் இந்தப் புதிய பிரிவை யார் வழிநடத்துவார்கள் என்பதில் ஆர்வமாக உள்ளன.

புதிய பிரிவின் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் பி யி (Bi Yi) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு அவர் மூலோபாய ஆதரவுப் படையின் துணைத் தளபதியாக இருந்தார்.

ஹாங்காங்கின் சுயாதீன செய்தித்தாள் மிங் பாவோவின் கூற்றுப்படி, மூலோபாய ஆதரவுப் படையின் அரசியல் ஆணையராக இருந்த ஜெனரல் லி வெய், புதிய பிரிவின் அரசியல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வியூக ஆதரவுப் படையின் முன்னாள் தளபதியும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்தியக் குழுவின் உறுப்பினருமான சூ கியான்ஷெங், புதிய பிரிவை வழிநடத்தத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என ட்சிங் டாவ் டெய்லி (Tsing Tao Daily) எழுதியுள்ளது.

இதனால் அவர் ராணுவ ஊழல் வழக்குகளில் தொடர்புடையவர் என்ற ஊகங்கள் வலுப்பெற்றுள்ளன.

தற்செயலாக, ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் லி ஷங்ஃபு, 2016இல் மூலோபாய ஆதரவுப் படையின் துணைத் தளபதியாக இருந்தார்.

கடலில் சீனாவின் ஏற்பாடுகள்

சீன ராணுவத்தில் செய்யப்பட்ட பெரிய மாற்றம் - புதிய பிரிவின் வேலை என்ன?

பட மூலாதாரம், Getty Images

இதற்கிடையில், இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மேற்கு பசிபிசிக் கடற்படை நிகழ்ச்சியின் 19வது நிகழ்வு சீனாவின் செங்டுவில் ஏப்ரல் 21 முதல் 24 வரை ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் மையத்தில் கடல்சார் பாதுகாப்பில் சீனாவின் எதிர்கால ஏற்பாடுகள் குறித்துப் பேசப்பட்டது. சீன ஊடகங்கள் இந்த நிகழ்வைப் பயன்படுத்தி பிராந்தியத்தில் அதன் அமைதியான நோக்கங்களை ஊக்குவிக்கின்றன.

அதே நேரத்தில், சீன ஊடகங்களும் அமெரிக்கா பிராந்தியத்தைச் சீர்குலைப்பதாக விமர்சித்துள்ளன.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராணுவ நிபுணர் ஜாங் ஜுன்ஷே கூறுகையில், இந்தக் கூட்டத்தை சீனா நடத்துவது, 'சர்வதேச கடல்சார் வணிகத்தில் சீனாவின் பங்கை சர்வதேச சமூகம் அங்கீகரிக்கிறது' என்பதற்கான அறிகுறி என்று தெரிவித்தார்.

ஏப்ரல் 23ஆம் தேதி சீன ராணுவ நாளிதழில் வெளியான செய்தியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சீன அரசாங்கத்தின் ஆதரவு செய்தித்தாளான 'குளோபல் டைம்ஸ்' அதன் தலையங்கத்தில், 'மேற்கு பசிபிக் கடற்படை திட்டத்தில் சீன கடற்படையின் அர்ப்பணிப்பு வெளிப்பட்டதாக' தலைப்பிட்டிருந்தது.

சீனாவின் ராணுவ பலம்

சீன ராணுவத்தில் செய்யப்பட்ட பெரிய மாற்றம் - புதிய பிரிவின் வேலை என்ன?

பட மூலாதாரம், Getty Images

"அமைதி என்ற வார்த்தை இந்த ஆண்டுக்கான கூட்டத்தின் முக்கிய வார்த்தையாக இருந்தது. மேலும், இது பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளின் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது," என்று அந்த தலையங்கம் கூறியது.

"பிராந்தியத்திற்கு வெளியே சில நாடுகள் அடிக்கடி ஆத்திரமூட்டும் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடும் சூழ்நிலைகளில் இது நடைபெற்றுள்ளதாக" தலையங்கம் கூறியது. பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவது ஒன்று அல்லது இரண்டு நாடுகளின் பொறுப்பல்ல, அனைத்து நாடுகளின் கூட்டு முயற்சிகள் தேவை.

இந்த நிகழ்வில் பிலிப்பைன்ஸ் பங்கேற்காதது குறித்தும் ஊடகங்கள் விவாதித்தன. ஏப்ரல் 22 அன்று 'குளோபல் டைம்ஸ்' உடன் பேசிய ஜாங் ஜுன்ஷே, சர்வதேச கவனத்தை ஈர்க்கும் திட்டத்தில் பிலிப்பைன்ஸ் இல்லாதது, திட்டத்திற்கு சிரமங்களை உருவாக்கும் நோக்கம் கொண்டது என்று கூறினார்.

இதுதவிர, ஸ்வீடன் நாட்டு சிந்தனைக் குழுவான ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி, பத்து ஆண்டுகளில் கிழக்கு ஆசியாவில் மிகப்பெரிய பாதுகாப்பு செலவு செய்யப்பட்டுள்ளது என்று, ஏப்ரல் 22 அன்று ஹாங்காங்கின் 'சௌத் சைனா மார்னிங் போஸ்ட்' கூறியது.

சீனாவின் அதிகரித்து வரும் ராணுவ பலத்தைக் கருத்தில் கொண்டு, அதன் அண்டை நாடுகளான ஜப்பான் மற்றும் தைவான் ஆகிய நாடுகள் தங்கள் ராணுவ வரவு செலவுகளை அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)