ஆணுறுப்பு புற்றுநோய்: ஆண்கள் மத்தியில் அதிகரிப்பது ஏன்? இதன் அறிகுறிகள் என்ன?

ஆணுறுப்பு புற்றுநோய்

பட மூலாதாரம், Getty Images

பிரேசில் நாட்டை சேர்ந்த ஓய்வூதியதாரர் ஜோவாவ் (João - அவரது உண்மையான பெயர் அல்ல) , 2018 -ஆம் ஆண்டில், தனது ஆணுறுப்பில் மரு போன்று ஏதோ இருப்பதை கவனித்தார். என்னவென்று புரியாமல் மருத்துவ உதவியை நாடினார்.

"எனது ஆணுறுப்பில் மரு போன்று உருவாகி இருப்பது என்ன என்பதைக் கண்டறிய நான் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்றேன். ஆனால் அனைத்து மருத்துவர்களும், அங்கு எனக்கு தடிமனான தோல் இருப்பதால் அப்படி இருக்கும், அல்லது சில மருந்துகளின் பக்க விளைவாக ஏற்பட்டிருக்கும் என சொன்னார்கள்," என்று 63 வயதான ஜோவாவ் நடந்ததை நினைவு கூர்ந்தார்.

மருந்துகள் உட்கொண்ட போதிலும் அந்த மருவின் வளர்ந்துகொண்டே இருந்தது. இது அவரது திருமண வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தத் துவங்கியது. ஜோவாவின் பாலியல் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜோவாவ் மறும் அவரது மனைவிக்கு இடையில் தாம்பத்யம் முற்றிலும் இல்லாமல் போனது.

"நாங்கள் கணவன் மனைவியாக இல்லாமல், உடன்பிறப்புகளைப் போல வாழத் தொடங்கினோம்," என்று ஜோவாவ் ஒப்புக்கொள்கிறார். ஆனால், தனக்கு என்ன நடக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

ஐந்து ஆண்டுகளாக ஜோவாவ் மருந்துகளை பரிந்துரைக்கும் மருத்துவ நிபுணர்களிடம் முன்னும் பின்னுமாகச் சென்று புதிய பயாப்ஸிகளை செய்து கொண்டார். ஆனால் தன் பிரச்னை தீர்க்கப்படவில்லை என்று அவர் விவரித்தார்.

பின்னர், 2023-இல் ஒரு நோயறிதல் அறிக்கை வழங்கப்பட்டது. அதில் அவருக்கு 'ஆணுறுப்பு புற்றுநோய்' இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

"என் மனம் கனத்துப்போனது. எனது குடும்பத்தினர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். என் ஆணுறுப்பின் ஒரு பகுதியை துண்டிக்க வேண்டியிருக்கும் என்பதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என் தலை துண்டிக்கப்பட்டது போல் நான் உணர்ந்தேன். இந்த வகையான புற்றுநோயைப் பற்றி நீங்கள் யாரிடமும் பேச முடியாது. ஏனெனில் இது ஒரு 'ஜோக்' ஆக மாறக்கூடும்," என்கிறார் ஜோவாவ்.

ஆணுறுப்பு புற்றுநோய் அரிதானது. ஆனால் உலகம் முழுவதும் இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்பு விகிதம் அதிகரித்து வருகின்றன. சமீபத்திய ஆய்வுகளின்படி, ஜோவாவின் சொந்த நாடான பிரேசிலில் தான் ஆணுறுப்பு புற்று நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. அங்கு, 1 லட்சம் ஆண்களில், 2.1% பேருக்கு இந்தப் புற்றுநோய் உள்ளது.

ஆணுறுப்பு புற்றுநோய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சமீபத்திய ஆணுறுப்பு புற்றுநோய் ஆராய்ச்சியின்படி, உலகம் முழுவதும் இதன் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

'அறுவை சிகிச்சைக்கு பயந்தேன்'

சமீபத்திய ஆய்வுகளின்படி, ஜோவாவின் சொந்த நாடான பிரேசிலில் தான் ஆணுறுப்பு புற்று நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. அங்கு, 1 லட்சம் ஆண்களில், 2.1 பேருக்கு இந்தப் புற்றுநோய் உள்ளது.

2012 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் தங்கள் நாட்டில் 21,000 ஆணுறுப்பு புற்றுநோயாளிகள் பதிவாகியுள்ளனர் என்று பிரேசிலின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. "இதன் விளைவாக 4,000-க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டன. கடந்த பத்தாண்டுகளில், 6,500-க்கும் மேற்பட்ட ஆணுறுப்பு புற்றுநோயாளிகளுக்கு உறுப்பு நீக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது – இது சராசரியாக இரண்டு நாட்களுக்கு ஒரு முறை", என்று அந்த அறிக்கை கூறுகிறது.

பிரேசிலின் மிகவும் ஏழ்மையான மாநிலமான மரன்ஹாவாவ் (Maranhão), உலகளவில் அதிக ஆணுறுப்பு புற்றுநோயாளிகளைக் கொண்டுள்ளது. அங்கு 1 லட்சம் ஆண்களில், 6.1 என்ற விகிதத்தில் நோயாளிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆணுறுப்பு புற்றுநோய், ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால், புற்றுநோய் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி, கதிரியக்க சிகிச்சை மற்றும் கீமோதெரபி போன்ற சிகிச்சைகள் மூலம் குணப்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆனால் சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால், ஆணுறுப்பின் பாதிக்கப்பட்ட பகுதி அல்லது முழுவதுமாக அறுவை சிகிச்சை மூலம் நீக்க வேண்டியிருக்கும். மேலும் ஆணுறுப்புக்கு அருகில் உள்ள விதைப்பைகள் போன்ற பிற பிறப்புறுப்பு உறுப்புகளையும் நீக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம், என்கின்றனர் மருத்துவர்கள்.

ஜோவாவுக்கு சென்ற ஜனவரி மாதம் ஆணுறுப்பின் ஒரு பகுதி நீக்கப்பட்டது.

"உறுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டது என் வாழ்வின் மிகவும் கடினமான நேரம். இது நமக்கு நடக்கும் என்று நான் நினைத்துப் பார்க்காத ஒன்று, ஆனால் நடந்துவிட்டது. சாதாரணமாக நண்பர்களிடம் இந்தச் சோகத்தை பகிர்ந்துவிட்டுக் கடந்து செல்ல முடியவில்லை,” என்று அவர் விவரிக்கிறார்.

"ஆரம்பத்தில் நான் அறுவை சிகிச்சைக்கு பயந்தேன். ஆனால் வேறு வழியில்லை. அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதல் வாரத்தில் மிகவும் சோகமாக இருந்தேன். ஆணுறுப்பின் ஒரு பகுதி துண்டிக்கப்படுவது பயங்கரமானது," என்று கூறினார் அவர்.

ஆணுறுப்பு புற்றுநோய்

பட மூலாதாரம், SBU

படக்குறிப்பு, பிரேசிலியன் 'சொசைட்டி ஆஃப் யூரோலஜியைச்' சேர்ந்த மொரிசியோ டெனர் கார்டிரோ, “சுகாதாரம் இல்லாததும் இந்த நோய் ஏற்படக் காரணமாக இருக்கலாம் என்கிறார்

ஆணுறுப்பை முழுவதும் நீக்க வேண்டுமா?

ஆணுறுப்பு புற்றுநோயின் முக்கிய அறிகுறிகளாக கூறப்படுவன:

1) ஆணுறுப்பில் ஆறாத புண்கள் ஏற்படுவது

2) ஆணுறுப்பிலிருந்து கடுமையான நாற்றம் கொண்ட திரவம் வெளியேறுவது

சில நோயாளிகளுக்கு ஆண் உறுப்பு முற்றிலும் நீக்கப்படுகிறது. இது அவர்களின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றும்.

பிரேசிலின் முக்கியமான வணிக நகரமான சாவ் பாலோவில் உள்ள ஏ.சி. காமர்கோ புற்றுநோய் மையத்தின் சிறுநீரகவியல் துறை மருத்துவர் தியாகோ கேமலோ மௌராவோ இதுகுறித்துப் பேசுகையில், ஆணுறுப்பின் ஒரு பகுதி மட்டும் நீக்கப்பட்டால், அதன் வழியாக சிறுநீர் தொடர்ந்து வெளியேறும், என்றார். "ஆனால், முழு பாகமும் நீக்கப்படும் நிலையில், சிறுநீர்க்குழாய் துளை, விதைப்பை மற்றும் ஆசனவாய் இடையே உள்ள பகுதியான பெரினியத்திற்கு (perineum) மாற்றியமைக்கப்படும். இதனால் நோயாளி கழிவறையில் அமர்ந்த நிலையில் சிறுநீர் கழிக்க வேண்டி இருக்கும்," என்று விளக்கினார்.

நிபுணர்களின் கருத்துப்படி, "ஆணுறுப்பு புற்றுநோய் உருவாக பல ஆபத்து காரணிகள் உள்ளன. பிமோசிஸ் (phimosis) என்று சொல்லப்படும் இறுக்கமான நுனித்தோல் இருப்பது, புகைபிடித்தல் ஆகியவற்றால் இந்த நோய் ஏற்படலாம்."

பிரேசிலியன் 'சொசைட்டி ஆஃப் யூரோலஜியைச்' சேர்ந்த மொரிசியோ டெனர் கார்டிரோ, “சுகாதாரம் இல்லாததும் இந்த நோய் ஏற்படக் காரணமாக இருக்கலாம். ஒரு ஆண் தன் ஆணுறுப்பின் நுனித்தோலை சரியாக சுத்தம் செய்யத் தவறினால், அதில் சுரக்கும் ஒருவித சுரப்பு அதிகரித்துத் தேங்கி, அது பாக்டீரியா தொற்றுக்கு வழிவகுக்கிறது. இது மீண்டும் மீண்டும் ஏற்பட்டால், அது புற்றுநோய் கட்டியாக மாறும் வாய்ப்புகளை அதிகரிக்கும்,” என்றார்.

கார்டிரோ மேலும் கூறுகையில், "மனித பாப்பிலோமா வைரஸின் (HPV) தாக்கம் தொடர்ந்து ஏற்பட்டாலும், வாய் மற்றும் ஆணுறுப்பு உள்ளிட்ட புற்றுநோய்களுக்கு வழிவகுக்கும். HPV என்பது ஒரு வகை வைரஸ் குழுவிற்கு வழங்கப்படும் பொதுவான பெயர். HPV உயர் செயல்திறன் கொண்ட வைரஸ் ஆகும். எனவே அது தொடர்பான தொற்றுக்களைத் தடுக்கத் தடுப்பூசி அவசியம். ஆனால் பிரேசிலில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் விகிதங்கள் தேவையான அளவை விட குறைவாக இருக்கின்றன,” என்றார்.

கார்டிரோ மேலும் கூறுகையில், "பிரேசிலில், தடுப்பூசிகள் கிடைத்தாலும், HPV தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் விகிதம் குறைவாகவே உள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் விகிதம் பெண்களிடம் 57%, ஆண்களுக்கு 40%-ஐ விட குறைவு,” என்றார்.

பிரேசிலில் தடுப்பூசி பற்றிய தவறான தகவல்கள், அதன் செயல்திறன் பற்றிய சந்தேகங்கள் மற்றும் தடுப்பூசி பிரசாரங்களின் பற்றாக்குறை ஆகியவை இந்தப் பிரச்னைகளை தீவிரப்படுத்துவதாக அவர் கருதுகிறார்.

ஆணுறுப்பு புற்றுநோய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 'மனித பாப்பிலோமா வைரஸின் (HPV) தாக்கம் தொடர்ந்து ஏற்பட்டாலும், வாய் மற்றும் ஆணுறுப்பு உள்ளிட்ட புற்றுநோய்களுக்கு வழிவகுக்கும்'

உலகம் முழுதும் அதிகரிக்கும் ஆணுறுப்புப் புற்றுநோய்

ஆனால், இந்த நிலை பிரேசிலில் மட்டுமில்லை. சமீபத்திய ஆணுறுப்பு புற்றுநோய் ஆராய்ச்சியின்படி, உலகம் முழுவதும் இதன் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2022-ஆம் ஆண்டில், JMIR பொது சுகாதாரம் மற்றும் கண்காணிப்பு என்ற சஞ்சிகை, 43 நாடுகளின் சமீபத்தியத் தரவுகளை உள்ளடக்கிய பெரிய அளவிலான ஆய்வு முடிவுகளை வெளியிட்டது.

2008 மற்றும் 2012 ஆண்டுகளுக்கு இடையில் அதிக ஆணுறுப்பு புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை உகாண்டாவில் இருந்தது (1 லட்சம் ஆண்களுக்கு 2.2 பேர்), அதைத் தொடர்ந்து பிரேசில் (1 லட்சம் ஆண்களுக்கு 2.1 பேற்) மற்றும் தாய்லாந்து (1 லட்சம் ஆண்களுக்கு 1.4 பேர்). குவைத்தில் மிகக் குறைவாக இருந்தது (1 லட்சம் ஆண்களுக்கு 0.1 பேர்).

"வளரும் நாடுகளில் ஆணுறுப்பு புற்றுநோயின் பாதிப்பால் அதிக இறப்புகள் ஏற்படுகின்றன. என்றாலும், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது," என்பதை சீனாவின் சன் யாட்-சென் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லீவென் ஃபூ மற்றும் தியான் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது.

1979 மற்றும் 2009 ஆண்டுகளுக்கு இடையில் பிரிட்டனில் ஆணுறுப்பு புற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் (1 லட்சம் ஆண்களுக் 1.1-இலிருந்து 1.3 ஆக உயர்வு) , ஜெர்மனியில் 1961 மற்றும் 2012 ஆண்டுகளுக்கு இடையில் 50% அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் சொல்கின்றன (1 லசட்சம் ஆண்களுக்கு 1.2-இலிருந்து 1.8 ஆக உயர்வு).

`குளோபல் கேன்சர் ரெஜிஸ்ட்ரி`யின் கணிப்பு எதிர்வரும் 2050-ஆம் ஆண்டில், ஆணுறுப்பு புற்றுநோயாளிகளின் உலகளாவிய எண்ணிக்கை 77%-க்கும் அதிகமாக உயரும் என்று மதிப்பிடுகிறது. மேலும் இந்நோய் வயதான ஆண்களுக்கு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும், 60 வயதுக்குட்பட்ட ஆண்கள் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

மருத்துவர் கார்டிரோ மேலும் கூறுகையில், ஆணுறுப்பு புற்றுநோய் என்பது ஒரு அரிதான நோயாகும், என்றார். "ஆனால் இது ஏற்படாமல் தடுப்பது சுலபம். ஆண்கள் (எல்லா வயதினரும்) தங்கள் ஆண் உறுப்பை சோப்பு மற்றும் தண்ணீரில் தினமும் சுத்தம் செய்ய வேண்டும். உடலுறவுக்குப் பிறகு கழுவுவது மிகவும் முக்கியம்," என்றார்.

"உடலுறவின் போது ஆணுறைகளைப் பயன்படுத்துதல் மற்றும் ஆணுறுப்பின் முன்தோல் தடிமனாக இருப்பின் அறுவை சிகிச்சை செய்து நீக்குதல் ஆகியவை ஆணுறுப்பு புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவும்,” என்றும் அவர் அறிவுறுத்தினார்.

ஜோவாவ் தற்போது தனது சமீபத்திய சோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறார். இந்த ஆண்டின் பிற்பகுதியில் முடிவுகள் வெளியாகும்.

"இந்தச் சோதனை, நான் குணமடைந்து விட்டேன் என்று கூறும் என்று நம்புகிறேன். என் ஆணுறுப்பில் பாதி நீக்கப்பட்டது வாழ்நாள் முழுவதும் வருத்தம் தரக்கூடியது எனினும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு வலி இன்றி நிம்மதியாக இருக்கிறேன்," என்கிறார் அவர்.

பிரிட்டனின் புற்றுநோய் ஆராய்ச்சி அறிக்கைகளின்படி, ஆணுறுப்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆண்களில் 90%-க்கும் அதிகமானோருக்கு, அவர்களது உறுப்புக்கு அருகில் உள்ள நிணநீர் மண்டலங்களுக்குத் தொற்று பரவவில்லை எனில், அவர்கள் ஐந்து வருடங்கள் அல்லது அதற்கு மேற்ட்ட காலம் பிரச்சனை இன்றி வாழ்கின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)