வாரணாசி தொகுதியில் மோதியின் வாக்கு சதவீதம் குறைய என்ன காரணம்?

வாரணாசி, மோதி

பட மூலாதாரம், Getty Images

வாரணாசியில் நரேந்திர மோதியின் வெற்றி வாக்கு வித்தியாசம் 1 லட்சத்து 52 ஆயிரமாக குறைந்துவிட்டது தொடர்பான விவாதம் இன்னமும் ஓயவில்லை.

வாரணாசியில் ஒரு டஜனுக்கும் அதிகமான மத்திய அமைச்சர்கள் முகாமிட்டு பிரச்சாரம் செய்தபிறகும்கூட மோதியின் வெற்றி வித்தியாசம் குறைந்தது.

2019 இல் வாரணாசி தொகுதியில் இருந்து மோதி 4 லட்சத்து 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த முறை காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் வாரணாசியில் இன்னும் தீவிரமாக போட்டியிட்டிருந்தால் மோதி தோல்வியடைந்திருக்கலாம் என்று பலர் நம்புகிறார்கள்.

வாரணாசியில் நரேந்திர மோதிக்கு எதிராக தனது சகோதரி பிரியங்கா காந்தி நின்றிருந்தால், இரண்டு முதல் மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பார் என்று ராகுல் காந்தி செவ்வாயன்று ரேபரேலியில் கூறினார்.

அதாவது மோதியின் பிம்பத்துடன் ஒப்பிடும்போது வாரணாசியில் பொருத்தமான வேட்பாளரை நிறுத்தவில்லை என்பதை காங்கிரஸும் ஒப்புக்கொள்கிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வாரணாசியில் 2014, 2019 மற்றும் 2024 ஆகிய மூன்று தேர்தல்களிலுமே மோதிக்கு எதிராக அஜய் ராயை காங்கிரஸ் நிறுத்தியது. மூன்று முறையும் அவர் தோல்வியை தழுவினார்.

அஜய் ராய் 2019 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். இது தவிர அஜய் ராய் 2009 இல் சமாஜ்வாதி கட்சி சார்பில் வாரணாசியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

2022 உத்திரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் அஜய் ராய், பின்ட்ரா தொகுதியில் இருந்து காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார். அவர் அந்த தொகுதியில் மூன்றாவது இடத்தை மட்டுமே பிடிக்கமுடிந்தது. அதாவது கடந்த பலமுறை தேர்தலில் தோல்வியடைந்த அஜய் ராய் இந்த முறையும் களம் இறக்கப்பட்டார்.

வாரணாசியில் மோதிக்கு எதிராக காங்கிரஸ், வலுவான வேட்பாளரை நிறுத்தவில்லை என்று ராகுல் காந்தி கூற முயற்சிக்கிறாரா என்று அஜய் ராயிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்தக் கேள்விக்கு பதிலளித்த ராய், “பிரியங்கா காந்தியை வாரணாசியில் போட்டியிடுமாறு நாங்கள் கோரியிருந்தோம். வாரணாசியில் பிரியங்கா காந்தி மோதியை தோற்கடித்திருக்க முடியும் என்பதில் ராகுல் காந்தியுடன் நானும் உடன்படுகிறேன்,” என்று கூறினார்.

நரேந்திர மோதி
படக்குறிப்பு, கௌரிசங்கர் நிஷாத் 2014 மற்றும் 2019 இல் நரேந்திர மோதியுடன் இருந்தார். ஆனால் இந்த முறை அவர் காங்கிரஸில் இணைந்தார்.

அஜய் ராயின் அரசியல் பின்னணி பா.ஜ.க.வுடனும் இருந்திருக்கிறது. சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரஸில் சேருவதற்கு முன்பு ராய் 1996, 2002 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் பனாரஸ் மாவட்டத்தின் கோல்சலா சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து பாஜக சார்பில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2009 இல் அஜய் ராய் வாரணாசி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட விரும்பினார். ஆனால் கட்சி முரளி மனோகர் ஜோஷியை நிறுத்தியது. இதனால் கோபமடைந்த அவர் பா.ஜ.கவில் இருந்து விலகி, சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். பின்னர் 2012 இல் காங்கிரஸில் சேர்ந்தார்.

நரேந்திர மோதி
படக்குறிப்பு, வாரணாசியில் கங்கை நதிக்கரையில் மணிகர்ணிகா படித்துறை மீது கட்டப்பட்டுள்ள விஸ்வநாதர் கோயில் வழித்தடம்.

வாரணாசியில் மோதியின் வெற்றி வித்தியாசம் எப்படி குறைந்தது?

மதிய பொழுது மெல்லமெல்ல கடந்து மாலைப்பொழுது வந்துவிட்ட இந்த வேளையில் சுட்டெரிக்கும் சூரியன் நிஷாத்ராஜ் படித்துறை படிக்கட்டுகளில் இருந்து கங்கை நதியை நோக்கி மறைவதற்காக செல்கிறது.

வாரணாசியின் இந்த கங்கைப் படித்துறை படிக்கட்டுகளில் நிழல் படர ஆரம்பிக்கிறது. அருகில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த படகோட்டிகள்

தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து படிக்கட்டுகளில் அமர்கின்றனர்.

கங்கை நதியில் படகு சவாரி செய்ய மக்கள் வருவார்கள் என்று இவர்கள் காத்திருக்கிறார்கள். கௌரிசங்கர் நிஷாத் கடந்த இரண்டு மணி நேரமாக அமர்ந்திருந்தும் யாரும் வரவில்லை.

மாலை மங்க மங்க கௌரிசங்கர் நிஷாத்தின் விரக்தி அதிகரிக்கத் தொடங்குகிறது. காலையில் இருந்து அவருக்கு எந்த சம்பாத்தியமும் இல்லை. வீட்டில் இன்று அடுப்பு எப்படி எரியும் என்ற கவலை அவரை வாட்டுகிறது.

கடந்த சில ஆண்டுகளில் வாரணாசி படகோட்டிகளின் வருமானத்தை திட்டமிட்டு பாதிப்படைய செய்துள்ளனர் என்று கெளரி சங்கர் நிஷாத் கூறினார்.

“2014 இல் நரேந்திர மோதி குஜராத்தில் இருந்து வாரணாசிக்கு வந்தபோது நாங்கள் அவரை மிகவும் உற்சாகமாக ஆதரித்தோம். விஷயங்கள் மேம்படும் என்று நினைத்தோம். ஆனால் அவரது நிகழ்ச்சி நிரல் என்ன என்ற உண்மை தற்போது வெளியாகியுள்ளது. 2019 இல் கூட நாங்கள் நம்பிக்கை வைத்து அவருக்கு வாக்களித்தோம். ஆனால் 2024 இல் காங்கிரஸுக்கு ஆதரவு அளித்தோம். இப்போது மோதி மீது எந்த நம்பிக்கையும் இல்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.

“அவர்கள் இப்போது கங்கை நதியில் சொகுசு படகு (cruise) ஓட்டுகிறார்கள். இதற்கு ஆன்லைன் முன்பதிவு நடைபெறுகிறது. ஆன்லைன் முன்பதிவு மூலம் அரசுக்கு வரி கிடைக்கிறது. இந்தப் படகுகள் வந்ததில் இருந்து எங்கள் வருமானம் சொற்பமாகிவிட்டது. நாங்கள் எப்படி அதனுடன் போட்டியிட முடியும்?,” என்று நிஷாத் வினவினார்.

2018 ஆம் ஆண்டில் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வாரணாசியில் கங்கை நதியில் ஐந்து நட்சத்திர சொகுசுப்படகு சேவையை தொடங்கினார். இந்த பயணத்தில் ஒருவர் கங்கை நதியின் 82 படித்துறைகளையும் பார்வையிடலாம். ஒரு நபருக்கு டிக்கெட் கட்டணம் 750 ரூபாய். 30 மீட்டர் நீளமுள்ள இந்த இரட்டை அடுக்கு படகில் ஒரே நேரத்தில் 110 பேர் அமர முடியும்.

நரேந்திர மோதி

படகோட்டிகளின் கோபம்

“சொகுசு படகு மட்டுமே பிரச்னை அல்ல. மணிகர்ணிகா படித்துறையில் இருந்து விஸ்வநாதர் கோவில் வரை ஒரு வழித்தடத்தை உருவாக்கியுள்ளனர். மணிகர்ணிகா படித்துறை பகுதியில் கடை அமைத்து நாங்கள் மீன் விற்பனை செய்து வந்தோம். வழித்தடம் கட்டத் தொடங்கியதும், கடைகளை அகற்றுமாறும், அது கட்டிமுடிக்கப்பட்ட பிறகு அனைவருக்கும் புதிய கடை கிடைக்கும் என்றும் கூறினார்கள்,” என்று கெளரி சங்கர் தெரிவித்தார்.

''கடை கட்டி முடிந்தபோது, ஒரு கடைக்கு 25 லட்சம் ரூபாய் தர வேண்டும் என கூறப்பட்டது. ஏழைகளான நாங்கள் எப்படி 25 லட்சம் ரூபாய் கொண்டுவர முடியும்? இப்படித்தான் மணிகர்ணிகா படித்துறையில் இருந்து ஏழைகள் வெளியேற்றப்பட்டனர். இப்போது மணிகர்ணிகா படித்துறைக்குச் சென்றால் அமுல் டெய்ரி மற்றும் பிராண்டட் ஷோரூம் உள்ளது. வாரணாசியில் கூட குஜராத்தின் நலனை மோதி விரும்புகிறார். அமுல் குஜராத்தின் பால்பண்ணை. உத்திரபிரதேசத்தின் பராக் பால் பண்ணை எங்கே போனது? குஜராத்தில் இருந்தே படகுகளும் கொண்டுவரப்பட்டுள்ளன,” என்றார் அவர்.

“வளர்ச்சிப் பணிகள் நடந்தால், சிலருக்கு பிரச்னைகள் ஏற்படலாம். ஆனால், வளர்ச்சிப் பணிகளை நீண்ட காலம் நிறுத்த முடியாது. சட்டப்பூர்வமாக கடைகளை வைத்திருந்தவர்களுக்கு இழப்பீடு கிடைத்தது,” என்று பா.ஜ.கவின் காசி மண்டலத் தலைவர் திலீப் படேல் கூறினார்.

அமித் சாஹ்னியும் கங்கை நதியில் படகு ஓட்டுகிறார். கங்கை நதியில் சொகுசு படகு சேவை தொடர்பாக அவரும் கோபத்தில் உள்ளார்.

“பிரதமர் நரேந்திர மோதி வரும்போது எங்கள் படகுகள் கங்கை நதியில் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் சொகுசு படகு செல்கிறது,” என்று அமித் குறிப்பிட்டார்.

நரேந்திர மோதி மீதான ஏமாற்றம் படகோட்டிகளுக்கு மட்டுமே இருக்கிறது என்று சொல்ல முடியாது. நெசவாளர்களும் நரேந்திர மோதியின் கொள்கைகளை வெளிப்படையாக விமர்சிக்கின்றனர்.

நரேந்திர மோதி
படக்குறிப்பு, நரேந்திர மோதி வாரணாசிக்கு வரும்போதெல்லாம் தன்னுடைய படகு கங்கை ஆற்றில் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் கோபமடைந்துள்ள அமித் சாஹ்னி.

நெசவாளர்களின் கோபம்

விசைத்தறி இயந்திரங்கள் மூலம் வாரணாசியில் புடவைகளை தயாரித்து வந்த லக்ஷ்மி சங்கர் ராஜ்பர், கடந்த ஐந்து ஆண்டுகளாக ரிக்ஷா ஓட்டுகிறார். வறுமை மற்றும் கடின உழைப்பு காரணமாக 55 வயதான ராஜ்பர் 85 வயதானவர் போல காட்சி அளிக்கிறார்.

“பனாரஸ் புடவைகள் இப்போது சூரத்தில் தயாரிக்கப்படுகிறன. அங்கு தயாரிக்கப்பட்டு வாரணாசிக்கு கொண்டுவரப்படுகின்றன. இங்குள்ள கைவினைஞர்களுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. எங்கள் திறமை துருப்பிடித்துப் போகிறது. ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த பனாரஸ் புடவையை இப்போது குஜராத்திகள் கைப்பற்றியுள்ளனர்,” என்று அவர் குறிப்பிட்டார்.

ஜலாலிபுரா லால் குவான் என்பது வாரணாசியில் இருக்கும் நெசவாளர்களின் பகுதி. இப்பகுதியின் தெருக்களில் சென்றால் இப்போதும் வீடுகளில் விசைத்தறி இயந்திரங்கள் இயங்கும் சத்தம் கேட்கிறது.

ஆனால் கடந்த காலத்தை ஒப்பிடும் போது இந்த ஒலி இப்போது குறைந்துவிட்டது. விசைத்தறி இயந்திரங்களில் இப்போது தூசி படிந்துள்ளது. விசைத்தறி இயந்திரங்கள் இயங்கி வந்த வீடுகளில் தற்போது டீ, காபி கடைகள் திறக்கப்பட்டுள்ளன. சேலை தயாரித்து தினத்திற்கு 200 ரூபாய் கூட சம்பாதிப்பது கடினம் என இங்குள்ள நெசவாளர்கள் கூறுகின்றனர்.

லல்லு அன்சாரியின் வீட்டில் முன்பு நான்கு விசைத்தறி இயந்திரங்கள் இயங்கி வந்தன. ஆனால் தற்போது அங்கு டீக்கடை திறக்கப்பட்டுள்ளது.

“என் குடும்பத்தைச் சேர்ந்த பல ஆண்கள் சூரத்துக்குச்சென்றுவிட்டனர். இப்போது அவர்கள் அங்கு பனாரஸ் புடவைகளை தயாரிக்கிறார்கள். வருமானத்தை விட அதிகமாக ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. விசைத்தறி இயந்திரம் இருக்கும் வீட்டிற்கு வணிக வரி விதிக்கப்படுகிறது. வருமானமே இல்லாதபோது எப்படி வரி செலுத்துவது? மின்சாரமும் ஒரே சீராக இருப்பதில்லை. அதில் மானியம் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நஷ்டத்தில் சிக்கிக் கொள்வதை விட சூரத்தில் பணம் சம்பாதிப்பது நல்லது,” என்றார் அவர்.

2014 இல் நரேந்திர மோதி வாரணாசியில் போட்டியிட வந்தபோது அவர் நெசவாளர்களின் நிலையை மேம்படுத்துவதாக வாக்குறுதி அளித்தார். 2014 ஜூன் 27 ஆம் தேதி முதல் முறையாக ஜவுளித் துறை குறித்த ஆய்வுக் கூட்டத்தை மோதி நடத்தினார்.

கைத்தறியை ஃபேஷனுடன் இணைப்பதற்கான வழியைக் கண்டறியுமாறு அதிகாரிகளை மோதி கேட்டுக் கொண்டார். அதிகாரிகளால் இன்று வரை அதற்கான தீர்வை காண முடியவில்லை. தற்போது நெசவாளர்கள் தங்கள் திறமையை மூட்டை கட்டிவைத்துவிட்டு ரிக்ஷா ஓட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வாரணாசியில் நரேந்திர மோதியின் வெற்றி வித்தியாசம் குறைந்தது பற்றி வாரணாசி மக்களிடம் கேட்டால், சாலைகளும், வழித்தடங்களும் வயிற்றை நிரப்பாது என்று பெரும்பாலானவர்கள் கூறுகிறார்கள்.

நரேந்திர மோதி
படக்குறிப்பு, லக்ஷ்மி சங்கர் ராஜ்பர் முன்பு விசைத்தறி இயந்திரத்தைப் பயன்படுத்தி பனாரஸ் புடவைகளைத் தயாரித்தார், ஆனால் இப்போது அவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக ரிக்ஷா ஓட்டி வருகிறார்.

உயரும் விலைவாசி மற்றும் வேலையில்லா திண்டாட்டம் குறித்து கோபம்

வாரணாசியில் உள்கட்டமைப்பு பணிகள் நடந்துள்ளன என்பதை பாஜக எதிர்ப்பாளர்களும், பாஜக ஆதரவாளர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.

இப்போது நகரத்திலிருந்து விமான நிலையத்திற்குச் செல்ல 40 நிமிடங்கள் ஆகிறது. முன்பு போக்குவரத்து நெரிசல் காரணமாக 35 கிலோமீட்டர் செல்ல இரண்டு மணி நேரம் ஆகும்.

விஸ்வநாதர் கோவில் வழித்தடம் மற்றும் படித்துறைகளில் தூய்மை அதிகரித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் "வேலைவாய்ப்பு எங்கே?" என்று மக்கள் கேட்கிறார்கள். விலைவாசி விண்ணை முட்டுகிறது. கேள்வித்தாள்கள் கசியும் சம்பவங்கள் நடக்கின்றன. காவல்துறையின் தன்னிச்சையான போக்கு அதிகரித்துள்ளது என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

வாரணாசி நகரின் வணிகம் மற்றும் வளர்ச்சி பணிகள் அனைத்துமே முழுமையாக குஜராத்திகளின் கைகளுக்கு சென்றுவிட்டதாக மக்கள் கூறுகிறார்கள். வணிகம் மற்றும் ஒப்பந்தங்கள் குஜராத்திகளிடம் சென்றுவிட்டதாக நகர மக்கள் ஏன் சொல்கிறார்கள் என்று வாரணாசி மாவட்ட பாஜக தலைவர் ஹன்ஸ்ராஜ் விஸ்வகர்மாவிடம் கேட்டோம்.

இதற்கு பதிலளித்த விஸ்வகர்மா, "குஜராத் ஒப்பந்ததாரர் கெளரவ் சிங் படேல், வாரணாசியில் TFC (வர்த்தக வசதி மையம்) மற்றும் பாபத்பூர் சாலையை மட்டுமே அமைத்துள்ளார். இதைத் தவிர குஜராத்திகள் பெற்ற வேறு எந்த ஒப்பந்தம் பற்றியும் எனக்குத் தெரியாது. சொகுசு படகுகளின் உரிமையாளர் குஜராத்தி அல்ல,” என்று கூறினார்.

“மோதியை குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்து வாரணாசி மக்கள் முட்டாள்தனமாக செயல்பட்டுள்ளனர். அவர் தோற்றிருந்தாலும் பிரதமராகியிருப்பார். ஆனால் இது எங்களுக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது. பிரதமர் மோதி இங்கிருந்து குறைந்தபட்சம் ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

“நான் வசிக்கும் காஞ்சன்பூர் வார்டில் சுமார் 3500 வாக்குகள் பதிவானது. அதில் அஜய் ராய்க்கு 1100 வாக்குகள் கிடைத்தன. யாதவர்கள், குஷ்வாஹா, படேல் மற்றும் முஸ்லிம்கள் அஜய் ராய்க்கு வாக்களித்துள்ளனர். ,” என்று ஹன்ஸ்ராஜ் விஸ்வகர்மா குறிப்பிட்டார்.

பா.ஜ.க மற்றும் நரேந்திர மோதி பற்றிய ஏமாற்றம் பிற்படுத்தப்பட்ட மக்கள், தலித்துகள் மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமே உள்ளது என்று சொல்ல முடியாது.

நரேந்திர மோதி
படக்குறிப்பு, பனாரஸில் உள்ள அஸ்ஸி படித்துறைப்பகுதியில் வசிக்கும் இவர்களின் வீடுகள் ஜெகன்நாத் வழித்தடத்திற்காக இடிக்கப்பட உள்ளன.

வழித்தடத்திற்காக நூற்றுக்கணக்கான வீடுகளை இடிக்க ஏற்பாடு

அஸ்ஸி படித்துறைப்பகுதியில் ஜெகன்நாத் வழித்தடம் அமைப்பதற்காக இடிக்கப்பட உள்ள சுமார் 300 வீடுகளில் ஜெயநாராயண் மிஷ்ராவின் வீடும் ஒன்று. மிஷ்ரா போன்ற சுமார் 300 பேரின் வீடுகள் அரசு நிலத்தில் இருப்பதாக மாவட்ட நிர்வாகம் கூறுகிறது.

“சுதந்திரத்திற்கு முன்பிருந்தே நாங்கள் குடியிருக்கும் வீடு இது. நாங்கள் சொத்து வரி செலுத்தும் வீடு, அரசு நிலத்தில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெகன்நாத் காரிடாரைக் கட்டுவது என்பது குஜராத் பாஜக தலைவர் சுனில் ஓஜாவின் யோசனை. வழித்தடம் கட்டப்படும் ஜெகன்நாதர் கோவில் பழமையான கோவில் அல்ல. வளர்ச்சி என்ற பெயரில் நாசத்தை ஏற்படுத்த நினைப்பவர்களை யாரால் தடுக்க முடியும்?” என்று ஜெயநாராயண் மிஷ்ரா குறிப்பிட்டார்.

“நான் வசிக்கும் பகுதியின் (வாரணாசி தெற்கு) பாஜக எம்எல்ஏ செளரப் ஸ்ரீவஸ்தவாவிடம், இந்த வழித்தடத்தை நிறுத்தி மக்களின் வீடுகளைக் காப்பாற்றுங்கள் என்று சொன்னேன். அப்போது அவர் உங்கள் வாக்குகள் எங்களுக்கு தேவையில்லை என்று சொல்லிவிட்டார்.” என்று அவர் மேலும் கூறினார்.

”2019 இல் பெற்ற வாக்குகளை விட மோதிக்கு ஒரு ஓட்டு குறைவாக கிடைத்தாலும் அது எனக்கு கிடைக்கும் வெற்றி என்று நான் சொன்னேன். ஆனால் சிவபெருமான் அருளால் இம்முறை அவர் இரண்டு லட்சத்து 27 ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்றுள்ளார். பா.ஜ.க.வினரின் திமிர் அதிகமாகிவிட்டதால், அதற்கு தக்க பதிலடி கொடுப்பது முக்கியமானதாகிவிட்டது. மோதியை பா.ஜ.க வினரே தோற்கடிப்பார்கள். ஏனென்றால் இடிக்கப்படும் 300 வீடுகளில் 99 சதவிகித வீடுகள் மோதி-மோதி என்று சொல்பவர்களுடையது,” என்று ஜெயநாராயண் மிஷ்ரா தெரிவித்தார்.

திலீப் படேல் பாஜகவின் காசி மண்டலத் தலைவராக உள்ளார். நகரின் வளர்ச்சிப் பணிகள் காரணமாக ஏற்பட்டுள்ள இடர்பாடுகள் காரணமாக மக்கள் மத்தியில் ஒருவித கோபம் உள்ளது என்பதை அவர் ஒப்புக்கொண்டார். ஆயினும் வளர்ச்சிப்பணிகள் அத்தியாவசியமானவை என்று அவர் கூறினார். “இடிக்கப்படும் 300 வீடுகள் சட்டப்பூர்வமாக கட்டப்பட்டவை அல்ல” என்கிறார் அவர்.

வாரணாசியில் குஜராத்திகளின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது என்ற குற்றச்சாட்டைப் பற்றிப்பேசிய படேல், "இது உள்ளூர் மக்களை பாஜகவுக்கு எதிராகத் தூண்டுவதற்காக எதிர்க்கட்சிகள் செய்யும் சூழ்ச்சி,” என்று தெரிவித்தார்.

கேள்வித்தாள் கசிவு காரணமாகவும் பா.ஜ.க மக்களின் கோபத்தை சந்திக்க வேண்டியுள்ளது என்கிறார் திலீப் படேல்.

டிஎஃப்சி மற்றும் பாபத்பூர் சாலையின் கட்டுமானத்தை குஜராத் ஒப்பந்ததாரர் கௌரவ் சிங் படேல் செய்ததாகவும், விஸ்வநாத் வழித்தட வடிவமைப்பிற்கு குஜராத்தைச் சேர்ந்தவர்கள் வந்ததாகவும் திலீப் படேல் ஒப்புக்கொள்கிறார். “இது குஜராத்தி அல்லது மராட்டி பற்றிய விஷயம் அல்ல. இது செயல்திறன் பற்றியது. நன்றாக வேலை செய்பவருக்கு பொறுப்பு கிடைக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.

நரேந்திர மோதி
படக்குறிப்பு, பனாரஸில் உள்ள நெசவாளர்கள் ஜவுளித் தொழிலை விட்டுவிட்டு ரிக்ஷா இழுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

வாரணாசியில் கிடைத்துள்ள சிறு வெற்றியின் அர்த்தம்?

நரேந்திர மோதி வாரணாசியில் போட்டியிடுவது பாஜகவின் ஒரு உத்தி.

வாரணாசியில் மோதி வெற்றியின் தாக்கம் உத்தரபிரதேசத்தில் மட்டுமல்லாமல் பிகாரிலும் ஏற்படுகிறது. இந்த இரண்டு மாநிலங்களிலும் மொத்தம் 120 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த இரண்டு மாநிலங்களிலும் அதிக இடங்களைப் பெற்றால்தான் ஒரு கட்சியால் மத்தியில் ஆட்சி அமைக்க முடியும்.

இதனுடன் கூடவே வாரணாசிக்கு கலாசார முக்கியத்துவமும் உள்ளது. வாரணாசி சிவபெருமானின் நகரமாக பார்க்கப்படுகிறது. ஞானவாபி மசூதி சர்ச்சையும் இங்கே உள்ளது. அயோத்தி மற்றும் மதுராவைப் போலவே வாரணாசியிலும் கோயில்-மசூதி தகராறு உள்ளது.

ஞானவாபி பிரச்சனை பல தசாப்தங்களாக கிடப்பில் இருந்தது. ஆனால் அயோத்தி குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு இந்த விஷயமும் நீதிமன்றத்தை எட்டியுள்ளது. ஆனால் இந்த முறை பாஜக எல்லா தரப்பிலிருந்தும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளது.

மோதியின் வெற்றி அத்தனை பெரிதாக இருக்கவில்லை, பூர்வாஞ்சலிலும் பாஜக மண்ணைக் கவ்வியது. பூர்வாஞ்சலில் 13 இடங்களில் 10 இடங்களை பாஜக இழந்தது. வாரணாசிக்கு அருகில் உள்ள பிகாரிலும் பாஜக தோல்வியடைந்தது.

இருப்பினும் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது வலுவான கோட்டையான கோரக்பூரை சுற்றியுள்ள இடங்களை காப்பாற்றுவதில் வெற்றி பெற்றுள்ளார். கோரக்பூர், மகாராஜ்கஞ்ச், தேவரியா, குஷிநகர் மற்றும் பான்ஸ்காவ் ஆகிய இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

வாரணாசி, மோதி

நரேந்திர மோதி தனது செல்வாக்கை இழக்கிறாரா?

”ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே பிரதமர் வெற்றி பெற்றது எங்களுக்கு வெட்கக்கேடான விஷயம் என்பதை ஒப்புக்கொள்கிறேன், ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என்ற எதிர்க்கட்சிகள் கிளப்பிய வதந்தியால் இது நடந்தது. இந்த வதந்தியால் தலித்துகள், காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி பக்கம் சென்றனர். சமாஜ்வாதி கட்சி காரணமாக யாதவர்களும் எங்களுக்கு எதிராக சென்றார்கள். முஸ்லிம்கள் ஏற்கனவே அவர்களுடன் இருந்தனர்,” என்று திலீப் படேல் கூறுகிறார்.

வாக்கு எண்ணிக்கையின் ஆரம்ப கட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை விட நரேந்திர மோதி பின்தங்கியிருந்தார். லால் சந்திர குஷ்வாஹா வாரணாசியில் மூத்த பா.ஜ.க தலைவர். இந்த முறை நரேந்திர மோதி தனது வேட்புமனுவில் குஷ்வாஹாவை முன்மொழிபவராக ஆக்கினார்.

நரேந்திர மோதி
படக்குறிப்பு, இந்த முறை நரேந்திர மோதி வேட்புமனு தாக்கல் செய்ய பனாரஸ் சென்றபோது, லால் சந்திர குஷ்வாஹா அவரது முன்மொழிபவராக இருந்தார்.

வாக்கு எண்ணிக்கையில் மோதி பின்தங்கியிருந்த போது..

மோதி ஆரம்பகட்டத்தில் பின்தங்கியிருந்தது பற்றி வினவப்பட்டபோது லால் சந்திர குஷ்வாஹா சிரித்துக்கொண்டே, "என் உடல்நிலை மோசமாகத் தொடங்கியது. ஏன் இப்படி நடக்கிறது என்று நான் கேட்டறிந்தேன். தற்போது முஸ்லிம் பகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திறக்கப்பட்டுள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர். அப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு விட முடிந்தது. பா.ஜ.கவினர் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். மோதியின் பெயரால் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று அவர்கள் கருதினார்கள். எதிர்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன, எனவே வாக்குகளும் அதற்கேற்ப செல்லும் என்பது அவர்களுக்குத்தெரியவில்லை. மோதி ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது,” என்று கூறினார்.

கடந்த இரண்டு தேர்தல்களிலும் பா.ஜ.கவின் எதிர்ப்பு வாக்குகள் பிரிந்தது என்பது உண்மைதான். ஆகவே பிரதமர் மோதியின் வாக்கு வித்தியாசம் அதிகரித்தது. ஆனால் இந்த முறை வாரணாசியில் போட்டி இருதரப்பிற்கு இடையேதான் இருந்தது. இந்தத் தேர்தலில் 95 சதவிகித வாக்குகள், நரேந்திர மோதி மற்றும் அஜய் ராய்க்கு இடையே பிரிந்தன. மீதமுள்ள 5 சதவிகித வாக்குகள் ஐந்து வேட்பாளர்களுக்கு சென்றன. இதில் நோட்டாவும் அடங்கும்.

மூன்றாவதாக வந்த பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அதர் ஜமால் லாரி 33 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றார் அதாவது முஸ்லிம்கள் கூட அவருக்கு வாக்களிக்கவில்லை. பனாரஸில் முஸ்லிம்களுக்கு மூன்றரை லட்சம் வாக்குகள் உள்ளன.

2019 இல் சமாஜ்வாதி கட்சியின் ஷாலினி யாதவ் 1 லட்சத்து 95 ஆயிரத்து 159 வாக்குகளும், காங்கிரஸின் அஜய் ராய்க்கு 1 லட்சத்து 52 ஆயிரத்து 548 வாக்குகளும் பெற்றனர். 2019 இல் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே கூட்டணி இருந்தது. ஷாலினி யாதவ் 18.40 சதவிகித வாக்குகளும், அஜய் ராய் 14.38 சதவிகித வாக்குகளும் பெற்றனர்.

இந்த முறை முஸ்லிம்களும் யாதவர்களும் இணைந்து மோதியின் வெற்றி வித்தியாசத்தை குறைத்துள்ளனர் என்று பா.ஜ.கவின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் பதஞ்சலி பாண்டே கூறுகிறார். "மோதி தனது இதயத்தை எடுத்து முஸ்லிம்களுக்கு கொடுத்தாலும் கூட அவர்கள் மோதிக்கு வாக்களிக்க மாட்டார்கள்," என்றார் அவர்.

ஹாஜி வகாஸ் அன்சாரி, வாரணாசியில் உள்ள ஜலாலிபுராவின் கவுன்ஸிலர். பதஞ்சலி பாண்டேவின் ’இதயம்’ குறித்த கருத்துகள் பற்றிப் பேசிய அவர், முஸ்லிம்களுக்கு மோதியின் இதயம் தேவையில்லை, மரியாதைதான் தேவை. என்றார்.

“மோதி முஸ்லிம்களை வேட்பாளர்களாக நிறுத்த ஆரம்பிக்க வேண்டும். எங்களை அன்பு நிறைந்த கண்களால் பார்க்க வேண்டும். மேலும் சில முஸ்லிம்களை தனது அமைச்சரவையில் சேர்க்க வேண்டும். இதற்குப் பிறகு முஸ்லிம்கள் யாரும் வாக்களிக்கவில்லை என்றால் அப்போது புகார் சொல்வது சரியானதாக இருக்கும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

நரேந்திர மோதி
படக்குறிப்பு, சுரேந்திர சிங் படேல் பனாரஸில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்.

காங்கிரஸ் தவறான வேட்பாளரை நிறுத்தியதா?

சுரேந்திர சிங் படேல் வாரணாசியில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர். 2002 முதல் 2017 வரை வாரணாசியில் உள்ள சேவாபுரி தொகுதியில் இருந்து சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏவாக இருந்தார். முலாயம் சிங் யாதவ் மற்றும் அகிலேஷ் யாதவ் அரசுகளில் அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.

வாரணாசியில் நரேந்திர மோதியை தோற்கடிக்க இந்த முறை நல்ல வாய்ப்பு கிடைத்ததாகவும் ஆனால் காங்கிரஸ் அந்த வாய்ப்பை தவறவிட்டதாகவும் சுரேந்திர படேல் கூறுகிறார்.

“ராகுல் காந்தியும், அகிலேஷ் யாதவும் வாரணாசியில் பேரணி நடத்த வந்தபோது, நீங்கள் சரியான வேட்பாளரை நிறுத்தவில்லை என்று அஜய் ராய் பற்றி அகிலேஷ் என் முன்னிலையில் ராகுலிடம் கூறினார். சமாஜ்வாதி கட்சி இங்கு தன் வேட்பாளரை நிறுத்தியிருந்தால் முடிவுகள் வேறுவிதமாக இருக்கும் என்று அகிலேஷ் கூறினார். இதைக்கேட்டு ராகுல் காந்தி புன்னகை செய்தார். வாரணாசியில் மோதியை காங்கிரஸ் தோற்கடிக்க நினைத்திருந்தால் அஜய் ராயை வேட்பாளராக்கியிருக்காது. ஆனால் பல நட்சத்திர வேட்பாளர்களின் விஷயத்தில் பரஸ்பர புரிதல் உள்ளது. மோதியும் அமேதி மற்றும் ரேபரேலிக்கு பிரசாரம் செய்ய செல்லவில்லை,” என்று சுரேந்திர படேல் கூறினார்.

அகிலேஷ் யாதவுக்கு, அஜய் ராயை பிடிக்காது என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு மத்திய பிரதேச சட்டப்பேரவைத்தேர்தலின் போது அகிலேஷ் யாதவுக்கும், அஜய் ராய்க்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அகிலேஷ் யாதவ் மத்தியப்பிரதேசத்தில் ’இந்தியா’ கூட்டணியின் கீழ் சில சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட விரும்பினார். ஆனால் காங்கிரஸ் அவருக்கு எந்த இடத்தையும் கொடுக்க மறுத்துவிட்டது. இந்த வாக்குவாதத்தில் அஜய் ராயும் அகிலேஷின் இலக்கானார்.

அகிலேஷ் யாதவ் அஜய் ராயை ’சிர்குட்’(எதற்கும் லாயக்கில்லாதவர்) என்று அழைத்தார். தாரா சிங் செளஹான் பா.ஜ.கவில் இணைந்த பிறகு காலியான உத்திரபிரதேசத்தின் கோசி சட்டப்பேரவை தொகுதிக்கு சென்ற ஆண்டு இடைத்தேர்தல் நடந்தது. அதில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றது. ”கோசியில் காங்கிரஸ் தனது வேட்பாளரை நிறுத்தியிருந்தால் சமாஜ்வாதி கட்சி தோல்வியடைந்திருக்கும்,” என்று இது குறித்து அஜய் ராய் கருத்து தெரிவித்தார்.

அஜய் ராயின் இந்தக் கூற்றுக்கு பதிலளித்த அகிலேஷ் யாதவ், "இதுபற்றிப்பேச அவருக்கு தகுதி இல்லை. இந்தியா கூட்டணியின் எந்தக் கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை. அவருக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது. எதற்கும் பயனில்லாத சிறிய தலைவர்களை கருத்து தெரிவிக்க விடாமல் கட்சி தடுக்க வேண்டும் என்பதே காங்கிரஸிடம் நான் விடுக்கும் வேண்டுகோள்,” என்று கூறியிருந்தார்.

நரேந்திர மோதி
படக்குறிப்பு, அஜய் ராயின் வேட்புமனு குறித்தும் பலர் கேள்வி எழுப்பினர்.

அகிலேஷ் யாதவுக்கு அஜய் ராயை பிடிக்காது

”தந்தையை மதிக்க முடியாதவர், என்னைப் போன்ற சிறிய தொண்டரை எப்படி மதிப்பார்,” என்று அகிலேஷின் இந்தக் கருத்துக்குப் பிறகு அஜய் ராய் கூறியிருந்தார்.

உத்தரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்தபோது, உத்திரபிரதேசத்தில் இந்தியா கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்று செய்தியாளர்கள் அகிலேஷிடம் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த அகிலேஷ் யாதவ், கியோட்டோவைத் தவிர உ.பி.யில் உள்ள 79 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று கூறினார். வாரணாசியை கியோட்டோ என்று அகிலேஷ் யாதவ் கேலியாக அழைத்தார். ஏனெனில் ஜப்பானிய நகரமான கியோட்டோவைப் போல வாரணாசியை உருமாற்றுவதாக 2014 இல் நரேந்திர மோதி வாக்குறுதி அளித்திருந்தார்.

அதாவது வாரணாசியில் தோல்வி ஏற்படும் என்று அகிலேஷ் யாதவும் ஏறக்குறைய உறுதியாக இருந்தார்.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சட்டப்பிரிவின் முன்னாள் தலைவரான பேராசிரியர் மகேந்திர பிரதாப் சிங், பூர்வாஞ்சலின் அரசியலை உன்னிப்பாக கவனித்து வருகிறார்.

அஜய் ராயை வேட்பாளராக நிறுத்தியது குறித்து அகிலேஷ் யாதவ் அவ்வளவாக மகிழ்ச்சியடையவில்லை என்று மகேந்திர பிரதாப் சிங் கருதுகிறார்.

வாரணாசியில் வேட்பாளராக சுரேந்திர சிங் படேல் இருந்திருந்தால் மோதி தோற்றிருப்பார் என்று அவர் தெரிவித்தார். ”இங்கு படேல்களுக்கு மூன்றரை லட்சம் வாக்குகள் உள்ளன. அந்த அளவுக்கு முஸ்லிம் வாக்காளர்களும் உள்ளனர். சுமார் ஒரு லட்சம் யாதவர்கள் உள்ளனர். தலித்துகளின் எண்ணிக்கையும் சுமார் ஒன்றரை லட்சம். அஜய் ராயின் பூமிஹார் சாதிக்கு ஒரு லட்சம் ஓட்டுகள் கூட இல்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் மோதியை தோற்கடிக்க சுரேந்திர சிங் படேல் மிகவும் பொருத்தமானவராக இருந்திருப்பார்,” என்று அவர் குறிப்பிட்டார்.

நரேந்திர மோதி

நரேந்திர மோதிக்கு எதிராக அஜய் ராய்

வாரணாசியில் மொத்தம் 19 லட்சத்து 97 ஆயிரத்து 578 வாக்காளர்கள் உள்ளனர். ஜூன் 1ம் தேதி நடந்த வாக்குப்பதிவில் 56.35 சதவிகிதம் பேர் வாக்களித்தனர் அதாவது 11 லட்சத்து 30 ஆயிரத்து 143 வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தனர். இதில் நரேந்திர மோதி 54.24 சதவிகிதம் அதாவது 6 லட்சத்து 12 ஆயிரத்து 970 வாக்குகள் பெற்றுள்ளார். மறுபுறம் காங்கிரஸின் அஜய் ராய்க்கு 40.74 சதவிகிதம் அதாவது 4 லட்சத்து 60 ஆயிரத்து 457 வாக்குகள் கிடைத்தன. அதாவது நரேந்திர மோதி 1 லட்சத்து 52 ஆயிரத்து 513 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றிபெற்றார்.

2019 தேர்தலில் வாரணாசியில் மோதி பெற்ற வாக்குகள் 63.6 சதவிகிதமாகவும், 2014 இல் 56.4 சதவிகிதமாகவும் இருந்தது. 2019 இல் நரேந்திர மோதி 4 லட்சத்து 79 ஆயிரத்து 505 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2024 இல் மோதியின் வெற்றி, 2019 இல் பெற்ற வெற்றியைக்காட்டிலும் சிறியது என்பது மட்டுமல்ல, 2014 இல் பெற்ற வெற்றியை விடவும் சிறியது. 2014 இல் நரேந்திர மோதி 3 லட்சத்து 71 ஆயிரத்து 784 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வாரணாசியில் 2014 உடன் ஒப்பிடும்போது 2019 இல் நரேந்திர மோதியின் வாக்கு சதவிகிதம் 7.25 சதவிகிதம் அதிகரித்தது, அதேசமயம் பிரதமர் மோதியின் வாக்கு சதவிகிதம் 2019 உடன் ஒப்பிடும்போது 2024 இல் 9 சதவிகிதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது.

2014 முதல் 2024 வரை வாரணாசியில் நரேந்திர மோதிக்கு அடுத்ததாக வாக்குகள் பெற்றவர் ஒவ்வொரு முறையும் மாறிக்கொண்டே இருந்திருக்கிறார்.

2014 இல் வாரணாசியில் நரேந்திர மோதிக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகள் பெற்றவர் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கேஜ்ரிவால். 2019 இல் சமாஜ்வாதி கட்சியின் ஷாலினி யாதவ் 2வது இடத்தில் இருந்தார். 2024 இல் காங்கிரஸின் அஜய் ராய்க்கு அந்த இடம் கிடைத்துள்ளது.

2014 ஆம் ஆண்டு வாரணாசியில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிட்டது. 2019 இல் சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் ஆர்எல்டியுடன் கூட்டணி வைத்தது. 2024 இல் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸும் இணைந்து தேர்தலில் போட்டியிட்டன.

2024 இல் வாரணாசியில் மோதிக்கு எதிரான எதிர்க்கட்சி வாக்குகள் பிளவுபடவில்லை என்பதும், இது மோதியின் வெற்றி வித்தியாசத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதும் தரவுகளிலிருந்து தெளிவாகிறது.

2014 இல் வாரணாசியில் மோதிக்கு எதிராக மொத்தம் 42 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 2019 இல் 26 பேர் போட்டியிட்டனர், இந்த முறை அதாவது 2024 இல் ஏழு பேர் மட்டுமே போட்டியிட்டனர்.

வாக்குகளின் பங்கு அடிப்படையில் பார்த்தால், 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த முறை இரண்டாவது இடம் பெற்ற வேட்பாளருக்கு அதிகபட்சமாக 40.4 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன. 2014 இல் அரவிந்த் கேஜ்ரிவால் இரண்டாவது இடத்தில் இருந்தார். அவரது வாக்கு விகிதம் 20.3 சதவிகிதமாக இருந்தது. 2019 இல் ஷாலினி யாதவ் 18.4 சதவிகித வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் இருந்தார்.

வாரணாசியில் ரோஹ்னியா, வாரணாசி வடக்கு, வாரணாசி தெற்கு, வாரணாசி கான்ட் மற்றும் சேவாபுரி ஆகிய ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த எல்லா சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 2019 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் இந்த முறை நரேந்திர மோதியின் ஓட்டு குறைந்து, அஜய் ராயின் ஓட்டு அதிகரித்துள்ளது.

இந்த முறை எதிர்கட்சி வாக்குகள் அனைத்துமே பிளவுபடாமல் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய்க்கு கிடைத்துள்ளது. இது மோதியின் வெற்றி வித்தியாசத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)