திருச்சி: பள்ளிவாசல் கட்ட இந்து அமைப்புகள் எதிர்ப்பு - தீர்வு காண நாளை அமைதிப் பேச்சுவார்த்தை

திருச்சி பள்ளிவாசல் கட்ட எதிர்ப்பு
படக்குறிப்பு, பக்ரித் தினத்தன்று பிரச்னைக்குரிய இடத்தில் அனுமதி பெற்று தொழுகை நடத்தக் கூடியிருந்த முஸ்லிம்கள்
  • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழ்நாட்டின் மத்திய மாவட்டங்களில் ஒன்றான திருச்சி, மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்து வரும் ஊர்களில் ஒன்று எனத் தன்னுடைய ஊரும் வரலாறும் என்ற புத்தகத்தில் எழுத்தாளர் நந்தலாலா குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் திருச்சியை அடுத்த திருவெறும்பூர் பகுதியில், பள்ளிவாசல் கட்டுவதற்கு இந்து அமைப்புகள் கடந்த ஓராண்டாக எதிர்ப்பு தெரிவித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசியபோது இருபது ஆண்டுகளுக்கு முன் பள்ளிவாசல் கட்ட பணம் கொடுத்து இந்த இடத்தை வாங்கியதாகக் கூறுகிறார் கட்டப்பட்டு வரும் பள்ளிவாசலின் நிர்வாகக்குழு உறுப்பினர் சாகுல்.

ஆனால், அது பொது இடம் எனவும் அங்கு சிறுவர் பூங்கா அமைக்கப்படும் என 25 ஆண்டுகளுக்கு முன் கூறப்பட்டதாகவும் கூறுகிறார் பள்ளிவாசல் கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜக பிரமுகரான பிரபாகரன்.

இந்த விவகாரத்திற்குத் தீர்வுகாண நாளை இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. இந்து - முஸ்லிம் இரு தரப்பினர் இடையே ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்னைக்கான காரணம் குறித்து அறிய பிபிசி தமிழ் களத்திற்குச் சென்றது.

வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சிறுவர் பூங்கா இடத்தில் பள்ளிவாசல் கட்டுவதாக புகார்

திருச்சி மாநகரில் இருந்து சுமார் 25 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது திருவெறும்பூரில் உள்ள இந்திரா நகர். இங்கு சுமார் 70க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப் பகுதி உருவானபோது வீட்டுமனைகள் பிரிக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட இடம் சிறுவர் பூங்காவிற்காக பொது இடமாக ஒதுக்கப்பட்டது.

அந்த இடத்தை நிலத்தின் உரிமையாளர் விற்பனைக்கான இடம் எனக் கூறி 20 ஆண்டுகளுக்கு முன் இஸ்லாமிய அமைப்பு ஒன்றுக்கு விற்பனை செய்துள்ளதாகத் தெரிய வருகிறது.

இந்திரா நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வரும் முஸ்லிம்கள் இணைந்து அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்ட முடிவு செய்து கடந்த ஓராண்டுக்கு முன் பள்ளிவாசல் கட்ட அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணிகளைத் தொடங்கினர்.

அங்கு முஸ்லிம்கள் பள்ளிவாசல் கட்டுவதற்கு, இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

திருச்சி பள்ளிவாசல் கட்ட எதிர்ப்பு
படக்குறிப்பு, இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து பள்ளிவாசலுக்கான கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன

இந்நிலையில் சம்பந்தப்பட்ட இடத்தில் இந்த மாதம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் ஒரு நாள் மட்டும் தொழுகை நடத்திக் கொள்ளலாம் என திருச்சி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் அனுமதி அளிக்கப்பட்டது.

வருவாய் கோட்டாட்சியர் அனுமதி அளித்ததற்கு பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். குழந்தைகள் விளையாடுவதற்காக ஒதுக்கப்பட்ட பொது இடத்தில், குறிப்பிட்ட சமூகத்தினரின் மத வழிபாடு நடைபெற்றால், இந்து அமைப்புகள் சார்பாக ராமர், விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பக்ரித் பெருநாளன்று தொழுகை நடத்த வேண்டாம் என காவல்துறையினர் முஸ்லிம்களிடம் வேண்டுகோள் விடுத்தனர். இந்த இடம் யாருக்குச் சொந்தமானது என்று அமைதிப் பேச்சுவார்த்தையில் முடிவு செய்து கொள்ளுமாறு காவல்துறையினர் இருதரப்பினரிடையே தெரிவித்தனர்.

பிரச்னையைப் பேசித் தீர்க்கும் வரை, சம்பந்தப்பட்ட இடத்திற்குள் யாரும் செல்லாதவாறு காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டது.

தொழுகை நடத்த கடைசி நேரத்தில் அனுமதி மறுப்பு

திருச்சி பள்ளிவாசல் கட்ட எதிர்ப்பு
படக்குறிப்பு, சம்பந்தப்பட்ட இடத்திற்குள் யாரும் செல்லாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது

இந்த விவகாரம் தொடர்பாக புதிதாகக் கட்டப்பட்டு வரும் பள்ளிவாசலின் நிர்வாகக் குழு உறுப்பினர் சாகுல் பிபிசி தமிழிடம் பேசினார்.

“கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் பள்ளிவாசல் கட்டுவதற்காகப் பணம் கொடுத்து இந்த இடத்தை வாங்கினோம். அப்போது அந்த இடத்திற்கு சர்வே எண் தவறாக இருந்ததால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதைத் திருத்தம் செய்து திருத்தல் பத்திரம் பெற்றுள்ளோம். கடந்த ஆண்டு பள்ளிவாசல் கட்ட அடித்தளம் அமைத்தபோது அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டக்கூடாது எனவும், சிறுவர் பூங்கா அமைக்க பேரூராட்சி நிர்வாகம் இடம் ஒதுக்கியுள்ளதாகவும் பாஜக பிரமுகர் ஒருவர் வரைபடத்தைக் காட்டி பிரச்னை செய்தார்.”

இதையடுத்து பள்ளிவாசல் நிர்வாகக்குழு சார்பாக வருவாய்த் துறையினரை அணுகி அந்த இடம் பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்டுள்ளதா என விசாரித்தபோது தங்கள் தரப்பு ஆவணங்களை ஆய்வு செய்த அதிகாரிகள், பள்ளிவாசலுக்கான இடம் பூங்காவுக்கு ஒதுக்கப்பட்டதில்லை என்று தெரிவித்ததாகக் கூறுகிறார் சாகுல்.

அதைத் தொடர்ந்து பள்ளிவாசல் கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்க முயன்றபோது பாஜக மற்றும் இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து பேசிய சாகுல், ”இந்தப் பகுதியில் முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கின்றனர். மேலும் பிற மதத்தைச் சேர்ந்த பொதுமக்கள் யாரும் பள்ளிவாசல் கட்ட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாக சில தனிநபர்கள் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எங்கள் மார்க்கத்தில் பள்ளிவாசல் கட்ட சில விதிமுறைகள் உள்ளன. அதன்படி அடுத்தவர்களுக்குச் சொந்தமான இடத்திலோ, அரசின் புறம்போக்கு இடத்திலோ கட்டக்கூடாது. இதனால் தொழுகை நடக்கும்போது பிரச்னை எழலாம்," என்று தெரிவித்தார்.

இந்து அமைப்பினர் எதிர்ப்புக்கு என்ன காரணம்?

திருச்சி பள்ளிவாசல் கட்ட எதிர்ப்பு
படக்குறிப்பு, ”முஸ்லிம்கள் பள்ளிவாசல் கட்ட அனுமதி வழங்கினால், நீதிமன்றத்தை நாடி பள்ளிவாசல் கட்டுவதற்குத் தடையாணை வாங்குவோம்” என்று இந்து அமைப்பினர் கூறுகின்றனர்.

பள்ளிவாசல் கட்ட இடம் ஒதுக்கப்பட்டுள்ளது எனக் கூறியிருந்தால் 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தை யாரும் வாங்கியிருக்க மாட்டோம் என்கிறார் பிரச்னைக்குரிய இடத்திற்கு எதிரே வசித்து வரும் பாஜக பிரமுகரான பிரபாகரன்.

பிபிசியிடம் பேசிய அவர், “இந்திரா நகர் பகுதியில் சுமார் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இது டிடிசிபி(DTCP) அப்ரூவல் பெற்ற இடம். இங்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு இடம் வாங்கியபோது பள்ளிவாசல் கட்டப்படும் இடத்தில் பூங்கா அமையவுள்ளதாகக் கூறி வரைபடத்தில் குறிப்பிட்டு இருந்தனர். ஆனால் கடந்த ஆண்டு திடீரென முஸ்லிம்கள் அங்கு பள்ளிவாசல் கட்ட முயன்றனர். அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன்,” என்றார்.

தன்னுடைய எதிர்ப்பையும் மீறி கட்டுமானப் பணிகள் நடந்த நிலையில், இந்து அமைப்புகளை அழைத்து பள்ளிவாசல் கட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதாகக் கூறுகிறார், பிரபாகரன்.

”பிரச்னைக்குரிய இடத்தில் சிறுவர்களுக்கான பூங்கா அமைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் தரப்பு கோரிக்கை. மாறாக அங்கு மும்மதங்களைச் சேர்ந்த எந்த வழிபாட்டுத் தலமும் அமைய வேண்டாம். எங்களுக்கு இடத்தை விற்ற உரிமையாளர் இதே போல வேறு ஒரு பகுதியிலும் பூங்கா இடத்தை மாற்றி விற்பனை செய்துள்ளார். அதுபோலவே முஸ்லிம்களும் ஏமாற்றப்பட்டு இருக்கலாம்.”

இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் முறையாக இடத்தை அளந்து பூங்கா அமைக்க வேண்டும், இல்லையெனில் நீதிமன்றத்தில் இது குறித்து முறையிடுவோம் என்று பிரபாகரன் தெரிவித்தார்.

மத நல்லினக்கத்திற்குப் பெயர் போன திருச்சியில் பள்ளிவாசல் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகச் சொல்லப்படுவது ஆச்சரியத்தைத் தருவதாகக் கூறுகிறார் திருச்சியைச் சேர்ந்த ஊறும் வரலாறும் புத்தகத்தின் ஆசிரியரான நந்தலாலா.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், திருச்சி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு நகரம். அதற்கு எடுத்துக்காட்டாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் துலுக்க நாச்சியார் சன்னதி உள்ளது. திருச்சியில் மும்மதத்தினரும் பெரும்பான்மையாக வாழ்வதால் மதரீதியாக இதுவரை எந்தப் பிரச்னையும் ஏற்பட்டதில்லை, என்றார்.

விரைவில் நிரந்தரத் தீர்வு

திருச்சி பள்ளிவாசல் கட்ட எதிர்ப்பு

இந்தப் பிரச்னை தொடர்பாக, கடந்த வாரம் திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ஜெயபிரகாசம் தலைமையில் முதல்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்ட இடம் பொது இடமா அல்லது தனி நபர் இடமா என்பதை முறைப்படி அளந்து பார்த்து முடிவு செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது..

பொது இடமாக இருந்தால் அதில் பள்ளிவாசல் கட்டி முஸ்லிம்கள் தொழுகை நடத்த முயற்சி செய்யக்கூடாது என்றும் தனிப்பட்ட நபருக்கு (ஜமாத்திற்கு) சொந்தமான இடமாக இருந்தால் பள்ளிவாசல் கட்டிக் கொள்ளலாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு இருதரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.

பள்ளிவாசல் கட்டுவது தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்னை விரைவில் சரி செய்யப்படும் என்கிறார் திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார்.

இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "வீட்டுமனைகளைப் பிரித்து விற்பனை செய்யும்போது பொது இடம் ஒதுக்க வேண்டும் என்று விதி உள்ளது. அப்படி ஒதுக்கிய இடத்தை வேறு நபர்களிடம் வீட்டுமனை எனக் கூறி விற்பனை செய்துள்ளனர் என்று தெரிய வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட இடத்தை வாங்கியவர்கள் மீது எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும் 20 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த இடம் விற்பனை செய்யப்பட்டுள்ளதால் முறையாக அளந்து இடம் யாருக்குச் சொந்தமானது என்று இறுதி முடிவு எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ் ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்  (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)