கொரோனா காலத்தில் மோதி அமைத்த பொருளாதார பணிக்குழு என்ன செய்தது? ஓர் அலசல்

கோவிட் சூழலிலிருந்து இந்திய வணிகங்களை பாதுகாக்க அமைக்கப்பட்ட மோதி அரசின் பொருளாதார பணிக்குழு என்ன செய்தது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொரோனா காலக்கட்டத்தின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிக அளவில் இடம்பெயர்ந்தனர்
  • எழுதியவர், ஜுகல் ஆர் புரோஹித்
  • பதவி, பிபிசி நியூஸ்

“கோவிட் நெருக்கடி ஒரு அணுகுண்டு வீச்சின் பேரழிவைப் போன்றது. ஆம், ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா மற்றும் நாகசாகியின் மக்கள் அணுகுண்டு வீச்சில் இருந்து மீண்டுவர எத்தனை ஆண்டுகள் ஆனது? அதுபோல, கொரோனா நோய்த் தொற்று சூழல் முடிவுக்கு வந்த போதிலும், என்னைப் போன்ற தொழிலதிபர்கள் இன்னும் மீள முடியாமல் நெருக்கடியில் இருக்கிறோம்,” என்கிறார் மோகன் சுரேஷ்.

மோகன் சுரேஷ் (63), 700-க்கும் மேற்பட்ட சங்கங்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்திய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான கூட்டமைப்பின் (FISME) முன்னாள் தலைவர். பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட டெக்னோ ஸ்பார்க் என்ற உற்பத்தி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

மோகன் சுரேஷின் நிறுவனம் ‘இந்தியாவின் நம்பர் 1 தொழில்துறை கிரானைட் அமைப்பு உற்பத்தியாளராக’ இருந்ததாக அவர் சொல்கிறார். அவரது நிறுவனத்தின் சிற்றேட்டில் (brochure) முதல் பக்கத்தில் பிரதமர் மோதியின் புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. லண்டனில் 12-ஆம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்தவாதியான பசவேஸ்வரா சிலையை பிரதமர் மோதி திறந்து வைக்கும் புகைப்படம் அது. அந்தச் சிலையை உற்பத்தி செய்து வழங்கியது மோகன் சுரேஷின் தொழிற்சாலைதான்.

ஆனால், இன்று அவரது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. வங்கி, அவற்றை ‘செயல்படாத சொத்து’ (Non-Performing Assets-NPA) என அறிவித்திருக்கிறது.

மோகன் சுரேஷை தொழிற்சாலையில் சந்தித்துப் பேசினோம், “எங்கள் பிரச்னைகளை யாரும் கவனிப்பதில்லை. எங்கள் மதிப்பீட்டின்படி, சுமார் 30% சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) பாதிக்கப்பட்டுள்ளன. பல மூடப்பட்டன. எங்கள் மீது கவனம் செலுத்துமாறு பிரதமரையும், நிதி அமைச்சகத்தையும் கேட்டுக் கொள்கிறேன்,” என்று கூறினார்.

கோவிட் சூழலிலிருந்து இந்திய வணிகங்களை பாதுகாக்க அமைக்கப்பட்ட மோதி அரசின் பொருளாதார பணிக்குழு என்ன செய்தது?
படக்குறிப்பு, மோகன் சுரேஷின் தொழிற்சாலை

பரபரப்பான மும்பை நகரம், நேரம் இரவு 8 மணியைக் கடந்திருந்தது. 36 வயதான உதித் குமார் (அவரது உண்மையான பெயர் அல்ல), அப்போதுதான் பணி முடிந்து வீடு திரும்பியிருந்தார்.

கொரோனா சூழலுக்கு முன்பு ஒரு பார் மற்றும் உணவகத்தின் உரிமையாளராக இருந்தவர், இன்று நடைபாதையின் ஒரு மூலையில் முட்டை பொடிமாஸ் பரிமாறிக் கொண்டிருக்கிறார்.

"கோவிட் பொது முடக்கத்தைத் தொடர்ந்து மக்களுக்கும் வணிகங்களுக்கும் உதவுவதாக உருவாக்கப்பட்டக் கொள்கைகள், எதார்த்தத்துடன் ஒத்துப் போகவில்லை. அந்தக் கொள்கைகள் எனக்கு உதவவில்லை. அதனால்தான் நான் இங்கே இருக்கிறேன்," என்கிறார்.

"என்னிடம் 12 பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் எந்த வங்கியும் எனக்கு உதவவில்லை. ஏனென்றால், நான் ஒரு வாடகை இடத்தில் உணவகம் நடத்தி வந்ததாக அவர்கள் சொன்னார்கள். இதனால் நான் எந்த உதவித் தொகைக்கும் தகுதி பெறவில்லை. நான் அதிக வட்டிக்குக் கடன்களை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, ஆனால் இரண்டாவது கொரோனா அலையைத் தொடர்ந்து, அனைத்து முயற்சிகளும் பலனற்றுப் போயின," என்று அவர் என்னிடம் கூறினார்.

கர்நாடக வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்தின் (FKCCI) தலைவர் ரமேஷ் சந்திர லஹோட்டியின் கூற்றுபடி, “கொரோனா நேரத்தில் அரசாங்கம் தொழில் முனைவோருக்கு 'கை கொடுத்தது'. ஆனால் 2022 முதல் அரசின் உதவி மற்றும் முயற்சிகள் நிறுத்தப்பட்டன. கோவிட் சூழலால் வணிகம் சரிந்து, பொருளாதார நெருக்கடியில் சிக்கிய நிறுவனங்களில் 25 சதவீதத்தினர் இன்னும் மீளவில்லை. ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை," என்று கூறினார்.

சுரேஷ், உதித் போன்றோரின் நிலைக்கு என்ன காரணம்?

கோவிட் சூழலிலிருந்து இந்திய வணிகங்களை பாதுகாக்க அமைக்கப்பட்ட மோதி அரசின் பொருளாதார பணிக்குழு என்ன செய்தது?
படக்குறிப்பு, உதித் குமாரின் சாலையோரக் கடை (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

நாடு தழுவிய பொது முடக்கம் அமல்படுத்துவதற்கு முன்பே, நிதியமைச்சர் தலைமையில் ‘கோவிட் -19 பொருளாதார உதவி பணிக்குழு’ (COVID-19 Economic Response Task Force) அமைப்பதாக பிரதமர் மோதி அறிவித்தார். மார்ச் 19, 2020 அன்று இது குறித்து அறிவிக்கப்பட்டது.

இந்தப் பணிக்குழு குறித்து பிரதமர் மோதி, “அனைத்து பங்குதாரர்களிடம் இருந்தும் தொடர்ந்து உரையாடி, கருத்துகள் கேட்கப்படும். அனைத்து சூழ்நிலைகளையும் பகுப்பாய்வு செய்து பொருளாதாரச் சிக்கல்களைக் குறைக்க எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் திறம்படச் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்து, எதிர்காலத்தில் முடிவுகளை எடுக்கும்,” என்று அறிக்கையில் குறிப்பிட்டார்.

ஆனால், இதுகுறித்து பிபிசி ஆய்வு செய்தபோது, கோவிட்-19 பொருளாதாரப் பணிக்குழு உண்மையில் ஆலோசித்ததாகவோ, அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியதாகவோ அல்லது அறிக்கை வெளியிட்டதாகவோ எந்த ஆதாரமும் இல்லை.

பிபிசி, 2020 மற்றும் 2023-க்கு இடையில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ஐப் பயன்படுத்தி, பிரதமர் அலுவலகத்திடம் (PMO) பின்வருவனவற்றைக் கோரியது:

  • பணிக்குழு கூட்டம்: பங்கேற்பாளர்களின் பெயர்கள் மற்றும் அவை நடைபெற்ற தேதிகள் உட்பட பணிக்குழு நடத்திய கூட்டங்களின் முழு விவரம்
  • பணிக்குழுவின் வரையறை நியதிகள்
  • பணிக்குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட இறுதி அறிக்கை
  • தேசிய பொதுமுடக்கம் விதிப்பது குறித்து பணிக்குழு அரசுக்கு ஆலோசனை வழங்கியதா?
  • பொதுமுடக்கம் விதிக்கப்பட்டதற்கு முன்னும் பின்னும், அரசாங்கத்தின் செயல்பாடு தொடர்பான பணிக்குழு பரிந்துரைகள் என்ன?
கோவிட் சூழலிலிருந்து இந்திய வணிகங்களை பாதுகாக்க அமைக்கப்பட்ட மோதி அரசின் பொருளாதார பணிக்குழு என்ன செய்தது?
படக்குறிப்பு, ஆர்டிஐ ஸ்கிரீன்ஷாட்

பிரதமர் அலுவலகம் எங்கள் விண்ணப்பங்களை நிதி அமைச்சகத்திற்கு அனுப்பியது.

மேலும், இந்த ஆர்.டி.ஐ விண்ணப்பம் நிதிச் செயலாளர் மற்றும் மத்திய செலவினச் செயலாளர் டாக்டர் டி.வி.சோமநாதன் மற்றும் பிற அமைச்சகங்களுக்கும் அனுப்பப்பட்டதாக ஆர்.டி.ஐ தரவு காட்டுகிறது.

அதன்பின், “பணிக்குழு குறித்து எங்களிடம் எந்தத் தகவலும் இல்லை” என்று நிதியமைச்சகத்திடம் இருந்து எங்களுக்குப் பதில் வந்தது. பின்னர், மேல்முறையீடு செய்து மனுத் தாக்கல் செய்தோம்.

கோவிட் சூழலிலிருந்து இந்திய வணிகங்களை பாதுகாக்க அமைக்கப்பட்ட மோதி அரசின் பொருளாதார பணிக்குழு என்ன செய்தது?
படக்குறிப்பு, ஆர்டிஐ ஸ்கிரீன்ஷாட்

மேல்முறையீட்டு விண்ணப்பத்திற்குப் பதில் அளித்த நிதி அமைச்சகம் மீண்டும் ‘உங்கள் விண்ணப்பம் தொடர்பான எந்தத் தகவல்களும் இல்லை’ என்று குறிப்பிட்டது.

பொது முடக்க காலகட்டத்தில் பிரதமர் கலந்துகொண்ட கூட்டங்களின் விவரங்களையும் கேட்டிருந்தோம். எனினும் அந்தத் தகவலும் வழங்கப்படவில்லை.

கோவிட் சூழலிலிருந்து இந்திய வணிகங்களை பாதுகாக்க அமைக்கப்பட்ட மோதி அரசின் பொருளாதார பணிக்குழு என்ன செய்தது?
படக்குறிப்பு, ஆர்டிஐ ஸ்கிரீன்ஷாட்

பொருளாதார பணிக்குழு உருவாக்கப்பட்ட சில நாட்களில் நடந்தவற்றைப் பற்றி பிபிசி சில தகவல்களைக் கண்டறிந்தது.

நிதியமைச்சர் மார்ச் 24 அன்று வெளியான ஒரு காணொளியில், “பல்வேறு நிலைகளைக் கொண்ட பணிக்குழுவின் அமைப்பு ஏற்கெனவே செயல்பட்டு வருகிறது. துணை குழுக்கள் எங்களுக்கு உள்ளீடுகள் வழங்குகின்றன. ஒவ்வொரு தகவலும் சம்பந்தப்பட்ட துறைகளுடன் விரிவாகப் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. மேலும் பொருளாதார தகவல் தொகுப்பு உருவாக்கப்படுகிறது,” என்று பேசியிருந்தார்.

இந்திய ரிசர்வ் வங்கி, நிதி அமைச்சகம், எம்.எஸ்.எம்.இ அமைச்சகம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், நிதி ஆயோக் உள்ளிட்ட முக்கிய அமைச்சகங்களுடன் கலந்தாலோசிக்காமல் பொது முடக்கம் எவ்வாறு விதிக்கப்பட்டது என்பது முந்தைய பிபிசி ஆய்வில் வெளியிடப்பட்டிருந்தது.

'கோவிட்' காலத்தில் பொருளாதார முடிவுகள் எவ்வாறு எடுக்கப்பட்டன?

பேராசிரியர் ஆஷிமா கோயல் 2020-இல் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் (EAC) உறுப்பினராக இருந்தார்.

"நான் கோவிட் பொருளாதாரப் பணிக் குழுவில் உறுப்பினர் இல்லை, எனவே அதைப் பற்றி கருத்து தெரிவிக்க முடியாது, ஆனால் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக, நாங்கள் மின்னஞ்சல் மூலமாகவும் நேரடி சந்திப்புகள் மூலமாகவும் உள்ளீடுகளை வழங்கினோம். நாங்கள் கூட்டங்களின் அட்டவணையை வைத்திருந்தோம். அதன்படி கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன," என்றார்.

"கோவிட் தீவிரமடைந்த ஆரம்ப காலகட்டத்தில், ​​அரசுத் தரப்பில் நிறைய தகவல்கள் சேகரிக்கப்பட்டன. நிறைய தொழில் துறையினர் மற்றும் நிபுணர் அமைப்புகளுடன் பேசி அவர்களின் கருத்துகளைப் பெறத் தொடங்கினர். அந்த உள்ளீடுகளை வைத்து நாங்கள் உருவாக்கிய கொள்கை தேர்வுகள் ஒட்டுமொத்தமாக வேலை செய்தன என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் விளக்கினார்.

இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ப.சிதம்பரம் கோவிட் நேரத்தில் "பிரதமர் மோதி தனது பொருளாதார ஆலோசகர்களை நீக்கிவிட்டு புதிய குழுவை நியமிக்க வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.

அவர் என்னிடம் பேசுகையில் “பணிக்குழுவில் (அறிவிப்புக்குப் பிறகு) என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் கோவிட் சூழலின்போது அரசாங்கத்தின் பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கை மிகவும் வலுவின்றி இருந்ததை நான் பார்க்கிறேன். உண்மையில் அது முழு தோல்விதான். அந்தச் சூழலைக் கையாள அரசாங்கம் முற்றிலும் தயாராக இல்லை," என்றார்.

“கோவிட் பாதிப்புக்குப் பிறகு ஆயிரக்கணக்கான சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. அரசாங்கம் போதுமான கடன் கொடுத்ததன் விளைவாகப் பெரும் வேலை இழப்பு ஏற்பட்டது,” என்கிறார் ப.சிதம்பரம்

எம்.எஸ்.எம்.இ துறைக்கான திட்டங்களை அரசாங்கம் அறிவித்த போதிலும், கோவிட் சூழலால் அத்துறை சார்ந்த வேலை இழப்புகள் குறித்த தரவுகளை அரசு பராமரிக்கவில்லை என்பதை மார்ச் 2022-இல் ஒப்புக்கொண்டது.

கோவிட் சூழலிலிருந்து இந்திய வணிகங்களை பாதுகாக்க அமைக்கப்பட்ட மோதி அரசின் பொருளாதார பணிக்குழு என்ன செய்தது?
படக்குறிப்பு, சுரேகா மோகன்

‘நாங்கள் தற்கொலை செய்துகொள்ள வேண்டுமா?’

பெங்களூருவில், டெக்னோஸ்பார்க்கில் தனது கணவருடன் பணிபுரியும் சுரேகா மோகன், வங்கியில் கடனை திருப்பிச் செலுத்த முடியாத சூழலை விவரித்தார்.

"பொது முடக்கத்தின்போதுகூட எங்கள் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதை நிறுத்தவில்லை என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இன்று, கோவிட் சூழல் மற்றும் ரஷ்யா-யுக்ரேன் போர் எங்கள் வணிகத்தைச் சேதப்படுத்தியது என்பதை வங்கி அறிந்திருந்தாலும், அவர்கள் தங்கள் கடன்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்கள். நாங்கள் வாங்கிய வங்கிக் கடனைக் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்," என்றார்.

"எங்கள் தொழிலில் முதலீடு செய்வதற்குப் பதிலாக, நாங்கள் அவர்களுக்குக் கடன் செலுத்தி வருகிறோம். எங்கள் தொழிலைத் தக்கவைக்க எங்கள் தனிப்பட்ட நிதியைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம். ஆனால் இது எவ்வளவு காலத்திற்கு நிலைக்கும்? கடன் செலுத்த முடியாமல் நாங்கள் தற்கொலை செய்துகொள்ள வேண்டுமா என்று எனது வங்கியிடம் கேட்டேன்,” என்கிறார்.

சுரேகாவின் கேள்வி தொழில் முனைவோர் எதிர்கொள்ளும் ஆபத்தான போக்கைப் பிரதிபலிக்கிறது, அதன் தாக்கம் தரவுகளிலும் வெளிப்படுகிறது. கோவிட் சூழலின்போது இந்தியாவின் தற்கொலை சம்பவங்களும் அதிக அளவில் நடந்தன.

அரசாங்கத் தரவுகளை பிபிசி ஆய்வு செய்தபோது, வேலையின்மை, வறுமை, தொழில் தொடர்பான பிரச்னைகளால் பொருளாதாரத்தை இழந்து தற்கொலைகள் அதிக அளவில் நடந்ததாகக் கண்டறிந்தது.

கோவிட் சூழலிலிருந்து இந்திய வணிகங்களை பாதுகாக்க அமைக்கப்பட்ட மோதி அரசின் பொருளாதார பணிக்குழு என்ன செய்தது?
கோவிட் சூழலிலிருந்து இந்திய வணிகங்களை பாதுகாக்க அமைக்கப்பட்ட மோதி அரசின் பொருளாதார பணிக்குழு என்ன செய்தது?

'அரசு எந்த முன்னேற்பாடும் செய்யவில்லை’

பொருளாதாரப் பணிக்குழு செயல்பட்டிருந்தால் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், பிரபல பொருளாதார நிபுணருமான டாக்டர் ரகுராம் ராஜனிடம் கேட்டேன்.

வீடியோ அழைப்பில் பேசிய அவர், “பல்வேறு திட்டத்தின் செலவுகள் மற்றும் பலன்களைப் பற்றிய விரிவான பார்வையை இது வழங்கியிருக்கும். மேலும் அரசாங்கம் பணிக்குழுவின் உள்ளீடுகளை வைத்து ஆழ்ந்த புரிதலின் அடிப்படையில் ஒரு முடிவை எடுத்திருக்கலாம்," என்றார்.

"பின்னோக்கிப் பார்த்தால், நிதர்சனம் என்னவென்றால், அரசாங்கம் முழுமையாகக் கவனம் செலுத்தாத பல துறைகள் இருந்தன. உதாரணமாக கொரோனா சூழலில் புலம்பெயர்ந்தோர் மீதான விளைவைப் பற்றி அரசு சிந்திக்கவே இல்லை. மேலும், திடீரென மேற்கொள்ளப்பட்ட பொது முடக்கம், பொருளாதாரத்தைப் பெரிதும் சீர்குலைத்தது. பொது முடக்கம் அறிவிக்கப்படுவதற்கு முன், விளைவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதா? நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா என்பது தெரியவில்லை,” என்றார்.

அரசு நடவடிக்கைகளில் எது பலனளித்தது, எது பலனளிக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ள ஒரு விசாரணை அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கோவிட் சூழலிலிருந்து இந்திய வணிகங்களை பாதுகாக்க அமைக்கப்பட்ட மோதி அரசின் பொருளாதார பணிக்குழு என்ன செய்தது?

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ரகுராம் ராஜன்

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தாக்கத்தை அரசு ஆவணங்கள் பிரதிபலிக்கின்றன. இது ‘2020-21 முதல் காலாண்டில் 23.9%’ சரிவைக் கண்டது மற்றும் அந்த ஆண்டு 6.6 சதவீதம் சரிவைக் கண்டது.

கோவிட் பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டது குறித்துப் பேசிய அரசு, "அரசின் செயல்பாடுகள் ஒவ்வொரு துறையையும் ஒவ்வொரு நபரையும் சென்றடைந்தது,” என்று கூறியது.

அரசின் ஒரு சில நலத்திட்டங்கள்: மோதி அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ரொக்கத் தொகையும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு இலவச தானியங்கள் மற்றும் கடன் உத்தரவாதங்கள் நேரடியாகப் பலனடையும்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. வணிகர்கள் எளிதாக கடன் பெறும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இந்த நலத்திட்ட நடவடிக்கைகளில் கடன் திருப்பிச் செலுத்துதல் மற்றும் வரி இணக்கம் தொடர்பான தளர்வு விதிமுறைகளும் அடங்கும். மாநில அரசுகளின் கடன் வரம்புகளும் அதிகரிக்கப்பட்டன.

கடந்த 2021-ஆம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது, ​​நிதி அமைச்சர், அரசு வகுத்துள்ள நிவாரணங்கள் ‘ஐந்து மினி பட்ஜெட்’க்கு சமம் என்றார்.

அரசாங்கத்தின் பொருளாதார அறிக்கைகள், 2024 மற்றும் 2029-க்கு இடைப்பட்ட காலப்பகுதியை இலக்காகக் கொண்டுள்ளது. சமீபத்தில், பிரதமர் மோதி : “ஐந்து வருடங்களில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்,” என்றார்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கூற்றுப்படி, இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 2020-இல் இருந்து மீண்ட பிறகு, 7.8 சதவீதத்தில் இருந்து 9.7 சதவீதமாக உயர்ந்தது. தற்போது, ​​6.8 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தைப் பாராட்டிய உலக வங்கி, ஒரு எச்சரிக்கையையும் முன்வைத்தது.

அதில், “உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளை விடவும் வேகமான வளர்ச்சி விகிதத்தை இந்தியா தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் அதன் கோவிட் சூழலுக்குப் பிந்தைய வளர்ச்சி மெதுவாக இருக்கும்,” எனக் குறிப்பிட்டனர்.

நீடித்த தாக்கம்

கோவிட் சூழலை நினைவுகூர்ந்து பேசிய டெக்னோஸ்பார்க்கின் மோகன் சுரேஷ், "அரசாங்கத்தின் கோவிட் காலச் செயல்பாடுகள், கள நிலவரத்தை முழுவதும் உள்வாங்காமல், பொருளாதார நெருக்கடி சூழல் பற்றிய தரவுகளைச் சேகரிக்காமல் மேற்கொள்ளப்பட்டன. போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை,” என்று கூறினார்.

மும்பையில் சாலையோர உணவகம் வைத்திருக்கும் உதித் குமார், "பொருளாதார பணிக்குழு, வணிகர்கள் பற்றி அரசாங்கத்திற்குச் சரியான உள்ளீடுகளை வழங்கியிருக்கலாம், அப்படிச் செய்திருந்தால் நான் இந்நேரம், எனது பார் மற்றும் உணவகத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்க முடியும். கோவிட் சூழலுக்கு முன்பு வரை, நான் விமானத்தில் மட்டுமே பயணம் செய்தவன். ஆனால் இன்று, என்னால் ரயில்களில் மட்டுமே செல்ல முடிகிறது, என் வாழ்க்கை தலைகீழானது,” என்றார்.

அனைத்து தரப்புப் பங்குதாரர்களின் பொருளாதாரத் தரவுகளை வைத்துச் செயல்பட்டிருக்க வேண்டிய பணிக்குழு, செயல்படாமல் போனதால், பாதிக்கப்பட்ட வணிகர்கள் வாழ்க்கை தரம் என்னவானது?

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினர் பேராசிரியர் கோயல் கூறுகையில், “கோவிட் சூழலில், கொள்கை வகுப்பாளர்களாக நாங்கள் நிறைய அழுத்தங்களை எதிர்கொண்டோம், அமெரிக்கா செய்வதை இந்தியா செய்ய வேண்டும் என அழுத்தம் அதிகரித்தது," என்றார்.

"அதாவது அனைவருக்கும் பொருளாதார ஆதரவு வழங்க வேண்டும், சிறு தொழில்களுக்கும் நிதி ஆதரவு வழங்க வேண்டும். அது எப்படி சாத்தியமாகும்? இது பெரிய நிதிப் பற்றாக்குறையை ஏற்படுத்தும். ஆம், எங்கள் பற்றாக்குறைகள் அதிகரித்தன,” என்றார்.

மேலும் கூறுகையில், “அந்த நேரத்தில் இந்திய மேக்ரோ பாலிசி சிறப்பாகச் செயல்பட்டது என உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, மேலும் பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதங்கள் அதிகரித்தது மற்றும் பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவியது. எனவே அரசின் கொள்கைகளை மதிப்பிடுவதற்கான மிகவும் புத்திசாலித்தனமான வழி, அது ஏற்படுத்திய விளைவுகளைப் பார்ப்பது தான். விளைவுகள் நன்றாக இருந்தால், அரசின் செயல்பாடும் நன்றாக இருந்தது என்பதே அர்த்தம்," என்றார்.

கோவிட் சூழலிலிருந்து இந்திய வணிகங்களை பாதுகாக்க அமைக்கப்பட்ட மோதி அரசின் பொருளாதார பணிக்குழு என்ன செய்தது?
படக்குறிப்பு, மோகன் சுரேஷ்

ஆனால், டாக்டர் ரகுராம் ராஜனின் கருத்து இதற்கு உடன்படவில்லை.

“வளர்ச்சி விகிதம் 2016 முதல் 6 சதவீதமாகப் பாரமரித்திருந்தால், நிலைத்தன்மை இருந்திருக்கும். ஆனால், நம் பொருளாதார வளர்ச்சிக்கும், இன்றைய நிலைக்கும் இடையே கணிசமான இடைவெளி உள்ளது. இடைவெளி என்பது வளர்ச்சியைப் பற்றியது அல்ல, அது மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவைப் (GDP) பற்றியது - நம் பொருளாதாரம் சீரான வளர்ச்சியை அடையவில்லை. மேலும், நாம் இழந்ததை ஈடுசெய்ய தற்போதைய வளர்ச்சி விகிதம் போதுமானதா? இல்லை நம்மை பணக்கார நாடாக மாற்றினால் போதுமா?" என்று கேட்கிறார் ராஜன்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO), அதன் சமீபத்திய அறிக்கையில், "இந்தியாவில் வேலைவாய்ப்பு நிலைமை மோசமாக உள்ளது" என்று கூறியுள்ளது.

நீண்டகால பொருளாதார போக்குகளைப் பற்றிக் குறிப்பிடுகையில், "2000-19-ஆம் ஆண்டுகளில், குறைந்த உற்பத்தித் திறன் கொண்ட விவசாயத்தில் இருந்து ஒப்பீட்டளவில் அதிக உற்பத்தித் திறன் கொண்ட விவசாயம் அல்லாத துறைகளுக்கு வேலைவாய்ப்பில் மாற்றம் ஏற்பட்டது. இருப்பினும், இந்த மாற்றம் 2019 மற்றும் 2022-க்கு இடையில் மெதுவாகிப் பின்னர் தலைகீழாக மாறியது. கோவிட் நெருக்கடியால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை இதற்குக் காரணமாக இருக்கலாம்," என்கிறது.

இளைஞர்களிடையே வேலையின்மை விகிதம் குறித்த கேள்விக்கு, "கல்வி பட்டப்படிப்புகளின் நிலைகள் அதிகரித்துள்ளன. ஆனால் இளங்கலை அல்லது அதற்கு மேற்பட்ட பட்டம் பெற்ற ஆண்கள் இப்போது வேலையில்லாமல் உள்ளனர். ஆண்களைவிட பெண்களே அதிக எண்ணிக்கையில் வேலையில்லாமல் இருக்கின்றனர்," என்று கூறுகிறது.

"நீங்கள் பிரதமரிடமோ அல்லது நிதியமைச்சரிடமோ என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என்று சுரேகாவிடம் கேட்டதற்கு, "கடனை அடைக்காமல் நாங்கள் ஓடிவிடவில்லை, எங்களைக் கொஞ்சம் வளர விடுங்கள், வளர்ச்சி அடைந்தால்தான் பொருளாதாரம் வளரும், நாடும் வளரும்,” என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)