தமிழ்நாட்டில் அதிமுக வாக்குகள் பாஜக பக்கம் திரும்பியுள்ளதா?

பாஜக, அதிமுக ஒப்பீடு

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் முதன்முறையாகத் தனது தலைமையில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜகவுக்கு ஓரிடத்தில்கூட வெற்றி கிடைக்கவில்லை. 9 தொகுதிகளில் பாஜக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் 3 தொகுதிகளில் அதன் கூட்டணியில் போட்டியிட்ட பிற வேட்பாளர்கள் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.

இந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன? தமிழ்நாட்டில் பாஜகவின் வலிமை முன்பைவிட வலுவாகியுள்ளதா?

குறிப்பாக, திமுக, அதிமுக அல்லாத பிற கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் பாஜகவின் செயல்பாடு எப்படி உள்ளது? விரிவாகப் பார்க்கலாம்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் - பாஜக கூட்டணி

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், ஓ. பன்னீர்செல்வம் அணி ஆகியவை இணைந்து நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தன.

அதிகபட்சமாக பாஜக 24 தொகுதிகளில் போட்டியிட்டது. தமிழ்நாட்டில் முதன்முறையாகத் தனது தலைமையில் கூட்டணி அமைத்த பாஜக, வெற்றிக்கான அனைத்து வழிகளிலும் மும்முரமாகப் பணியாற்றியது. மக்களிடையே நன்கு அறியப்பட்ட பாஜக தலைவர்கள், மற்ற கட்சிகளைச் சேர்ந்த செல்வாக்கு பெற்ற நபர்கள், பிரபலங்கள் என தேடித் தேடி அக்கட்சி வேட்பாளராக்கியது. தெலங்கானா ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்திரராஜன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட்டார்.

மத்திய இணையமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் பாஜக சார்பில் களம் கண்டனர். மாநில பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வாக இருந்தபோதிலும், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக களமிறக்கியது.

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் பாரிவேந்தர் ஆகியோர் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட்டனர். பாஜக ஒவ்வொரு தொகுதியிலும் வலுவான வேட்பாளர்களை நிறுத்தியிருந்ததால் திமுக, அதிமுகவுக்கு களத்தில் அக்கட்சி கடும் சவால் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

வாக்குப்பதிவுக்குப் பின் வெளியான கருத்துக் கணிப்புகள் பலவும் அதிமுக கூட்டணிக்கு இணையாக பாஜக கூட்டணி வாக்குகளைப் பெறும் என்று கணித்திருந்தன. இன்னும் சில கருத்துக் கணிப்புகள், அதிமுக கூட்டணியைக் காட்டிலும் வாக்கு சதவீதத்தில் பாஜக அணி முந்துவதுடன் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட்ட கோவை உள்ளிட்ட சில தொகுதிகளையும் வெல்லக் கூடும் என்றும் கூறின.

பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பிலும்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவு

தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஊக்கம் தரும் வகையில் கருத்துக் கணிப்புகள் அமைய, நாடே எதிர்பார்த்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை, திமுக கூட்டணி ஒட்டுமொத்தமாக அனைத்து இடங்களையும், அதாவது 39 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று தேர்தல் ஆணைய வலைதளம் தரும் புள்ளிவிவரம் கூறுகிறது.

அந்தப் புள்ளிவிவரத்தின்படி பார்த்தால், தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி 12 தொகுதிகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதில் 9 தொகுதிகளில் பாஜகவும், மற்ற 3 இடங்களில் கூட்டணியில் போட்டியிட்ட பிற கட்சிகளின் வேட்பாளர்களான ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், பாமகவின் சௌமியா அன்புமணி ஆகியோரும் இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளனர்.

பாஜக கூட்டணி 2வது இடம் பிடித்த தொகுதிகள்

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கீழ்க்கண்ட 9 தொகுதிகளில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

  • தென் சென்னை
  • கோவை
  • கன்னியாகுமரி
  • நீலகிரி
  • வேலூர்
  • திருநெல்வேலி
  • மத்திய சென்னை
  • மதுரை
  • திருவள்ளூர்

இவை தவிர, பாஜக கூட்டணி சார்பில் தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியும், ராமநாதபுரம் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், தேனி தொகுதியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் இரண்டாவது இடம் பிடித்துள்ளனர்.

2014 - 2024 தேர்தல் முடிவுகள் ஒப்பீடு

பாஜக - அதிமுக ஒப்பீடு

பட மூலாதாரம், ANNAMALAI/FACEBOOK

கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் அதிமுக 37 தொகுதிகளை வென்ற நிலையில், திமுகவுக்கு ஓரிடம்கூட கிடைக்கவில்லை. பாஜக கூட்டணி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணனும், தருமபுரியில் அன்புமணி ராமதாசும் வெற்றி பெற்றனர்.

வேலூர், கோயம்புத்தூர், பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, விருதுநகர் ஆகிய 6 தொகுதிகளில் அந்தக் கூட்டணி இரண்டாவது இடத்தையும் பிடித்திருந்தது. அதில் வேலூரில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகமும், பொள்ளாச்சியில் கொங்கு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரனும் பாஜகவின் சின்னத்தில் போட்டியிட்டனர். மற்ற 4 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளான தேமுதிக, மதிமுக ஆகியவை இரண்டாவது இடத்திற்கு வந்திருந்தன.

பாஜக இம்முறை கூடுதலாக 7 தொகுதிகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் பாஜக ஆதரவு தளங்களாகக் கருதப்படும் கன்னியாகுமரி, கோவை தவிர தென் சென்னை, நீலகிரி, வேலூர், திருநெல்வேலி, மத்திய சென்னை, மதுரை, திருவள்ளூர் ஆகிய தொகுதிகளிலும் அக்கட்சி இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. இவற்றில் தென் சென்னை, நீலகிரி, வேலூர், திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் முறையே தமிழிசை சௌந்திரராஜன், எல்.முருகன், ஏ.சி.சண்முகம், நயினார் நாகேந்திரன் ஆகிய வலுவான வேட்பாளர்கள் களம் கண்டிருந்தனர்.

மத்திய சென்னையில் பி.வினோஜூம், மதுரையில் ராம சீனிவாசனும், திருவள்ளூர் தொகுதியில் பொன் பாலகணபதியும் பாஜக சார்பில் போட்டியிட்டு இரண்டாவது இடம் பிடித்துள்ளனர்.

பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டதற்கு மாறாக, கோவை தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரிடம் தோல்வியடைந்தார். 2014ஆம் ஆண்டு திமுக, அதிமுக கூட்டணி இன்றி பாஜக வெற்றி பெற்ற கன்னியாகுமரி தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தோல்வியே மிஞ்சியிருக்கிறது. அவரை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

அதிமுக வாக்குகள் பாஜகவுக்கு மடை மாறியுள்ளதா?

பாஜக, அதிமுக ஒப்பீடு

பட மூலாதாரம், Getty Images

சட்டமன்றத்தில் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும், மக்கள் மன்றத்தில் நாங்களே உண்மையான எதிர்க்கட்சி என்று நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பாஜக தலைவர்கள் தொடர்ந்து முழங்கி வந்தனர். நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கும் தங்களுக்கும் இடையில்தான் உண்மையான போட்டி நிலவுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரசாரங்களில் தொடர்ச்சியாகக் கூறி வந்தார். தேர்தல் முடிவுகளைக் கணக்கில் கொள்ளும்போது, பாஜக கூட்டணி 13 தொகுதிகளில் 2வது இடம் பெற்ற நிலையில், அதிமுகவோ 26 தொகுதிகளில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

பாஜக இரண்டாவது இடம் பிடித்த தொகுதிகளில் பெரும்பாலானவை மிக மூத்த தலைவர்கள், தாமரைச் சின்னத்தில் மற்ற சிறிய கட்சிகளின் தலைவர்கள் போட்டியிட்டவை. தேர்தல் ஆணைய வலைதளத்தில் வெளியாகியுள்ள புள்ளிவிவரங்களைப் பார்த்தால், அந்தத் தொகுதிகளில் எல்லாம் அதிமுகவின் வாக்கு வங்கி கணிசமாகச் சரிந்துள்ளது.

திருநெல்வேலி தொகுதியை உதாரணமாக எடுத்துக் கொண்டால், பாஜக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் சுமார் மூன்றரை லட்சம் வாக்குகள் வாங்கியுள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி ஒரு லட்சத்திற்கும் குறைவான வாக்குகளே பெற்றுள்ளார். தமிழிசை சௌந்திரராஜன் போட்டியிட்ட தென் சென்னை, எல்.முருகன் போட்டியிட்ட நீலகிரி ஆகிய தொகுதிகளில் இதுபோன்ற நிலையைப் பார்க்க முடிகிறது. வேலூரில் தாமரை சின்னத்தில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் 2014ஆம் ஆண்டைப் போலவே இம்முறையும் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பாஜக வலிமை பெற்றுள்ளதா?

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி பார்த்தால் பாஜக வலிமை பெற்றுள்ளதா? அதிமுகவுக்கு அச்சுறுத்தும் வகையில் வளர்ந்துள்ளதா? என்ற கேள்வியை மூத்த பத்திரிகையாளர் மணியிடம் கேட்டபோது, "அதிமுகவை அச்சுறுத்தும் வகையில் பாஜக வளர்ந்திருப்பதாகக் கூற முடியாது," ," என்றே தெரிவித்தார்.

"தேர்தல் முடிவுகள் முழுவதும் வெளியான பின்னர், வாக்கு சதவீதங்களைப் பார்த்த பின்னரே அதுகுறித்து விரிவாகப் பேச முடியும். ஆனாலும், பாஜக கூட்டணி இத்தனை இடங்களில் இரண்டாவது இடம் பிடித்திருப்பது என்பது உண்மையில் அதிமுகவுக்கான எச்சரிக்கை மணியாகவே கருத வேண்டும்," என்றும் கூறினார் மூத்த பத்திரிகையாளர் மணி.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)