ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்தியா, பாகிஸ்தானில் இருந்து குவியும் வாழ்த்து - தாலிபன் கூறியது என்ன?

AFG vs BAN

பட மூலாதாரம், Getty Images

ஐசிசி டி20 உலகப்கோப்பையின் சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வங்கதேச அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது.

இந்த சாதனை ஆப்கானிஸ்தான் அணிக்கு மிக முக்கியமானது. ஐசிசி உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அரை இறுதிக்கு நுழைவது இதுவே முதல் முறையாகும்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் இந்த வெற்றியை, கிரிக்கெட் ஆர்வலர்கள் எப்படி பார்க்கின்றனர்?

ஆப்கன் கிரிக்கெட் வரலாறு என்ன?

1839-ம் ஆண்டு ஆங்கிலோ- ஆப்கன் போரின் போது கிடைத்த இடைவெளியில் பிரிட்டன் துருப்புகள் கிரிக்கெட் விளையாடியுள்ளனர். இதுதான் ஆப்கானிஸ்தானில் பதிவான முதல் கிரிக்கெட் போட்டியாகும்.

இருப்பினும், 1990 களின் நடுப்பகுதியில் தான், ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் உண்மையில் வேரூன்றத் தொடங்கியது. பாகிஸ்தானில் உள்ள அகதிகள் முகாம்களில் வளர்ந்த ஆப்கானியர்கள் கிரிக்கெட் மீது ஆர்வத்துடன் தங்கள் பிறந்த இடத்திற்குத் திரும்பினர்.

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் முதல் முறையாக ஆட்சிக்கு வந்த ஓராண்டுக்கு முன்பு 1995-ம் ஆண்டு ஆப்கன் கிரிக்கெட் வாரியம் உருவாக்கப்பட்டது.

அமெரிக்கா தலைமையிலான படையினர் 2001-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து, தாலிபன்களை ஆட்சியில் இருந்து அகற்றிய பிறகு தேசிய கிரிக்கெட் அணி உருவாக்கப்பட்டது. 2017-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் உறுப்பினராக ஆப்கானிஸ்தான் சேர்ந்தது.

whatsapp

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

2021-ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த தாலிபன்களின் கொடிக்கு பதிலாக, கருப்பு, சிவப்பு, பச்சை நிறம் கொண்ட கொடியை அணிந்தே ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாடுகிறது.

தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பிறகு நஸீப் கான் என்பவரை ஆப்கன் கிரிக்கெட் வாரிய தலைவராக நியமித்தது.

‘’இந்த வெற்றி, நாட்டில் உள்ள மக்களுக்கு நிறைய நம்பிக்கையை அளிக்கும். எங்கள் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் ஒரே விஷயம் கிரிக்கெட்தான்’’ என ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தனில் வெளியுறத்துறை அமைச்சர் மாவ்லவி அமிர் கான் மிட்டாகி, கேப்டன் ரஷித் கானுக்கு வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை ஆப்கன் கிரிக்கெட் வாரியம் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

மூத்த கிரிக்கெட் வீரர்களின் வாழ்த்து

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் மாஸ்டர் பிளாஸ்டருமான சச்சின் டெண்டுல்கர் ஆப்கானிஸ்தான் அணியை வாழ்த்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ’’ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உங்களது அரையிறுதிக்கான பயணம் அபாரமானது. இன்றைய வெற்றி, உங்களது கடும் உழைப்பு மற்றும் உறுதிப்பாட்டிற்கு ஓர் உதாரணம். உங்களது முன்னேற்றம் பெருமையாக உள்ளது’’ என பதிவிட்டுள்ளார்.

ரஷித் கான்

பட மூலாதாரம், X/Sachin Tendulkar

ஆஸ்திரேலியாவின் ஆல் ரவுண்டர் டிம் மூடி,’’ வாவ், என்னவொரு போட்டி. விறுவிறுப்பு நிறைந்ததாக இருந்தது. இந்த மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு வாழ்த்துக்கள்’’ என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

‘’வாவ் ஆப்கானிஸ்தான். நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து அரையிறுதியை எட்டியுள்ளது. என்னவொரு முயற்சி. இதைதான் முன்னேற்றம் என்பார்கள். வாழ்த்துகள்’’ என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாக் வாழ்த்தியுள்ளார்.

யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, பத்ரிநாத் என பலரும் ஆப்கானிஸ்தானை வாழ்த்தியுள்ளனர்.

ரஷித் கான்

பட மூலாதாரம், getty images

படக்குறிப்பு, வெற்றி கொண்டாட்டத்தில் ரஷித் கான்

பாகிஸ்தானில் இருந்தும் வாழ்த்து

முன்னாள் பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான கம்ரான் அக்மல், ரஷித் கான் மற்றும் நவீன் உல்ஹக்கை வாழ்த்தி பதிவிட்டுள்ளார். ’’அரையிறுதிக்கு நுழைந்த ஆப்கனுக்கு வாழ்த்துகள். அருமையான கிரிக்கெட். என்னவொரு சாதனை. பந்துவீச்சாளர்களின் அருமையான திறன்’’ என பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் அரசியல் தலைவர்களும் ஆப்கானிஸ்தான் அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். டெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் முன்னாள் தலைவர் ஃபவாட் சவுத்ரி,’’ காபுல் மற்றும் கந்தகார் பாய்ஸ், உலகில் மிகப்பெரிய விளையாட்டுப்போட்டியின் அரையிறுதிக்கு நுழைந்துள்ளனர்.’’ என வாழ்த்தியுள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்  (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)