இஸ்ரேலுடன் மோதலுக்கு நடுவே இரான் அதிபர் பாகிஸ்தான் பயணம் ஏன்? மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?

காணொளிக் குறிப்பு, இஸ்ரேலுடன் போர்ப் பதற்றத்திற்கு நடுவே இரான் அதிபர் பாகிஸ்தான் பயணம் ஏன்?
இஸ்ரேலுடன் மோதலுக்கு நடுவே இரான் அதிபர் பாகிஸ்தான் பயணம் ஏன்? மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?

இஸ்ரேல் உடனான மோதலுக்கு நடுவே, இரான் அதிபர் இப்ராஹும் ரைஸி பாகிஸ்தானுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.

இரான் - பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு உறவுக்கு முக்கியத்துவம் தருவதுதான் இந்த பயணத்தின் முக்கிய நோக்கம் என இரான் அதிபரின் பயணம் தொடர்பாக பாகிஸ்தானில் உள்ள இரானிய தூதரகம் பிபிசியிடம் தெரிவித்தது.

மறுபுறம், இஸ்ரேல்- இரான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் வேளையில் ரைஸியின் பாகிஸ்தான் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இஸ்ரேலுடனான மோதலைத் தொடர்ந்து, இரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக பாகிஸ்தானைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் இரான் - பாகிஸ்தான் இடையேயான உறவில் சற்று விரிசல் ஏற்பட்டது. ஜனவரி 15ஆம் தேதி பாகிஸ்தானுக்குள் இரான் தாக்குதல் நடத்த, அடுத்த நாளே இரான் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளுமே தாங்கள் மேற்கொண்ட தாக்குதலை பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை என குறிப்பிட்டன.

இந்த கசப்பான நிகழ்வுக்குப் பிறகு இரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி மூன்று நாள் பயணமாக பாகிஸ்தானுக்கு சென்றிருக்கிறார்.

இரான் vs பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

இரான் - இஸ்ரேல் சச்சரவில் பாகிஸ்தான் நிலை என்ன?

இஸ்ரேல் – இரான் இரு தரப்பும், அதிகரித்து வரும் பதற்றத்தைத் தவிர்க்க வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியது.

ஏப்ரல் 19ஆம் தேதி , பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மும்தாஸ் ஜோஹ்ரா பலோச், "ஏப்ரல் 1 அன்று இரானிய துணைத் தூதரகம் மீதான இஸ்ரேலின் பொறுப்பற்ற தாக்குதல் ஏற்கனவே பிராந்தியத்தின் பாதுகாப்பை மேலும் மோசமாக்கியுள்ளது." என கவலை தெரிவித்தார்.

இந்த பிராந்தியத்தில் இஸ்ரேல் மேலும் தாக்குதல்களை நடத்துவதை தடுக்க வேண்டும் என்றும் சர்வதேச சட்டங்களை மீறியதற்காக இஸ்ரேலை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் எனவும் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சம் வேண்டுகோள் விடுத்தது.

மேற்கு நாடுகள் இரான் மீது அதிருப்தியில் உள்ள நிலையில், இப்ராஹிம் ரைஸியின் வருகையால் பாகிஸ்தான், வெளிநாடுகளின் அழுத்தத்தை எதிர்கொள்ளும் நிலை ஏற்படுமா என்ற கேள்வியும் எழுகிறது.

மேற்கு நாடுகள், மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவின் விவகாரங்களை உன்னிப்பாக கவனித்து வரும் ஆய்வாளர் டாக்டர் ரஃபத் ஹுசைன், ரைஸியின் இந்த பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என கூறுகிறார்.

இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய அவர், இஸ்ரேலுடனான மோதல் தொடங்கிய பின்னர், எந்த நாடும் இரானுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை, இத்தகைய சூழலில், பாகிஸ்தான் உடனான தங்களது உறவு நல்ல நிலையில் உள்ளது என உலக நாடுகளுக்கு தெரிவிக்க இரான் முயலும் என்றார்.

இரான் vs பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

ரைஸியின் பயணத்தை மேற்குலக நாடுகள் எப்படி பார்க்கும்?

இரானுக்கான பாகிஸ்தான் தூதராக பணியாற்றிய ரிஃபாத் மசூத், இது தொடர்பாக பிபிசி உருதுவிடம் பேசும்போது, `இதுபோன்ற வருகைகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அடிப்படையில் நடைபெறும் விஷயம் என்கிறார். ஆனால் இந்த முறை இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஆழமான பதற்றம் இருப்பதால் பயணத்தில் சில சிரமங்கள் இருப்பதாக அவர் கூறுகிறார்

இந்த சுற்றுப்பயணத்தின் போது மத்திய கிழக்கின் நிலைமை குறித்து நிச்சயமாக விவாதிக்கப்படும் என்றும் ரிஃபாத் மசூத் குறிப்பிடுகிறார்

பிற நாடுகளின் அழுத்தத்தை எதிர்கொள்கிறதா பாகிஸ்தான்?

பாகிஸ்தானும் இரானும் நெருக்கமாவதை மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்கா ஒருபோதும் விரும்பாது, எந்த நாடு இரானுடன் நெருக்கமாக வருகிறதோ, அது அமெரிக்காவின் அழுத்தத்தை எதிர்கொள்கிறது என ரிஃபாத் மசூத் கூறுகிறார்.

இரான் எங்கள் அண்டை நாடு, அதனுடன் வரலாற்று ரீதியிலான உறவுகளைக் கொண்டுள்ளோம் என்று அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வருகிறது.

மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, இந்த பிராந்தியத்தில் உள்ள மக்களின் உணர்வு தங்களுக்கு எதிராக இருப்பதையும், தாங்கள் தனிமைப்படுத்தப்படுவதையும் நினைத்து பார்க்க வேண்டும் என ரிஃபாத் மசூத் தெரிவித்துள்ளார்

மறுபுறம், பாகிஸ்தானுக்கும் இரானுக்கும் இடையிலான உறவுகளை கண்காணிக்கும் மற்ற நிபுணர்கள் அதிபர் ரைசியின் வருகை காரணமாக பாகிஸ்தான் மீது வெளிநாட்டு அழுத்தங்கள் எதுவும் இருக்காது என்று கருதுகின்றனர்.

Quincy Institute-ன் மத்திய கிழக்கு திட்டத்தின் துணை இயக்குநராக உள்ள ஆடம் வெய்ன்ஸ்டீன், ` பாகிஸ்தான் - இரான் இடையிலான உறவு தற்போது சிறப்பாக இல்லாததால், ரைஸியின் பயணம் தொடர்பாக பாகிஸ்தான் மீது வெளிநாடுகளின் அழுத்தம் இருக்காது என்று கூறுகிறார்

இந்த பதற்றத்தின் பின்னணியில் தன்னை ஒரு மத்தியஸ்தராகக் காட்ட பாகிஸ்தான் விரும்பினால், அது வேறு விசயம். அப்படியே நடந்தாலும், பாகிஸ்தானால் ஒரு ஆக்கப்பூர்வ மத்தியஸ்தராக இருக்க முடியாது என ஆடம் வெய்ன்ஸ்டீன் நம்புகிறார்.

மத்திய கிழக்கில் இஸ்ரேலுடன் பதற்றம் உள்ள போதிலும், எல்லாம் இயல்பாக இருப்பதாக இரான் காட்டிக்கொள்ள விரும்புகிறது. இந்த பயணத்தின் நோக்கமும் அதுதான் என்றும் அவர் கருதுகிறார்.

இரான் vs பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

இரான் - பாகிஸ்தான் இடையேயான பதற்றம்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாகிஸ்தானுக்கும் இரானுக்கும் இடையே ஏற்பட்ட இடைவெளியைக் குறைக்கும் முயற்சியாகவும் இந்தப் பயணம் இருக்கக் கூடும்.

இரான் அதிபர் ரைசியும் பாதுகாப்பு விவகாரங்களைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவார் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இரானும் பாகிஸ்தானும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதாக ஆடம் வெய்ன்ஸ்டீன் பிபிசியிடம் தெரிவித்தார்.

இரானும், மத்திய கிழக்கு நாடுகளும் பாகிஸ்தானில் வகுப்புவாதத்தை தூண்டிவிட்டன, பிரிவினைவாத பலூச் குழு இரு நாடுகளுக்கும் பெரும் சவாலாக மாறியுள்ளது. இவ்விஷயத்தில் இணைந்து செயலாற்றுவதற்கு பதிலாக, இரு நாடுகளும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றன என்று அவர் கூறுகிறார்.

மறுபுறம், வாஷிங்டனில் உள்ள நியூ லைன்ஸ் இன்ஸ்டிடியூட் ஃபார் ஸ்ட்ராடஜி அண்ட் பாலிசியுடன் தொடர்புடைய டாக்டர் கம்ரான் புகாரி, அதிபர் இப்ராஹிம் ரைஸியின் பயணம் மத்திய கிழக்கின் நிலைமையை விட இரான் - பாகிஸ்தானின் பாதுகாப்பு சவால்களைத் தீர்ப்பதில் தொடர்புடையது என்று கூறுகிறார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பாதுகாப்பு ஒரு முக்கிய பிரச்னையாக உள்ளது. இரான் அரசு பாகிஸ்தானை சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சின் நட்பு நாடாக பார்க்கிறது. இந்த இரு நாடுகளும் ஜெய்ஷ் அல்-அட்ல் என்ற தீவிரவாத அமைப்பை ஆதரிக்கின்றன என்பது இரானின் குற்றச்சாட்டு.

இது தொடர்பாக கம்ரான் புகாரி, இரான் பாகிஸ்தானை சந்தேகத்துடன் பார்க்கிறது, தங்களுக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய விரும்புவதாக தெரிவிக்கிறார்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)