வியர்வைக்குத் தடை, ரத்தத்தை துடைக்க கைக்குட்டை - ஒலிம்பிக்கில் 7 வினோதமான விதிமுறைகள்

ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கான அசாதாரணமான விதிமுறைகள்

பட மூலாதாரம், Getty Images

2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் சுமார் 90 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் பதக்கங்களை வெல்வதற்கான போராட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

பதக்கங்களை நோக்கிய இந்த பயணத்தில் குழப்பமான, வினோதமான விதிமுறைகளையும் அந்த வீரர்கள் கடந்தாக வேண்டும். தாடி எவ்வளவு நீளமாக இருக்கலாம் என்பது முதல் ஒரு தடகள வீரர் தனது ‘ரத்தம் தோய்ந்த கைக்குட்டையை’ என்ன செய்ய வேண்டும் என்பது வரை உள்ள சில அசாதாரணமான ஒலிம்பிக் விதிகளைக் குறித்து பார்ப்போம்.

1. வியர்வை வடிந்தால் தடை

ஒலிம்பிக் மல்யுத்த வீரர்கள் களத்தில் வியர்த்தபடி வருவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. போட்டியின் தொடக்கத்தில் நடுவர் இரு போட்டியாளர்களையும் ஈரப்பதம் உள்ளதா என்று சோதிப்பார்.

தேவைப்பட்டால் மீண்டும் உடலை நன்றாக துடைத்துக்கொண்டு வாருங்கள் எனக்கூறி அவர்களை அனுப்பலாம். உடலில் காணப்படும் எண்ணைய் பிசுக்கு அல்லது ஒட்டும் தன்மை கொண்ட பொருளுக்கும் இதே விதி பொருந்தும்.

நகங்கள் ஒட்ட வெட்டப்பட வேண்டும் மற்றும் 5 மிமீக்கு மேல் தாடி இருக்கக்கூடாது.

தாடி கூடாது அல்லது முகத்தில் மிக்குறைவான முடிதான் இருக்கலாம் என்ற அதே விதி குத்துச்சண்டைக்கும் பொருந்தும்.

ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கான அசாதாரணமான விதிமுறைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1960 ஒலிம்பிக் போட்டியின் போது எத்தியோப்பிய தடகள வீரர் அபேபி பிகிலா வெறுங்காலுடன் ஓடினார்.

2. வெறுங்காலுடன் ஓடலாமா?

டிராக் அண்ட் ஃபீல்ட் விளையாட்டு வீரர்களுக்கான காலணி விதிமுறைகள், வடிவமைப்பு மற்றும் பொருட்களின் அடிப்படையில் மிகவும் சிக்கலானவை. ஏனெனில் நிர்வாக அமைப்புகள், தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கும் நியாயமற்ற அனுகூலம் பெறுவதற்கும் இடையில் சமநிலையை இவை ஏற்படுத்த முயற்சி செய்கின்றன.

ஆனால் விளையாட்டு வீரர்கள் அவற்றை அணிய வேண்டியது கட்டாயமில்லை. இந்த விளையாட்டுகளுக்கான சர்வதேச மேலாண்மை அமைப்பான வேர்ல்ட் அத்லெடிக்ஸின்படி, வீரர்கள் ட்ராக் அண்ட் ஃபீல்ட் நிகழ்வுகளில் வெறுங்காலுடன் அல்லது ஒன்று அல்லது இரண்டு கால்களில் ஷூக்களை அணிந்துகொண்டு போட்டியிடலாம்.

வெறுங்காலுடன் பங்கேற்ற விளையாட்டு வீரர்கள் சமீபத்திய ஒலிம்பிக் டிராக் அண்ட் ஃபீல்டில் பெரிய வெற்றிகளைப் பெறவில்லை. ஆனால் எத்தியோப்பியாவின் அபேபி பிகிலா 1960இல் ரோமில் நடந்த மாரத்தான் போட்டியில் காலணி இன்றி ஓடி வெற்றி பெற்றார்.

ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கான அசாதாரணமான விதிமுறைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜிம்னாஸ்டிக் வீரர்கள், தங்கள் உபகரணங்களை உடைத்தாலும் அல்லது இழந்தாலும் விளையாட்டை அப்படியே தொடர வேண்டும்.

3. மீண்டும் தொடங்க முடியாது

ரிதமிக் ஜிம்னாஸ்டிக்ஸில் விளையாட்டு வீரர்கள் ரிப்பன்கள், வளையங்கள், கிளப்புகள் மற்றும் பந்துகள் போன்ற உபகரணங்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் விதிகள் கூறுவது என்னவென்றால், இந்த பொருட்களில் ஒன்று கூரையில் சிக்கிக்கொண்டாலோ அல்லது உடைந்தாலோ கூட மீண்டும் முதலில் இருந்து தொடங்காமல், ஜிம்னாஸ்ட் தனது விளையாட்டை தொடர வேண்டும்.

உபகரணங்களை இழந்ததற்காக அல்லது உடைத்ததற்காக ஜிம்னாஸ்ட்களுக்கு அபராதம் விதிக்கப்படாது. ஆனால் முழு புள்ளிகளை பெறுவது கடினம்.

செயல்திறன் மற்றும் ஏதேனும் தொழில்நுட்ப பிழைகள் உள்ளதா என்று நீதிபதிகள் மதிப்பாய்வு செய்வார்கள். ஜிம்னாஸ்ட்கள் விளையாடும் மைதானத்தைச் சுற்றி வைக்கப்பட்டுள்ள கூடுதல் உபகரணங்களைப் பயன்படுத்தி தங்கள் ஆட்டத்தை தொடரலாம்.

ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கான அசாதாரணமான விதிமுறைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரஷ்ய வீரர்களுடன் சண்டையின் போது காயமடைந்த ஹங்கேரிய வாட்டர் போலோ வீரர் எர்வின் சடோர்.

4. தண்ணீரைத் தெளித்தால் அவுட்

வாட்டர் போலோவில், எதிராளியின் முகத்தில் வேண்டுமென்றே தண்ணீரை தெறித்தால் அந்த வீரர் விளையாட்டிலிருந்து விலக்கப்படலாம். ஆனால் இந்த விளையாட்டு மிகவும் கடினமானது. எனவே இது நடுவரின் கவலைகளில் மிகவும் குறைந்த முக்கியத்துவம் கொண்டதாக இருக்கும் என்று நீங்கள் கருதலாம்.

உண்மையில், போட்டியின் பெரும்பாலான ‘கரடுமுரடான மோதல்கள்’ தண்ணீரால் மறைக்கப்பட்டாலும், விதிகள் என்ன கூறுகிறது என்றால் வீரர்கள் உதைத்தல், அடித்தல், அல்லது தீங்கிழைக்கும் நோக்கத்துடன் எதிரியை உதைப்பது அல்லது தாக்க முயற்சிப்பது உட்பட எந்தவொரு அதிகப்படியான சக்தியையும் பயன்படுத்தக்கூடாது என்பதாகும்.

இப்படி இருக்கும்போதிலும் விதிகளுக்கு எதிரான விளையாட்டு ஒருபோதும் நடக்காது என்று சொல்லமுடியாது.

1956 மெல்போர்ன் ஒலிம்பிக்கில் ஹங்கேரி மற்றும் யுஎஸ்எஸ்ஆர் (ரஷ்யா) இடையே நடந்த ஆட்டத்தில் ஐந்து வீரர்கள் குளத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

போட்டிக்கு சில வாரங்களுக்கு முன்பு, சோவியத் பீரங்கிகள் மற்றும் துருப்புக்கள் ஹங்கேரிய தலைநகர் புடாபெஸ்டுக்குள் நுழைந்தன. சோவியத் எதிர்ப்பு எழுச்சி கொடூரமாக நசுக்கப்பட்டது.

நூற்றுக்கணக்கான ஹங்கேரியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

ஹங்கேரிய வாட்டர் போலோ குழு செக்கோஸ்லோவாக்கியாவில் ஒரு பயிற்சி முகாமில் இருந்த காரணத்தால் இந்த செய்தி அவர்களை எட்டவில்லை. அவர்கள் இறுதியாக ஆஸ்திரேலியாவுக்கு வந்தபோதுதான் வன்முறையின் அளவை அறிந்துகொண்டனர்.

அரசியல் பதற்றம் வெளியே வந்த காரணத்தால் போட்டியின் போது இரு தரப்பிலிருந்தும் உதைத்தல் மற்றும் குத்துதல் போன்றவை நிகழ்ந்தன. இந்த நிகழ்விற்கு ‘பிளட் இன் த வாட்டர்’ (Blood in the water) அரையிறுதி என்ற புனைப்பெயர் கிடைத்தது.

ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கான அசாதாரணமான விதிமுறைகள்

பட மூலாதாரம், Getty Images

5. ரத்தத்தை துடைக்க கைக்குட்டை

ஒலிம்பிக் மல்யுத்த வீரர்கள் ‘ப்ளட் ட்ராக்’ என்று அழைக்கப்படும் ஒரு கைக்குட்டையை தங்கள் உடைக்குள் செருகி எடுத்துச் செல்லலாம்.

போட்டியின் போது ஏற்படும் காயங்களிலிருந்து வழியும் ரத்தத்தைத் துடைக்க அல்லது களத்தில் விழும் உடல் திரவங்களை சுத்தம் செய்ய இந்த துணி பயன்படுத்தப்படுகிறது.

ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கான அசாதாரணமான விதிமுறைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வாட்டர் போலோ விளையாட்டில் எதிராளிகளுக்கு காயம் ஏற்படுவதைத் தடுக்க, வீரர்கள் தங்கள் விரல் நகங்கள் மற்றும் கால் நகங்களை வெட்ட வேண்டும்.

6. நகங்களை சரிபார்க்க தனி அலுவலர்

உடல்நலம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக பல விளையாட்டு நிகழ்வுகளில் விளையாட்டு வீரர்கள் சிறிய நகங்களை வைத்திருக்கவே அனுமதிக்கப்படுகின்றனர்.

வாட்டர் போலோ விளையாட்டில், போட்டிகள் தொடங்கும் முன் அனைத்து வீரர்களும் விரல் நகங்கள் மற்றும் கால் நகங்களை டிரிம் செய்துள்ளார்களா என்பதை ஒரு நியமிக்கப்பட்ட நபர் சரிபார்க்கிறார்.

ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கான அசாதாரணமான விதிமுறைகள்

பட மூலாதாரம், Getty Images

7. என்னென்ன ஆடைகளை அணியலாம்?

எல்லா விளையாட்டு நிகழ்வுகளிலும் பங்குபெறும் விளையாட்டு வீரர்கள் தாங்கள் என்ன அணியலாம் மற்றும் அணியக்கூடாது என்பதற்கான தெளிவான விவரக்குறிப்புகளைப் பெறுகின்றனர்.

பிஎம்எக்ஸ் (BMX) ரைடர்கள் (சைக்கிள் ஓட்டும் வீரர்கள்), மணிக்கட்டு வரை நீளமுள்ள தளர்வான, நீண்ட கை ஜெர்சிகளை அணிய வேண்டும்.

சைக்கிள் ஓட்டும் போட்டியின் நிர்வாகக் குழுவான ‘சர்வதேச சைக்கிளிங் யூனியன்’ விதிகளின் படி, சீருடை இடுப்பைச் சுற்றி இறுக்கமாக இருக்க வேண்டும் அல்லது பந்தயம் தொடங்கும் முன் கால்சட்டைக்குள் அது செருகப்படவேண்டும்.

பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் இம்முறை 300க்கும் மேற்பட்ட பதக்க நிகழ்வுகள் நடக்கவிருக்கின்றன. இதில் கலந்துகொள்ள சுமார் 10,500 விளையாட்டு வீரர்கள் இந்த நகரத்திற்கு வருவார்கள்.

கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26ஆம் தேதி பாரிஸில் தொடங்கும். அதைத் தொடர்ந்து பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8ஆம் தேதி முடிவடையும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)