தங்கம் விலை ஏறுமுகம்: நகைச் சீட்டால் யாருக்கு லாபம்? பழைய தங்கத்தை இப்போது விற்கலாமா?

தங்கம் விலை உயர்வு

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், கலைவாணி பன்னீர்செல்வம்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.55,000-ஐ நெருங்கியுள்ளது. தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இதனால் தங்கம் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இது, தங்கத்தின் மீது முதலீடு செய்ய விரும்பும் சாமானியர்களின் விருப்பத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய நாட்டில் வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் சட்டப்படி குற்றம் என்றாலும் திருமணங்களில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. மணப் பெண்ணுக்கு அவரவர் வசதி வாய்ப்புகளுக்கு ஏற்ப தங்க ஆபரணங்களை சூடி அனுப்புவது வழக்கமாகவே இருந்து வருகிறது.

வரதட்சணை காரணமாக மாப்பிள்ளை வீட்டார் கேட்கும் அளவு தங்க நகைகளை கொடுக்க முடியவில்லை என்பதால் திருமணம் நடக்காமல் தள்ளிப்போன சில சம்பவங்களும் உண்டு.

ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார அளவீட்டு மானியாக அந்த நாட்டின் தங்க கையிருப்பு எப்படி பார்க்கப்படுகிறதோ, சமூகத்திலும் அப்படி ஒரு பார்வை உள்ளது.

ஒவ்வொரு குடும்பத்தின் தங்கம் அல்லது அவர்கள் தங்களது குழந்தைகளின் எதிர்காலத்துக்கு என சேமிப்பாகவும் முதலீடாகவும் மாற்றி இருக்கும் தங்கத்தின் அளவைப் பொறுத்தே சில சமயங்களில் அவர்களின் அந்தஸ்து சமூகத்தில் நிர்ணயிக்கப்படுவதாக தெரிகிறது.

தங்கம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சமீப காலமாக தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது.

சாமானியர்களின் மனநிலை

தங்கத்தின் விலை ஏற்றம் தனது வாழ்வில் மிகப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறினார் திருப்பூர் தென்னம்பாளையத்தில் வசிக்கும் ஒற்றை தாயான ஜோதி.

"எனக்கு கல்லூரி பயிலும் இரு மகள்கள் உள்ளனர். சமீபத்தில் எனது கணவர் இறந்து விட்டார். நான் கதர் கடையில் விற்பனை பணி செய்து கொண்டிருக்கிறேன். அன்றாட செலவுகளுக்கு திண்டாடும் நிலையில் கஷ்டப்பட்டாவது படிக்க வைத்து விட வேண்டும் என்று கிடைக்கும் வேலைகளை செய்துஅவர்களை படிக்க வைத்து வருகிறேன்."

"படிப்பை முடித்து எனது மகள்கள் பணிக்கு சென்றாலும் கூட, உரிய காலத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டிய சூழல் உள்ளது. நகை விற்கும் விலைக்கு தற்போது இரு மகள்களுக்கும் போதிய நகைகளை எடுத்து திருமணம் செய்து கொடுத்து அனுப்ப வேண்டும் என்பது மிக மிக சவாலாக மாறிவிட்டது."

"பெண் குழந்தைகள் பிறந்த போது ஆள் ஒன்றுக்கு ஆண்டுக்கு ஒரு சவரன் ஆவது எடுத்து வைக்க வேண்டும் என நினைத்தோம். பல்வேறு குடும்ப சூழலால் அது முடியாமலே போய்விட்டது."

தங்கம்
படக்குறிப்பு, திருப்பூரை சேர்ந்த ஜோதி

"எப்படியும் நகை சேர்த்து திருமணம் செய்து விடலாம் என நினைத்திருக்கும் நேரத்தில் தங்கத்தின் விலை விறுவிறுவென ஏறிக் கொண்டிருக்கிறது. இப்போதைய நிலைமையில் ஒரு ஆண்டுக்கு ஓரிரு கிராம் நகை சேர்த்து வைப்பதே சிரமமாக இருக்கும் போது எப்படி இரு மகள்களுக்கும் திருமணம் செய்து அனுப்புவது என்பதை நினைக்கையில் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது." என்றார்.

ஜோதியை போலவே சென்னையைச் சேர்ந்த அப்பாவு என்பவரும் நகைவிலை உயர்வால் அதிர்ச்சியில் இருக்கிறார்.

வீட்டில் சிறிது சிறிதாக நகை சேர்த்து வைக்க வேண்டும் என்று சொல்லும்போதே கேட்டிருக்க வேண்டும் அது தற்போது தான் புரிகிறது என்றார் சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த அப்பாவு.

தங்கம்
படக்குறிப்பு, சென்னையை சேர்ந்த அப்பாவு

தங்கத்தின் விலையேற்றம் பற்றி பிபிசி தமிழிடம் பேசிய அவர்,

"முதல் மகளுக்கு நடந்த திருமணத்தை விட இரண்டாவது மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் போது 20 லட்சம் ரூபாய் அதிகம் தேவைப்படுகிறது. மூத்த மகளுக்கு 30 பவுன் நகை போட்டோம் என்றால் இளைய மகளுக்கு இருபதோடு நிறுத்திவிட்டால் தவறாகி விடுமோ, பிள்ளைகளுக்குள் பாரபட்சம் காட்டுவதாக நினைத்து விடுவார்களோ என்ற அச்சம் தோன்றுகிறது. நகை குறைத்து போட்டால் ஒருவேளை நல்ல மாப்பிள்ளை கிடைக்க மாட்டார்களோ என்ற எண்ணம் கூட வந்து விடுகிறது."

"பெண் பிள்ளைகளை பெற்றிருப்பதால் அரை சவரன் ஒரு சவரன் நாணயங்களையாவது வாங்கி வைத்து விடு என்று என் வீட்டில் அடிக்கடி சொன்னார்கள். ஆனால் நான் தான் தேய்மானம் ஆகிவிடும் என்ற காரணத்திற்காக அவர்கள் பேச்சை தட்டிக் கழித்து விட்டேன். தற்போது தங்கம் விலை விறுவிறுவென ஏறிக் கொண்டிருப்பதை பார்க்கும்போது அவர்கள் பேச்சைக் கேட்டு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்." என்று கூறினார்.

தங்கம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தங்கம் ஒரு சமூகத்தின் அங்கமாக பார்க்கப்படாத வட அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளிலும் மக்கள் இந்த உலோகத்தை வாங்கி கையிருப்பு வைப்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தங்கத்தின் விலை திடீரென அதிகரிப்பது ஏன்?

இந்தியாவில் திருமணம் மட்டுமின்றி சீர்வரிசையாகவும், மொய்யாகவும் தங்கம் பரிசளிக்கப்படுகிறது. பொங்கல் சீர், ஆடி சீர், தீபாவளி சீர், வளைகாப்பு, பிள்ளை பேறு, காதுகுத்து போன்ற பல விசேஷங்களுக்கும் தங்கத்தை பரிசளிப்பது வாடிக்கையாக உள்ளது.

ஆனால் தங்கம் ஒரு சமூகத்தின் அங்கமாக பார்க்கப்படாத வட அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளிலும் மக்கள் இந்த உலோகத்தை வாங்கி கையிருப்பு வைப்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதற்கு, முதலீட்டு வாய்ப்பாக பங்குச் சந்தைகளை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அங்கு சற்று அபாயம் இருப்பதாக தெரியவே, கிட்டத்தட்ட 50-60 ஆண்டுகளாக ஏற்றத்தை மட்டுமே கண்டு வரும் சிறந்த நீண்ட கால முதலீட்டு வாய்ப்பான தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர்.

எனவே தான் தங்கத்தின் தேவை அதிகரித்து தற்போது விலையும் அதிகரித்து வருகிறது என்கிறார் முதலீட்டு ஆலோசகர் சதீஷ்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "சர்வதேச பங்குச்சந்தை, போர் அபாயங்கள், இந்திய நாணய மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு என பல்வேறு காரணங்கள் தங்கத்தின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது." என்றார்.

"இப்போது, பொருளாதார நிச்சயமற்ற தன்மை நிலவுவதால், தங்கம் ரிஸ்க் என்ற அபாயமற்ற முதலீட்டு வாய்ப்பாக மக்களால் விரும்பப்படுகிறது. பல முதலீட்டாளர்கள் சந்தை உறுதியற்ற காலங்களில் தங்கத்தை நோக்கி திரும்புகின்றனர்."

"பொருளாதாரம் மற்றும் இந்திய ரூபாயின் மீதான நம்பிக்கை அதிகமாக இருக்கும்போது, ​​பங்குகளில் முதலீடுகள் அதிகரிக்கும். இது தேவையைக் குறைத்து விலை குறைவதற்கும் வழிவகுக்கிறது."

"ரூபாய் மதிப்பு சரிவு அல்லது பொருளாதார ஸ்திரமின்மையின் போது, ​​மக்கள் பணவீக்கத்திலிருந்து தங்கள் செல்வத்தைப் பாதுகாக்கும் ஒரு வழிமுறையாக தங்கத்தை அடிக்கடி பயன்படுத்துகின்றனர். தங்கத்திற்கான இந்த அதிகரித்த தேவை அதன் விலையை உயர்த்தலாம், இதன் விளைவாக விற்பனையின் போது அதிக வருமானம் கிடைக்கும்."

"மற்ற நாணயங்களுக்கு எதிராக அவ்வப்போது தேய்மானம் இருந்தாலும், நாணயத்தின் முக்கியத்துவம் மற்றும் ஸ்திரத்தன்மை காரணமாக இந்திய ரூபாயைப் பயன்படுத்தி தங்கத்தில் முதலீடு செய்வது சாதகமானது என்று கூறுகிறார் சதீஷ். "

"குறைந்த அளவிலான ஆபத்தை ஏற்க விரும்புவோருக்கு, தங்க சொத்துக்களை பணமாக மாற்றுவது மற்றும் பங்குகளில் முதலீடு செய்வது ஒரு சாத்தியமான உத்தியாக இருக்கும்." என்றும் கூறினார்.

தங்கம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மக்கள் மாதாமாதம் சிறு சேமிப்பாக அங்கீகரிக்கப்பட்ட நகைக்கடைகளில் நடத்தப்படும் நகைச் சீட்டுகளில் சேர்ந்து பயன்பெறலாம்.

நகைச்சீட்டால் யாருக்கு லாபம்?

தங்கத்தை ஆபரணமாக வாங்கி பயன்படுத்த வேண்டும் என நினைப்பவர்கள், மாதாமாதம் சிறு சேமிப்பாக அங்கீகரிக்கப்பட்ட நகைக்கடைகளில் நடத்தப்படும் நகைச் சீட்டுகளில் சேர்ந்து பயன்பெறலாம்.

தற்போதைக்கு தங்கம் விற்கும் விலைக்கு மிகப்பெரிய தொகையை சேமித்து வைத்திருந்தால் மட்டுமே அதை தான் நகையாக மாற்ற முடியும். இல்லாத பட்சத்தில் ஒரு பெரும் தொகையை சேமிப்பதற்குள் வேறு பெரும் செலவுகள் அல்லது தொழிலில் முதலீடு செய்து எடுத்து விடலாம் என்று நம்பிக்கையில் நிதியை சுழற்சியில் விட வாய்ப்பு உண்டு.

தங்கம் விலை உயர்வு
படக்குறிப்பு, சதீஷ், முதலீட்டு ஆலோசகர்

பழைய தங்கத்தை இப்போது விற்கலாமா?

தங்கத்தின் விலை தற்போது உச்சத்தை எட்டி உள்ள நிலையில் பழைய தங்கத்தை தற்போது விற்கலாமா இது லாபம் தருமா என்று சதீஷிடம் கேள்வி எழுப்பியது பிபிசி தமிழ்.

இதற்கு பதில் அளித்த அவர், தங்கத்தை விற்பதற்கு தங்கம்-வெள்ளி விகிதம் அதன் அதிகபட்ச புள்ளியை அடைவது சரியான காலமாக இருக்கலாம் என்றார்.

"தங்கம்-வெள்ளி விகிதம் உச்சத்தில் இருக்கும்போது, ​​வருமானத்தை அதிகரிக்க தங்கத்தை விற்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, 1991 இல், இந்த விகிதம் 100:1 ஐ எட்டியது, வெள்ளி விலைகள் மிகக் குறைந்த அளவில் இருந்தது. இதன் பொருள் 100 அவுன்ஸ் வெள்ளியை ஒரு அவுன்ஸ் தங்கத்திற்கு மாற்றலாம்."

"இதையடுத்து, வெள்ளியின் விலை அதிகரித்ததால், 100 அவுன்ஸ் வெள்ளியின் மதிப்பு, ஒரு அவுன்ஸ் தங்கத்தை விட உயர்ந்தது. அத்தகைய காலங்களில் தங்கத்திற்கும் வெள்ளிக்கும் இடையிலான உறவை முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் குறிப்பிடத்தக்க லாபத்தை அடைய முடியும். வரலாற்று ரீதியாக, இந்த விகிதம் 90:1 முதல் 10:1 வரை பரவலாக மாறுபடுகிறது." என்றார்.

தங்கம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தங்கத்தின் எதிர்கால மதிப்பைக் கணிப்பது சவாலானது என்கிறார் சதிஷ்.

இனி குறையுமா? அதிகரிக்குமா?

தங்கச் சந்தை உட்பட நிதிச் சந்தைகளின் நிலையற்ற தன்மை உள்பட பல காரணிகளால் தங்கத்தின் எதிர்கால மதிப்பைக் கணிப்பது சவாலானது என்றார் சதிஷ்.

"சில வல்லுநர்கள் தங்கத்தின் விலையில் நீண்ட காலக் குறைவை எதிர்பார்ப்பார்கள். அதே வேளையில், ஆய்வாளர்களின் கணிப்புகள் பிழைக்கு உட்பட்டவைதான் என்பதையும் மறுக்க முடியாது. கடந்த காலப் போக்குகளை வைத்து, எதிர்கால கணித்தலும் சிரமம். வரும் ஆறு மாத காலத்திற்கு அல்லது 2025 வரை தங்கத்தின் விலை உயரவும் வாய்ப்பிருக்கலாம்."

"முதலீட்டாளர்களின் தேவை, தங்கத்தின் மதிப்பு பற்றிய உணர்வுகள் மற்றும் கிரிப்டோகரன்சிகள் போன்ற பிற சொத்துக்களிலிருந்து போட்டி போன்ற காரணிகள் தங்கத்தின் விலையை பாதிக்கலாம். முதலீட்டாளர்கள் தங்கள் போர்ட்ஃபோலியோக்களை வேறுபடுத்த முற்படுவதால், தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். கூடுதலாக, மத்திய வங்கிகளின் ஊக்கத் திட்டங்கள் நிறுத்தப்படுவதும் கூட தங்கத்தின் விலையை பாதிக்கலாம்." என்றார்.

தங்கம் விலை உயர்வு

பட மூலாதாரம், Getty Images

தங்கத்தை எப்போது விற்க வேண்டும்?

"தங்க சந்தையின் கணிக்க முடியாத தன்மை காரணமாக தங்கத்தை விற்க சரியான நேரத்தை தீர்மானிப்பது சவாலானது. தங்க முதலீடுகளின் உண்மையான லாபத்திற்கு நீண்ட காலத்திற்கு பொறுமை தேவை. எடுத்துக்காட்டாக, நிதி நெருக்கடியைத் தொடர்ந்து 2 ஆண்டுகளில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்தது."

"தொற்றுநோய்களின் போது, ​​​​தங்கம் சாதனை அளவை எட்டியது. மேலும் பணவீக்க கவலைகள், மத்திய வங்கியின் பதில்கள் காரணமாக மேலும் அதிகரித்தன. சந்தை விலைகளை கண்காணிப்பது தங்க முதலீடுகளின் மதிப்பை அதிகரிக்க உதவும்." எனக் கூறினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)